உத்வேகத்தின் ஊற்றுக்கண்வாசகர் கடிதம்

கட்டடக்கலைப் பட்டப்படிப்பின் சிறப்பு, நுணுக்கம் போன்றவற்றையும், கட்டடக்கலைப் படிப்புக்கான திறனறி தேர்வு பற்றியும் விவரமான கட்டுரை கொடுத்தமைக்கு நன்றி. தேவையான கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டம் என NATA 2020 திறனறி தேர்வு குறித்து விரிவாக விளக்கியிருக்கும் கட்டுரை அற்புதம்.
  -வி.கணேசன், காஞ்சிபுரம்.

சிறப்புக் குழந்தைகளுக்கென சிறப்புப் பயிற்சி அளித்துவரும் வானதி சுப்ரமணியனுக்கு மனமார்ந்த பாராட்டுகள். சிறப்புக் குழந்தைகளுக்கென தனிப் பள்ளி அமைத்து செயல்படும் இவரின் பங்களிப்பு போற்றத்தக்கது. அதேபோல் அரசுப் பள்ளி மாணவி திருக்குறள் ஒப்புவித்து உலக சாதனை படைக்க வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் ஜெயமேரியின் செயல் பாராட்டுதலுக்குரியது. தன்னலமற்ற சேவகர்களை உலகுக்குக் காட்டும் குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டியின் பணி சிறப்பு.
-ஏ.மீனாகுமாரி, விழுப்புரம்.  

முயற்சியால் வென்றவர்கள் வரிசையில் சாந்தி‘ஸ் புரூச்சர்ஸ் நிறுவன உரிமையாளர் பற்றிய தகவல்கள் தன்னம்பிக்கையூட்டுபவை. பியூட்டி பார்லர் ஊழியர் தொழில்முனைவோராகி பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியிருப்பது வாழ்த்தி வரவேற்கத்தக்கது.
  -ஆர்.ராஜகுமாரன்,கோயம்புத்தூர்.       

இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமான ‘புதிதாய்ப் பிறப்போம் சரித்திரம் படைப்போம்’ தொடரில் ‘உழைப்பது உண்மையானால் வெற்றி வசப்படும்’ என்ற தலைப்பே அருமை. கட்டுரையின் ஒவ்வொரு வரியும் உத்வேகத்தின் ஊற்றுக்கண் என்றுதான் சொல்லவேண்டும். தடைகளைக் கடந்து தடம் படைத்தவர்களை முன்னுதாரணமாக்குவது சூப்பர்.
  -இ.முகமது யூசுப், ராமநாதபுரம்.