பொற்காலம் பாடகர் கிருஷ்ணராஜ்



டைட்டில்ஸ் டாக்-133

சினிமாவைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலகட்டங்களும் பொற்காலம்தான். எனக்கு சொந்த ஊர் சேலம் அருகில் உள்ள வேம்படிதாளம். நான் அந்தக்கால  எஸ்.எஸ்.எல்.சி. நெசவாளர்  குடும்பத்தைச் சேர்ந்தவன். கைத்தறி, விசைத்தறி வைத்திருந்தோம். விசைத்தறி பத்து வருடம் ஓட்டியிருக்கிறேன். விசைத்தறி நிறுவனத்தில் வேலை செய்யும்போதுதான் எனக்குள் பாடகன் இருப்பதைக் கண்டு கொள்ளமுடிந்தது.

‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது’ என்ற பழமொழிக்கு ஏற்ப சக தொழிலாளர்கள் மகிழும் வகையில் பாடிக்கொண்டே வேலை செய்வேன். குறிப்பாக டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் பாடல்களைப் பாடுவேன். ஏன்னா, அவர்கள் பாடல்கள் நீண்ட தூரத்துக்கு கேட்குமளவுக்கு கம்பீரமாக இருக்கும். நானும் இயந்திர சத்தத்துக்கு நடுவில் பாடவேண்டும் என்பதால் அவர்களுடைய பாடல்களைப் பாடுவேன்.

ஒரு கட்டத்தில் நாடகத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்துக்கு இசையமைக்க வந்த இசைக்குழு என்னுடைய பாட்டுத் திறனைக் கண்டு வியந்ததோடு அவர்கள் இசைக்குழுவில் என்னையும் அங்கத்தினராக சேர்த்துக்கொண்டார்கள். அப்படித்தான் என்னுடைய இசைப் பயணம் ஆரம்பித்தது.

1979ல் என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. அந்த வருடம் ஏற்காடு மலர்க் கண்காட்சியில் லைட் மியூசிக் காம்பிடிஷன் நடந்தது. இசையமைப்பாளர் வி.குமார் நடுவராகக் கலந்துகொண்டார். அந்தப் போட்டியில் எங்கள் குழுவுக்கு முதல் பரிசு கிடைத்தது. பாடகராகவும்  எனக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இசைக் கல்லூரியில் படித்த நண்பர் ஒருவர் என்னுடைய இசை ஆர்வத்தைப் பார்த்துவிட்டு சென்னை இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கச் சொல்லி ஐடியா கொடுத்தார். அவருடைய ஆலோசனையின் பேரில் இசைக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு மூன்று ஆண்டுகள் படித்தேன். டி.என்.கிருஷ்ணன் முதல்வர்.  தமிழகத்தின் சிறந்த வித்வான்கள் எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார்கள்.

ஆர்.வேதவல்லி, வி.ஆர்.கிருஷ்ணன், வி.கிருஷ்ணமூர்த்தி, பாலக்காடு கே.வி.நாராயணசாமி ஆகியோர் எனக்கு இசை கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள்தான் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்த குருநாதர்கள். கல்லூரியில் படிக்கும்போது ‘சங்கீத வித்வான்’ என்ற பட்டம் கொடுத்தார்கள்.

நான் படிக்கும்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தார். அவருடைய பொற்கரங்களால் பட்டம் வாங்கியதையும் சிறந்த மாணவனுக்கான தங்க மெடல் வாங்கியதையும் மறக்க முடியாது.கல்லூரியைவிட்டு வெளியே வந்தபிறகு கர்நாடக ஆசிரியராக வர நினைத்தேன். அது நடக்கவில்லை. பிறகு பக்தி ஆல்பங்களுக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவிலும் வாய்ப்பு தேடினேன்.

ஒரு கட்டத்தில் தேவா அண்ணன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் தொடர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தபோதுதான் என்னுடைய பொற்காலம் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் தேவா அண்ணன் இசையமைத்த பிரபல படங்களுக்கு ஏராளமான டிராக் பாடினேன்.  பிறகு பின்னணி பாடும் வாய்ப்பு கிடைத்தது.‘காதல் கோட்டை’யில் இடம்பெற்ற ‘வெள்ளரிக்காய்’ பாடல் என்னை பாடகராக மக்கள் மத்தியில் கொண்டு போய்ச் சேர்த்தது. ‘பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து ’ பாடல் என்னை உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தது. உலகெங்கிலும் அந்தப் பாடலுக்கு வரவேற்பு கிடைத்தது.

இதில் நெகிழ்ச்சியான சம்பவம் என்னவென்றால், மறைந்த சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் ஐயாவுக்கு ‘தஞ்சாவூரு  மண்ணு எடுத்து’ பாடல் மிகவும் பிடிக்கும். அவர் ஆட்சியில் இருந்தபோது அவருடைய அதிகாரபூர்வ இல்லத்தில் அவர் முன்னிலையில் அந்தப் பாடலைப் பாடியது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.

இன்னொரு நெகிழ்ச்சி என்னவென்றால், ஒருமுறை வைரமுத்து ஐயா சிங்கப்பூர் சென்றிருந்தபோது நண்பர் ஒருவருடன் இணைந்து விமான நிலைய வெளிவட்டச் சாலையில் நடைப்பயிற்சி சென்றாராம். அப்போது அவர் எதிரே வயது முதிர்ந்த தோற்றமுள்ள ஒருவர் உதவியாளருடன் வந்து கொண்டிருந்தாராம். அந்த முதியவர், வைரமுத்து ஐயா அருகில் வந்ததும், ‘நீங்கள் வைரமுத்துதானே...

நீங்கள் எழுதிய பாடல்களிலேயே ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’  பாடல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பாடல் ஏன் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றால் நாங்கள் வெகுநாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் வந்து செட்டிலாகிவிட்டோம். என்னுடைய பூர்வீகம் தமிழ்நாடு என்று தெரியும். ஆனால் எந்த ஊர் என்று தெரியாது.

உங்கள் பாடலைக் கேட்கும்போது இந்த ஊராக இருக்குமா, அந்த ஊராக இருக்குமா என்று மனதில் சொல்லிச் சொல்லி பரவமடைவேன்’ என்று பாராட்டு தெரிவித்துவிட்டு நகர்ந்துள்ளார். உடனே வைரமுத்து ஐயா பக்கத்தில் இருந்தவரிடம் ‘யார் இவர்’ என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நண்பர் ‘அவர்தான் சிங்கப்பூர் ஜனாதிபதி’ என்றதும் வைரமுத்து ஐயாவும் நெகிழ்ந்து போனாராம்.

ஆண்டுகள் கடக்கிறது. எஸ்.ஆர்.நாதன் ஐயா மறைகிறார். அவருடைய இறுதி ஊர்வலத்துக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இறுதி ஊர்வலம் புறப்படும் சமயத்தில் ஒலிபெருக்கியில் ஒரு அறிவிப்பு வருகிறது. நாதன் ஐயாவுக்குப் பிடித்த பாடலை இப்போது ஒலிபரப்பவுள்ளோம். பாடல் ஒலித்தபிறகு ஊர்வலம் புறப்படும் என்பதுதான் அந்தத் தகவல்.

அப்போது ஒலித்த பாடல் ‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ என்று கேள்விப்பட்டதும் புளகாங்கிதம் அடைந்தேன். இந்த்த் தகவல் சமீபத்தில்தான் என்னை வந்து எட்டியது. வைரமுத்து ஐயா குரலில் வந்துள்ள அந்த ஆடியோவில் பாடகராகிய எனக்கும் இயக்குநர் சேரனுக்கும் வைரமுத்து ஐயா தன்னுடைய குரலில் பாராட்டு தெரிவித்திருந்தது என்னை மேலும் உற்சாகம் கொள்ளவைத்தது.

‘தஞ்சாவூரு மண்ணு எடுத்து’ பாடலுக்கு அப்போதைய  முதல்வர் கலைஞர் ஐயா கரங்களால் சிறந்த பாடலுக்கான விருது பெற்றதும் மறக்க முடியாதது. இதுவரை சுமார் 200 பாடல்கள் பாடியிருப்பேன். அப்போது எல்லாமே லைவ் ரிக்கார்டிங்தான் நடக்கும். அது ஒரு பொற்காலம். சில வருடங்களுக்கு முன் கிறிஸ்தவ பாடல்கள் பாட ஆரம்பித்தேன். கிறிஸ்தவ பக்திப் பாடல்களைப் பாடுவதில் எனக்கு முன்னுரிமை கொடுத்ததையும் மறக்க முடியாது. சமீபத்தில் தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்தார்கள்.

இசையைப் பொறுத்தவரை எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்தந்த காலக்கட்டங்களில் உள்ள ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி பாடல்கள் அமையும்.
இப்போது எனக்கு முன்பு இருந்தளவுக்கு ரிக்கார்டிங் இருப்பதில்லை. அதை வைத்து பாடகர்களுக்கு பின்னடைவு என்று சொல்லமுடியாது. அந்தந்த காலக்கட்டத்தில் அவரவர் பிஸியாக இருக்கிறார்கள்.

அப்படி நானும் ஒரு காலத்தில் பிஸியாக இருந்தேன். புதியவர்களுக்கு வழிவிட வேண்டும். இங்கு யாரையும் வெறுப்பாகப் பார்க்கவேண்டிய அவசியமில்லை.இது ஃபாஸ்ட் புட் காலம். ஃபுட்டும் ஃபாஸ்ட். பாடல்களும் ஃபாஸ்ட். குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆதலால் எல்லாக் காலமும் பொற்காலமே!

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)