காட்டுக்குள்ளே கலாட்டா!சமீபத்தில் வெளிவந்த ‘100’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் பிரவீன். இவர் தற்போது நாயகனாக புரோமோஷன் வாங்கி நடிக்கும் படம் ‘டிரிப்’. இதன் நாயகி சுனைனா. இதில் முக்கிய வேடங்களில் யோகி பாபு , கருணாகரன் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை டென்னிஸ் இயக்குகிறார். அவரிடம் படத்தைப் பற்றிக் கேட்டோம்.

‘‘இந்தப்படத்தின் கதை ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்கிறார்கள்.

அப்போது இடையில் குறுக்கிடும் 5 பையன்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் கும்பல் என இந்த இரண்டு குழுவுக்குமிடையே ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டதே இந்தப் படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் டார்க் காமெடியில் உருவாக்கியுள்ளோம்.

சுனைனாவின் கதாபாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இந்தப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவாலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தில் முன்னணி ஹீரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம்.

ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹீரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையைக் கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது’’ என்றார்.

இந்தப் படத்தில் நடிக்கும் அனுபவத்தைப் பற்றி சுனைனாவிடமும் கேட்டோம்.‘‘இந்தப் படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை. அதை இயக்குநர் டென்னிஸ் சொன்ன விதம் படத்திற்குள் பயணம் செய்தது போலவே இருந்தது.

அவர் சொல்லிய அந்தப் பயணத்தில் இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மற்ற கதாபாத்திரங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். கதையின் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.

அனுபவம் வாய்ந்த நடிகர், புதிய நடிகர் என்பதெல்லாம் சினிமாவில் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன் தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பைத் தந்தார். அவர் இந்தப்படத்துக்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார்’’ என்றார்.

- சுரா