திட்டம் போட்டு திருடுற கூட்டம்திட்டம் போட்டு சிரிக்க வைக்கிறார்கள்!

சாப்ட்வேர் துறையில் வேலை செய்யும் கயல் சந்திரன் பழைய பொருட்களை எங்கு பார்த்தாலும் திட்டம் போட்டுத் திருடுவதில் கில்லாடி. அவருக்கு பழைய பொருட்களை விற்பனை செய்யும் சாத்னா டைட்டஸ், காவலர் சாம்ஸ், டூப்ளிகேட் சாவி மேக்கர் டேனியல் ஆனி போப் உடந்தை. இந்த டீமுக்கு மூளையாக செயல்படக்கூடிய சூப்பர் பாஸ் பார்த்திபன். இந்த திருட்டுக் கும்பல் ஒரு மிகப் பெரிய சம்பவம் பண்ணிவிட்டு வாழ்க்கையில் செட்டிலாக திட்டம் போடுகிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் மிகப் பெரிய மல்டி மில்லியனர் ஒருவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். கிரிக்கெட் தொடர்பான எந்த பொருட்கள் எங்கு  கிடைத்தாலும் அதை எந்த விலையும் கொடுத்து வாங்கி தன்னுடைய வீட்டு அருங்காட்சியகத்தில் வைத்துவிடுவார்.

அவருக்கு உலகக் கோப்பை கேடயத்தை தன் அருங்காட்சியகத்தில் வைத்து அழுகு பார்க்க வேண்டும் என்று மிகப் பெரிய ஆசை. கேடயம் கொண்டு
வருபவர்களுக்கு கோடிகளில் சன்மானம் தருவதற்கு தயாராய் இருக்கிறார். அந்த சமயத்தில் கேடயத்தை ஒப்படைக்கும் பொறுப்பு கயல் சந்திரன் டீமுக்கு கிடைக்கிறது.

அதன்படி, சென்னையில் நடக்கும் உலகக் கோப்பை பந்தய கேடயத்தை திருட திட்டம் போடுகிறார்கள். கயவர்களின் திட்டம் வெற்றியா, தோல்வியா என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்வதுதான் இந்த ‘திட்டம் போட்டு திருடும் கூட்டம்’.கயல் சந்திரனுக்கு திறமையை வெளிப்படுத்துமளவுக்கு அருமையான படம் கிடைத்திருக்கிறது. அவரும் அதை சரியாகப் பயன்படுத்தியுள்ளார். காமெடியிலும் மிரட்டியிருக்கிறார். சாத்னா டைட்டஸ் வசீகரிக்கிறார்.

சாம்ஸ் காமெடியில் மிரட்டி யிருக்கிறார். காவலர்களிடம் அடிவாங்கும் காட்சி செம ரகளை. டேனியல் ஆனி போப் பேசிப் பேசியே கடுப்பேற்று
கிறார். பார்த்திபன் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. நக்கல், நையாண்டியில் தெறிக்கவிடுகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் அடிக்கும் டுவிஸ்ட் செம!

உலகக் கோப்பை போட்டி யில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அஷ்வத்தின் இசையும் மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவும் ஜஸ்ட் பாஸ் எனுமளவுக்கு இருக்கிறது. டூயட் இல்லாதது படத்தின் சிறப்பு.

காமெடி என்ற பெயரில் தூய தமிழில் பேசுவதை கிண்டல் பண்ணியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஜனக்கூட்டம் மத்தியில் கேடயத்தைத் திருடும் முயற்சி விளையாட்டாகத் தெரிந்தாலும் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.

திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ரசிகர்களின் மனதை திட்டம் போட்டு திருடியிருக்கலாம்.ஒன்லி காமெடி, நோ லாஜிக் என்ற பாலிசியில் படம் பண்ணியிருப்பதால் படம் முழுக்க சிரிக்க வைக்கும் முயற்சியில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் சுதர்.