ஆபாசமா? ‘பேச்சிலர்’ டைரக்டர் அலறல்!ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் கொடுத்து வந்தாலும், அந்தப்படங்களின் மாறுபட்ட கதைக் களங்களில் அவரது வேறுபட்ட நடிப்பு மூலம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறார்.
சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த ஜி.வி.பிரகாஷ், அடுத்து நடிக்கும் ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் நடிப்பின் புதிய பரிமாணத்தைத் தொடத் தயாராகியிருக்கிறார்.

இந்தப் படத்தை ‘ராட்சசன்’ படத்தைத் தயாரித்த ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சதீஷ் செல்வகுமார் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். முதல் கட்ட படப்பிடிப்புக்கான பரபரப்பில் இருந்தவரிடம் பேசினோம்.

“ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சமூக வலைத்தளங்களில் எதிர் மறையாக விமர்சனம் வந்துள்ளதே?”

“ஆமாங்க. ‘பேச்சிலர்’ போஸ்டரில் எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை. இந்தப் படத்தில் தனிப்பட்ட ஒரு ஜோடியின் வாழ்க்கையைச் சொல்லியிருக்கிறேன். பர்சனல் கதை என்பதால் அங்கு அன்பு இருக்கும். அன்பு மிகுதியால் ஒரு கணவனும் மனைவியும் வீட்டில் எப்படி இருப்பார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். விமர்சனம் பண்ணும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. தலையைக் கோதிவிடும் அந்தக் காட்சியை ஏன் ஆபாசமாகப் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. தொடைப் பக்கத்தில் படுக்கக்கூடாது என்றால் எப்படி? அப்படி என்றால் பெண்ணின் தொடையைத் தவறாகப் பார்க்கிறோமோ என்ற அச்சம் இருக்கிறது.

வீட்டில் கணவன் மனைவிக்கிடையே கெஞ்சல், கொஞ்சல் இருக்கத்தான் செய்யும். மனைவியிடம் இங்கு படுக்கலாமா என்று கேட்பது அந்நியமாகத் தெரியும். அப்பா- மகள் ரிலேஷன்ஷிப்பை தப்பாகச் சொல்லமுடியாது. அதுமாதிரிதான் இதில் காண்பித்துள்ளேன். போஸ்டர் வெளியானவுடன் நிறையப் பெண்கள் எனக்கு போன் பண்ணினார்கள். ஜி.வி.அழகாக இருக்கிறார். அவர் கண்கள் ஏதோ ஒரு கதையைச் சொல்கிறது என்று நேர்மறையாகச் சொன்னார்கள்.

அந்த போஸ்டரில் அன்பு இருக்கிறதா என்பதை அறியும் தேடல் இருக்கும். இது அன்பின் வேறு ஒரு பரிமாணம். அந்த
வகையில் வன்முறையாகப் பார்க்கக் கூடாது என்பது என்னுடைய கருத்து. இந்த விஷயத்தில் ஒருவேளை பார்வையாளர்களின் கருத்தும் ரசனையும் வித்தி யாசப்படலாம்.  போஸ்டரை இரண்டு நிமிடம் உற்றுப் பார்த்தால் என்ன தப்பு இருக்கிறது என்று சொல்லத் தோன்றும். ஒரு இயக்குநராக எனக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறதை உணர்ந்துள்ளேன். ஒரு போஸ்டர் வெளியிடும்போது 500 முறையாவது பார்த்த பிறகுதான் மக்கள் பார்வைக்குக் கொண்டு வருகிறோம்.”

“என்ன மாதிரியான கதை?”

“இது ரொமான்டிக் டிராமா. முழுப் படமும் யதார்த்தத்துக்கு பக்கமாக இருக்கும். கோயமுத்தூரிலிருந்து பெங்களூரு வரும் இளைஞன் ஒருவன், தன் நண்பர்களின் வாழ்க்கை முறைகளால் பெரிதும் கவரப்படுகிறான். இந்த பாதிப்புகள் அவன் வாழ்க்கையை எவ்வாறு தடம் மாற்றுகின்றன என்பதுதான் படம்.

நிஜ சம்பவத்தை மையமாக வைத்து எடுப்பது கதையின் சிறப்பு. இந்தப் படத்தில் மிகப் பெரிய பேரன்பைச் சொல்லியிருக்கிறேன். ஆர்ட்டிஸ்டிக்காக, அதாவது கலை நயத்தோடு பார்க்கவேண்டிய படமாக இருக்கும்.”

“ஜி.வி.பிரகாஷ்?”

“பிரகாஷ் செம ஜாலியான கேரக்டர். கதையைப் பொறுமையாகக் கேட்டார். முதல் சந்திப்பிலேயே நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். ஒரு குறிப்பிட்ட வயதில் பையனுக்கும் இளைஞனுக்குமிடையே பருவ மாற்றம் நடக்கும். இது அந்தக் காலக்கட்டத்தில் நடக்கும் கதை. அந்தவகையில் இதில் பிரகாஷுக்கு விடலைப் பையனாக இருந்து இளைஞனாக மாறும் லுக் கொடுத்திருக்கிறோம். அவருடைய கேரக்டர் முற்றிலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். வழக்கமான பிரகாஷ் பண்ணும் சேட்டை எதுவும் இதில் இருக்காது. ரொம்ப மெச்சூரிட்டியான ரோல். இந்தப் படம் பிரகாஷுக்கு முக்கியமான படமாக அமையும். இதற்கு முன் நடித்த எந்தப் படத்திலும் அவருக்கு இப்படி ஒரு வேடம் அமைந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் பிரகாஷுக்கு இந்தப் படம் ஒரு புதிய இமேஜைக் கொடுக்கும் என்று சொல்லலாம்.”

“ஹீரோயின்?”

“திவ்யா பாரதி. கோயமுத்தூர் பொண்ணு. நாங்கள்தான் அறிமுகப்படுத்துகிறோம். இந்தக் கதைக்கு தமிழ் தெரிந்த பெண் இருந்தால் நல்லா இருக்கும் என்று யோசித்தேன். நீண்ட தேடலுக்குப் பிறகு திவ்யா கிடைத்தார்.  முக்கியமான வேடத்தில் பகவதி பெருமாள், யு டியூப் நக்கலைட்ஸ் புகழ் அருண்குமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.”

“உங்க டீம்ல வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“இசையமைக்கும் பொறுப்பையும் ஜி.வி.பிரகாஷ்குமாரே ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவு தேனி ஈஸ்வர். எடிட்டிங் சான் லோகேஷ். படத்தின் பெரும்பாலான காட்சிகளை பெங்களூரிலும், சில பகுதிகளை சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் படமாக்கவுள்ளோம்.”

“உங்க சினிமா பிரவேசம் எப்படி நடந்தது?”

“சொந்த ஊர் பொள்ளாச்சி. டிகிரி முடிச்சிருக்கிறேன். எனக்கு எந்தவித சினிமா பின்னணியும் கிடையாது. சாதாரண விவசாயக் குடும்பம். என்னுடைய அப்பா வாழ்க்கையில் சினிமா பார்த்திருப்பாரா என்பது சந்தேகமே. எனக்கு சினிமா மீது பெருங்கனவு இருந்ததால் படிச்சதும் சினிமாவுக்கு வந்துவிட்டேன். இயக்குநர் சசி சாரிடம் ‘555’, ‘பிச்சைக்காரன்’ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.

வழக்கம் போல் வாய்ப்பு தேடும் இயக்குநர்கள் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளையும் கடந்துதான் எனக்கும் முதல் பட வாய்ப்புக்கான கதவு திறக்கப்பட்டது.  தயாரிப்பாளர் டில்லிபாபு சாரிடம் கதை சொன்னதும் அவருக்குப் பிடித்திருந்தது. சார் எங்கிட்ட சொன்ன ஒரே விஷயம் ‘மூன்று மாதம் வெயிட் பண்ணமுடியுமா’ என்பதுதான். இப்போ ஷூட் ஆரம்பித்துவிட்டோம். அடுத்தமுறை ஏராளமான தகவலுடன் உங்களைச் சந்திக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா