ஆர்யா மாறிட்டாரு.. மகிமா சான்றிதழ் கொடுக்கிறார்!ஏழு ஆண்டு களுக்கு முன்பு ‘சாட்டை’ மூலமாக தமிழில் அறிமுகமாகிய மகிமா நம்பியார், படங்களை தேர்ந்தெடுத்து நடித்து, இப்போது முன்னணிக்கு வந்திருக்கிறார். ‘மகாமுனி’ அவருக்குக் கொடுத்திருப்பது கவுரவமான இடம். தொடர்ந்து ‘ஐங்கரன்’, ‘அசுரகுரு’, ‘கிட்ணா’ என்று பிஸியாக இருக்கிறார்.
“இயக்குநர் சாமியின் ‘சிந்து சமவெளி’ படம் மூலமாகவே நான் அறிமுகமாகி இருக்க வேண்டும்.

அந்த கேரக்டரில்தான் அமலாபால் நடித்தார். அப்போது கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிக் கொண்டிருந்ததால் நடிக்க முடியாமல் போய்விட்டது. தேர்வை எழுதியபிறகு ‘காரியஸ்தன்’ என்கிற மலையாளப் படத்தில் நடித்தேன். இயக்குநர் சாமியின் சிபாரிசு காரணமாகத்தான் ‘சாட்டை’ படத்துக்கு என்னை இயக்குநர் அன்பழகன் தேர்வு செய்தார்” என்று மலரும் நினைவுகளோடு பேச ஆரம்பித்தார் மகிமா.

“எப்படி நடிகை ஆனீங்க?”

“எங்க வீட்டில் யாருக்கும் சினிமா தொடர்பு கிடையாது. எந்த சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் பிறந்த எனக்கு ஏனோ சின்ன வயசுல இருந்து நடிப்பு மேல் மிகப் பெரிய ஆசையும், ஆர்வமும் இருந்தது. எப்பவுமே நாம் உண்மையா ஒரு விஷயத்தை நேசித்தால், அது எப்படியாவது ஒருநாள் நம்மை நோக்கி வரும் இல்லையா. அதுதான் என்னை நடிகையாக்கி இருக்குன்னு நினைக்கிறேன்.”

“இப்போ ‘மகாமுனி’ உங்களை வேற லெவலுக்கு கொண்டு போயிருக்கே?”

“யெஸ், யெஸ். என் வாழ்க்கையில் ரொம்ப, ரொம்ப முக்கியமான படம்னு ‘மகாமுனி’ பற்றி சொல்லலாம். ஆரம்பத்தில் எனக்கு படத்தின் கதை என்னன்னே தெரியாது. ‘மெளனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார்னு சொன்னதும், எந்த கேள்வியும் கேட்கத் தோணலை. உடனே சம்மதிச்சேன். படத்தில் படபடன்னு பேசி, சுறுசுறுப்பா இருக்கிற இளம் பெண் கேரக்டர். அதுபற்றி யோசிச்ச மறு நிமிஷம், சாந்தகுமார் ஞாபகத்துக்கு நான் வந்திருக்கேன். அவருக்கு என்னை அடையாளப்படுத்திய கடவுளுக்கு நன்றி.”

“ஆர்யாவை எப்படி சமாளிச்சீங்க?”

“இதுக்கு முன்னாடி ஆர்யா எப்படி இருந்தாருன்னு எனக்கு தெரியாது. ஆனா, என் கூட சேர்ந்து நடிக்கிறப்ப, அவருக்கு நடிகை சாயிஷா கூட கல்யாணமாகி குடும்பஸ்தனா மாறிட்டார். என்கூட சேர்ந்து நடிச்ச அதிர்ஷ்டம்தான், ஆர்யாவுக்கு மேரேஜ் ஆயிடுச்சுன்னு கிண்டலா சொல்வேன். ரொம்ப பிரெண்ட்லியான மனிதர். ஷூட்டிங்கில் என்கிட்ட அவர், ‘அப்படி நடிங்க... இப்படி நடிங்க’ன்னு எதுவும் சொல்ல மாட்டார்.

ஆனா, என் நடிப்பும் நல்லா வரணும்னு மெனக்கெடுவார். உதாரணத்துக்கு, அவர் எதிரில் நிற்கிறப்ப, எனக்கு மட்டும் கேமரா வெச்சு சஜஷன் ஷாட் எடுக்கிறப்ப, அவர் சும்மா நின்னாலே போதும். ஆனா, என் ரியாக்‌ஷன் நல்லா வரணும்னு அவரும் நடிக்க ஆரம்பிச்சுடுவார். இப்படி சக ஆர்ட்டிஸ்ட் நடிப்பும் நல்லா வரணும்னு மெனக்கெடும் நடிகர்களை இதுவரை நான் பார்த்ததில்லை.”

“அழகா இருக்கீங்க. ஆனா, உங்களைப் பத்தி கிசுகிசுவே வர்றதில்லையே?”

“ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் சரி சமமா நினைச்சு, ‘அண்ணா’ன்னு கூப்பிட்டாலே போதும், பாதி பிரச்னை முடிந்து விடும். அதுமட்டுமல்ல, எல்லாத்துக்கும் ஒரு எல்லை வெச்சுக்கணும். எந்த சூழ்நிலையிலும் அதைத் தாண்டிப் போகாம பார்த்துக்கணும். இந்த விஷயத்தை நான் ஃபாலோ பண்றதால்தான் கிசுகிசுக்களில் மாட்டிக்கிறது இல்லை.”

“அடுத்து?”

“ரவி அரசு டைரக்‌ஷனில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியா நான் நடிச்ச ‘ஐங்கரன்’ படம் விரைவில் ரிலீசாகிறது. எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி ஜனரஞ்சக படமா உருவாகி இருக்கு. விக்ரம் பிரபு கூட ‘அசுரகுரு’ படத்தில் நடிக்கிறேன். தவிர, தமிழில் இரண்டு புதுப்படத்திலும், ஒரு மலையாளப் படத்திலும் கமிட்டாகி இருக்கேன். ‘மகாமுனி’க்கு நான்தான் டப்பிங் பேசினேன். இப்ப தமிழை சரளமா பேச கத்துக்கிட்டேன். அடுத்து தமிழ் படிக்க கத்துக்கிறேன்.”

“தமிழ், மலையாளமே போதுமா?”

“போதாது. தமிழிலும், மலையாளத்திலும் நிறைய படங்கள் பண்ணியாச்சு. அடுத்து தெலுங்கு, கன்னடம், இந்தின்னு ரொம்ப தூரம் போகணும். அப்படி நடிக்கணும், இப்படி நடிக்கணும், இன்னார் கூட மட்டும்தான் நடிக்கணும்னு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

பெரிய ஸ்கிரீனில் நடிக்கணும்னு ஆசைப்பட்டுதான் சினிமாவுக்கு வந்தேன். நடிக்க வந்தேனே தவிர, இந்த மாதிரிதான் நடிக்கணும்னு நினைச்சுக்கிட்டு வரலை. அதனால், தொடர்ந்து சினிமாவில் நடிச்சுக்கிட்டு இருந்தாலே போதும். ஐ லவ் ஆக்டிங்.”

“ஐஸ்வர்யா ராஜேஷ் உங்களுக்குப் போட்டியா?”

“யாருங்க இப்படி கிளப்பி விடுறது? அவங்க அவங்களோட ரூட்டுலே நல்லா டிராவல் பண்ணுறாங்க. நான் என் ரூட்டுலே போயிக்கிட்டிருக்கேன். ‘நம்ம வீட்டுப் பிள்ளை’யில் ஐ லவ் ஐஸ்வர்யா ஆக்டிங். ஹீரோயினா நடிச்சாதான் ஸ்கோர் பண்ண முடியும் என்கிற எண்ணத்தை சுக்குநூறாக்கிட்டாங்க.

இதுவரை ஹீரோயினா மட்டுமே நடிச்சிருக்கேன். இனிமே தங்கச்சி கேரக்டரிலும் நடிப்பேன். அந்த கேரக்டர்தான் படத்தில் மெயின் கேரக்டரா இருக்கணும். அதாவது, ‘பாசமலர்’ படத்தில் சாவித்திரி மேடம் நடிச்ச கேரக்டர் மாதிரி.”

- மீரான்