க்ரீன் சிக்னல் பேய்!



தமிழ்ப் படவுலகில் திகில் மற்றும் பேய்ப் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அதைத் தொடர்ந்து இதுபோன்ற பேய்ப் படங்கள் அதிகமாக தயாராகி வருகின்றன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய டைரக்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இதை சரியாகப் புரிந்துகொண்டு புதுமுக இயக்குனர் டாக்டர் மாறன் தனது ‘பச்சை விளக்கு’ படத்தில் வித்தியாசமான பேயை வைத்துள்ளார்.

‘‘சாலை விதியைக் கடைப்பிடிக்காமல் தப்பு செய்பவர்களை இந்த பேய் எவ்வாறு தண்டிக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் ஹைலைட். இதுவரை வந்த எந்த திகில் படத்துடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத வகையில் இந்தப் படம் இருக்கும். இந்த படத்தைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி ஒப்பீடு செய்து பார்க்கும் வகையில் காட்சிகளைப் படமாக்கியுள்ளோம்.

கன்னடப் பட உலகின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான ரூபிகா, பேய்வேடத்தில் நடித்திருக்கிறார். கதாநாயகனாக நானே நடித்திருக்கிறேன். காவல்துறை சார்ந்த டிராஃபிக் வார்டனாக வர்றேன். இதுவரை இந்தியத் திரைப்படங்களில் வராத கதாபாத்திரமாக இந்தப் பாத்திரம் இருக்கும். இந்தக் கேரக்டருக்காக என்னுடைய நடை, உடை, உடல் மொழி ஆகியவற்றை மாற்றிக்கொண்டேன்.

சாலைப் பாதுகாப்பு சம்பந்தமாக இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பில் பிரபல பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளதால் சாலைப் பயணத்தில் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்துப் பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து படமாக்கியுள்ளேன்.

இந்தப் படத்தின் திரைக்கதையை மிகவும் விறுவிறுப்பாக அமைத்துள்ளேன். அதற்கு திரைப்படக் கல்லூரியில் நான் படித்தது உதவியது. இன்னொரு கதாநாயகனாக ‘அம்மணி’ மகேஷ் நடித்துள்ளார். கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா நடிக்கிறார்கள். முக்கிய வேடங்களில் மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, ‘மெட்ராஸ்’ நந்து ஆகியோர் நடித்துள்ளனர்.

படத்தின் பெரும்பகுதி காட்சிகளை சென்னை அருகே உள்ள பிரபலமான பல்கலைக்கழகத்திலும், திருப்போரூர், திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களிலும் எடுத்துள்ளோம்.பாலாஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தேவேந்திரன் இசையமைத்துள்ளார். பாடல்களை விஜய்சாகர், டாக்டர் கிருதயா ஆகியோருடன் நானும் எழுதியுள்ளேன்.

நடனம் சிவசங்கர். டிஜி திங் மீடியா மற்றும் விண்மீன்கள் பட நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட படத்தின் அனைத்து வேலைகளும் முடித்துவிட்டோம். அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம்’’ என்றார் இயக்குநர் டாக்டர் மாறன்.

- ராஜா