நடிகராக பிஸியாகிவிட்ட டைரக்டர்!‘குட்டிப்புலி’ சரவண சக்தி ‘தண்டாயுதபாணி’ படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து, ரித்தீஷ் நடிப்பில் இவர் இயக்கிய ‘நாயகன்’ படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வசூலையும் வாரிக் குவித்தது.
ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு   சசிகுமாரின் நடிப்பில்  வெளிவந்த ‘குட்டிப்புலி’ படத்தில் இயக்குநர் முத்தையா இவரை நடிகராக அறிமுகம் செய்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, அவரது பெயருக்கு முன்பாக ‘குட்டிப்புலி’ என்கிற பட்டத்தையும் சேர்த்தது.

‘மருது’, ‘சண்டக்கோழி 2’, ‘கொடிவீரன்’, ‘தர்மதுரை’ போன்ற படங்களில் அசத்தியவர், தற்போது ‘மாமனிதன்’, ‘ரண சிங்கம்’, ‘அடுத்த சாட்டை’, ‘வால்டர்’  என ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நடிகனாக பிஸியாக வலம்வந்தாலும் தன்னுள் உள்ள இயக்குநர் என்ற படைப்பாளன் இவரை விடாது துரத்தவே, ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் ‘பில்லா பாண்டி’ படத்தை இயக்கினார்.

இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடவுள்ளாராம். இயக்குநராகி நடிப்பில் அசத்தியவர் மீண்டும் இயக்கத்தில் தடம் பதிக்கவுள்ளராம்.

- ரா