அடுத்தடுத்து படவாய்ப்பு! ரகசியத்தை உடைக்கிறார் ஹாட்ரிக் டைரக்டர்



‘‘ஒரு புதுமுக இயக்குநருக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் என் விஷயத்தில் அந்த அதிசயம் நடந்தது. நான் இயக்கிய ‘டீக்கடை பெஞ்ச், ‘என் காதலி சீன் போடுறா’, ‘என்னை சுடும் பனி’  படங்கள் மூலம் கே.பாக்யராஜ், ராமகிருஷ்ணன், டி.பி.கஜேந்திரன், சிங்கம்புலி மனோபாலா, சித்ரா லட்சு மணன் ஆகிய ஆறு இயக்குநர்களுடன் பணிபுரிய முடிந்தது.
இயக்குநரான சில நாட்களிலேயே சினிமா ஜாம்பவான்களுடன் வேலை செய்த அனுபவம் மறக்க முடியாதது’’ என்கிறார் இயக்குநர் ராம்ஷேவா. ஏவி.எம்.மில் டப்பிங் பணியில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.

“உங்க ‘என் காதலி சீன் போடுறா’ படத்துக்கு கிடைத்த பாராட்டு?”

“நானே எதிர்பார்க்காத வகையில் நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளது. என்னுடைய முதல் படமான ‘டீக்கடை பெஞ்ச்’ இன்னும் வெளிவரவில்லை. இரண்டாவதாக ஆரம்பித்த ‘என் காதலி சீன் போடுறா’ வெளியானதோடு படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
வெற்றிகரமாக மூன்று வாரங்களாக படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெளிவந்ததன் மூலம் ஒரு இயக்குநராக அங்கீகரிக்கப்பட்டுள்ளேன். ரசிகர்கள் பாராட்டை மறக்க முடியாது. படம் பார்த்தவர்கள் குடும்பத்துடன் பார்க்கலாம் என்றார்கள். சினிமா உலகத்திலிருந்தும் நிறையப் பேர் பாராட்டினார்கள்.”

“என்னை சுடும் பனி?”

“இது என்னுடைய மூன்றாவது படம். பக்கா லவ் சப்ஜெக்ட். அதேசமயம் படத்தில் சமூகக் கருத்தும் சொல்லியிருக்கிறேன்.  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்.சின்ன வயதிலிருந்தே ஒன்றாக படித்து பழகியவர்கள் நாயகனும் நாயகியும். நாயகி தானே முயற்சி செய்து உழைத்து தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்கிறார்.

நாயகன் சாதாரண நிலையில் இருந்தாலும் இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது. அவர்களுக்கு நடுவே வில்லனாக ஒருவன். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் மனசுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதுதான் ஹைலைட். மனசு பாரமாக இருந்தால் காஷ்மீர் போனாலும் சூடாகத்தான் தெரியும். அதே மனசு பாரமில்லாமல் இருந்தால் ராஜஸ்தான் பாலைவனமும் சோலைவனமாகத் தெரியும். அப்படி... வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை உணர்வுகள் வழியாக எவ்விதமாகப் பார்க்க வேண்டும் என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லியுள்ளேன்.

நாயகனாக நட்ராஜ் சுந்தர்ராஜ் நடிக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம். சிம்ப்ளி சூப்பர்ப் எனுமளவுக்கு அவருடைய ஒர்க் இருக்கும். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்ட் வருவார்.

நாயகியாக உபாசனா நடிக்கிறார். நார்த்துல பிறந்து சவுத்துல செட்டிலானவர் என்பதால் தமிழை சரளமாகப் பேசக்கூடியவர். ஒவ்வொரு காட்சியிலும் புரிந்து நடித்தார். கீர்த்தி சுரேஷ் மாதிரி ஆக்டிங் ஸ்கில் உள்ளவர்.ஹீரோ-ஹீரோயின் இருவருக்குமான லவ் கெமிஸ்ட்ரி பக்காவா ஒர்க் அவுட்டாகியிருக்கும். படத்தில் சில இடங்களில் முத்தக் காட்சிகள் வரும். எல்லாமே கதையின் தேவைக்கேற்ப இடம்பிடித்திருக்கும்.

இவர்களுடன் கே.பாக்யராஜ், சிங்கம்புலி, சித்ரா லட்சுமணன், சாண்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். பாக்யராஜ் சி.ஐ.டி. அதிகாரியாக வர்றார். அவருடன் வேலை செய்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாக பார்க்கிறேன். அவருடன் இணைந்து வேலை பார்த்ததால் ஒரு இயக்குநராக என்னை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள முடிந்தது.

அருள்தேவ் இசையமைத்திருக்கிறார். படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். ‘தீராத ஆசை’ என்ற காதல் பாடலும் ‘பிட்டாங்கி’ என்ற கானா பாடலும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கானா சரண், ஸ்வேதா மோகன் போன்ற பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். வெங்கட் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படத்தில் சமூகத்துக்கான மிக முக்கிய  கருத்து சொல்லியிருக்கிறேன். அந்தக் கருத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைக்கும். படத்தில் சொல்லப்பட்டிருக்கும் குற்றச் செயலை இனிமேல் செய்யக் கூடாது என்ற உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் வரும். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கும் படியாக இருக்கும்.”

“அடுத்து?”

“பக்கா கமர்ஷியல் படம் ஒண்ணு பண்ணுறேன். டைட்டில், ‘பிஞ்சிலே பழுத்தது’. ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்துவிட்டது. நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.”

“ஹிட் கொடுத்த இயக்குநர்களே அடுத்த வாய்ப்புக்கு தடுமாறும்போது நீங்கள் அடுத்தடுத்து படம் பண்ணும் ரகசியம் என்ன?”
“சினிமாவை நான் உண்மையாக நேசிக்கிறேன். என்னுடைய படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படுகின்றன. படப்பிடிப்புக்கு முன் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்துவிடுகிறேன்.

‘என் காதலி சீன் போடுறா’ படத்தை 23 நாட்களிலும் ‘என்னை சுடும் பனி’ படத்தை 25 நாட்களிலும் முடித்தேன். ஆர்ட்டிஸ்ட்களிடம் குறைந்த தேதிகள் வாங்கி டபுள் கால்ஷீட்டில் படப்பிடிப்பை முடித்துவிடுவேன்.

பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளை அதிகபட்சமாக இரண்டு நாட்களில் எடுத்து முடித்துவிடுவேன். என்னுடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின் மட்டும்தான்  புதுமுகங்கள். மற்ற நடிகர்கள் அனைவரும் புகழ்பெற்றவர்கள். அப்படி இருந்தாலும் வேகமாக படத்தை முடித்துவிடுவேன்.”

“உங்களுக்கு நடிக்கும் ஆசை இருக்கிறதா?”

“என்னுடைய நண்பர்கள் நிறையப் பேர் நடிக்க கூப்பிடுகிறார்கள். நடிக்கும் ஐடியா இல்லை.  இயக்குநராக வேண்டும் என்ற கனவில்தான் சென்னைக்கு வந்தேன். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ ரவிச்சந்திரனின் மாணவன் நான். குறுகிய காலத்தில் மூன்று படங்களை இயக்கி முடித்துள்ளேன்.

தொடர்ந்து டைரக்‌ஷன் பண்ணுவதுதான் என்னுடைய லட்சியம். பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும் ஆசை எல்லா இயக்குநர்களுக்கும் இருக்கும். எனக்கும் அப்படிப்பட்ட ஆசை இருக்கிறது. தொடர்ந்து நான் பண்ணுகிற படங்கள் மூலம் பெரிய நடிகர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா