ஏழு மொழி பேசும் ஜினத் பானு!



“நான்மும்பை பொண்ணு” என்று சொல்லிக் கொள்ளும் ஜினத் பானு, ‘நான் வேற மாதிரி’, ‘குறவன்’, ‘பற’ போன்ற படங்களில் நடித்தவர். தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி, பெங்காலி, மராத்தி, கன்னடா என்று ஏழு மொழிகளைச் சரளமாகப் பேசும் ஜினத் பள்ளிப்படிப்பை மும்பையிலும், கல்லூரிப் படிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் முடித்திருக்கிறார். ஜினத் பானுவிடம் பேசினோம்.

“எப்படி சினிமாவுக்கு வந்தீங்க?”

“என் அப்பா மும்பையில பிறந்தவரு. அம்மா தமிழ்நாடுதான். தர்மபுரியைச் சேர்ந்தவங்க. வீட்ல அம்மா தமிழ்தான் பேசுவாங்க. அதனாலே நானும் ஈசியா தமிழ் கத்துக்கிட்டேன். எங்க வீட்ல நான் ரெண்டாவது பொண்ணு. எப்பவுமே குறும்பு பண்ணிட்டே இருப்பேன். நான் சினிமால நடிக்கணும்னு என் அம்மாவுக்கு பெரிய ஆசை.

‘நான் வேற மாதிரி’ படத்திலே டெஸ்ட் ஷூட்டுக்கு கூப்பிட்டாங்க. அந்தப் படத்திலே ஒரு ஐட்டம் சாங் பண்றதுக்கு வாய்ப்பு கிடைச்சது. முதல் தடவை கேமரா முன்னாடி நிற்கும் போது எனக்கு வேர்த்துக் கொட்டிடுச்சி. அப்போ ஒழுங்கா போஸ் கூட கொடுக்க முடியலை. அந்த சாங்க முழுசா எடிட் பண்ணிட்டு காட்டுனப்போ டோட்டலா வேற மாறி தெரிஞ்சேன். அப்புறம்தான் சரி, நடிக்கலாமேன்னு நம்பிக்கையே வந்துச்சி.”

“நடிப்பு எங்கே கத்துக்கிட்டீங்க?”

“சினிமாவுக்காக நான் தனியா எங்கேயும் போய் நடிப்பு கத்துக்கல. சொல்லப்போனா டிக்டாக்ல தான் நடிப்பையே கத்துக்கிட்டேன். இப்போ டிக்டாக்ல ஒரு லட்சம் பேருக்கு மேல என்னை ஃபாலோ பண்றாங்க. வீட்ல ஒரு சின்ன பிரச்சனை. அதனால ஸ்கூல் முடிச்ச உடனே வீட்டை விட்டுட்டு சென்னைக்கு தனியாவே வந்துட்டேன்.

இங்கயே கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சேன். நான் வீட்டை விட்டு வந்தாலும் அம்மாதான் காலேஜ் பீஸ் கட்டி உதவி பண்ணாங்க. காலேஜ் முடிச்சதுக்கு அப்புறமா சினிமா வாய்ப்பு தேட ஆரம்பிச்சேன். போன ரெண்டு வருசமா சினிமாதான் வாழ்க்கைனு ஓடிட்டிருக்கேன். இப்போ ஓசூர்ல ஒரு கம்பெனியில மேனேஜரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். சூட்டிங் இருக்கிறப்போ சென்னைக்கு வந்துடுவேன்.”

“சினிமாவில் வேற மாதிரி பிரச்சினைகளை சந்திச்சதுண்டா?”

“நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு புரியுது. காம்ப்ரமைஸ், அட்ஜஸ்மெண்ட்னு சில பிரச்சனைகள் வரும்போது அப்பா அம்மா கூட இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணும். அந்த நேரத்திலே பிரண்ட்ஸ் தான் எனக்கு ஆறுதலா இருப்பாங்க. நானும் அது மாதிரி பிரச்சனை வரும்போதெல்லாம் சிரிச்சிட்டுக் கடந்து வந்துருவேன்.

அப்படி வர்றதுதான் சரியான வழின்னு நினைக்கிறேன். பொதுவா ஒரு நடிகரோட திறமைய மட்டும் பார்த்து வாய்ப்பு கொடுத்தா எல்லாருமே அர்ப்
பணிப்போட நடிப்பாங்க. நானும் அப்படியொரு வாய்ப்பைத்தான் எதிர்பார்க்குறேன்.”

- தீக்சா தனம்