சிங்கம் 2 அருள்மணி



டைட்டில்ஸ் டாக்-129

நான் ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் ஹரி சார் இயக்கத்தில் சூர்யா சார் நடித்த ‘சிங்கம்-2’ மறக்கமுடியாத படம். அந்தப் படத்தில் தேசியகீதம் பாடும்போது பள்ளியில் தகராறு பண்ணும் முரட்டு அப்பாவாக நடித்திருந்தேன். ‘சிங்கம்’ படத்தில் நடித்த நான் இப்போது வாழ்க்கையில் சிங்கம் போல் இருந்தாலும் ஆரம்பக் கட்டத்தில் பல அசிங்கங்களை சந்தித்த எலியாகத்தான் வாழ்க்கையைத் துவங்கினேன்.

சென்னைதான் எனக்கு சொந்த ஊர். பத்தாவது வகுப்பில்தான் முதன் முறையாக வாழ்க்கையில் தோல்வியைச் சந்தித்தேன். அடுத்தடுத்து நான்கு முறை பெயிலானேன். அப்போது ஏற்பட்ட தோல்வியும் அதன் வலியும் அதிகம். சாப்பிடும்போதெல்லாம் நக்கல், நையாண்டி பண்ண ஆரம்பித்துவிடுவார்கள். பாஸ் ஆக துப்பு இல்ல. கறி, மீன் கேட்கிறதா என்று வீட்டிலேயே காறித்துப்பியிருக்கிறார்கள்.  அதே மாதிரி வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் பையன் என்ன பண்றான் என்று கேட்டால் மட்டம் தட்டிதான் அறிமுகம் செய்துவைப்பார்கள்.

பத்தாம் வகுப்பு பெயிலானதும் எங்கள் வீட்டுக்கு அருகில் நாடக சபா இருந்தது. அந்தக் குழுவில் உருட்டி புரட்டி 150 ரூபாய் பணம் கொடுத்து சேர்ந்தேன். அங்கு ஆரம்பத்தில் சின்ன வேடம் கிடைத்தாலும் பிறகு யாருக்கு என்ன கேரக்டர் கொடுக்கலாம் என்று சொல்லு மளவுக்கு உயர்வு பெற்றேன்.

இதற்கிடையே பி.யூ.சியில் தேர்ச்சி பெற்று கல்லூரிக்குப் போனேன். அங்கு மார்க் குறைவாக இருந்ததால் எனக்கு அட்மிஷன் கொடுக்க  தயங்கினார்கள். ஆனால் அங்கிருந்த கல்லூரி முதல்வர் என்னை என்கரேஜ் பண்ணினார். இன்டர் காலேஜ் போட்டிகளில்  நான்தான் முதல் பரிசு வாங்குவேன். அப்போது ராதாரவி சார் லா காலேஜில் படித்துக் கொண்டிருந்தார். கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் நான்தான் முதல் பரிசு வாங்குவேன். அதன் மூலம் ராதாரவி சாரின் பழக்கம் கிடைத்தது.

அப்போது ராதாரவி சார் ‘தூக்குமேடை’, ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்தார். கல்லூரியில் போட்டிகளில் என்னுடைய நடிப்பைப் பார்த்து வியந்த ராதாரவி சார் ‘தூக்குமேடை’ நாடகத்தில் வாய்ப்பு கொடுத்தார். அதில் நான் ஹீரோ. ராதாரவி சார் வில்லன். நான் நடித்த ரோலில் கலைஞர், நாவலர் போன்ற பெரிய தலைவர்கள் நடித்திருக்கிறார்கள்.

அந்நாடகத்தில் தூக்கு போடும் காட்சியில் நான்கைந்து பக்கங்களுக்கு வசனம் இருக்கும். அந்த வசனம் கலைஞர் எழுதியது. அந்த வசனத்தைப் பேசுவது கடினம். நான் பிசிறு தட்டாமல் வசனம் பேசும்போது கரகோஷம் விண்ணைப்பிளக்கும்.

டிகிரி முடித்ததும் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேருவதற்கு அப்ளிகேஷன் போட்டேன். தேர்வுக் குழுவில் சகஸ்ரநாமம், எம்.என்.ராஜம், கல்லூரி முதல்வர் ரமணன் ஆகியோர் இருந்தார்கள். நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களில் பலர்  சிவாஜி, ஜெய்சங்கர் மாதிரி மேக்கப்புடன் ஜம்முன்னு வந்தார்கள். நேர்முகத் தேர்வுக்கு நான் ஜோல்னா பை, பிரேம் மட்டுமே உள்ள காந்தி கண்ணாடியுடன் போனேன். அவர்கள் மத்தியில் நான் காமெடியனாகத் தெரிந்தேன்.

என்னுடைய முறை வந்ததும் ஏற்கனவே நான் நாடகத்தில் நடித்த போட்டோவைக் காண்பித்தேன். சில காட்சிகளைக் கொடுத்து நடிக்கச் சொன்னார்கள். மற்றவர்களை சில நிமிடங்கலில் இன்டர்வியூ பண்ணிய தேர்வுக்குழு என்னிடம் 30 நிமிடம் இன்டர்வியூ நடத்தினார்கள். ராதாரவி சாரிடம் இன்டர்வியூ விஷயத்தைச் சொன்னேன்.

உடனே அவர் சகஸ்ரநாமம் சார் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் என்னுடைய அட்மிஷனுக்காக சிபாரிசு செய்தார். அவர் ‘நீ உன் வேலையைப் பார்... அவன் நல்லா பண்ணியிருக்கிறான்.  அவனுக்கு சீட் கிடைக்கும்’ என்று சொன்னதோடு அவர் நடத்தி வந்த சேவா ஸ்டேஜ் குழுவிலும் என்னைச் சேர்த்துக்கொண்டார்.

பிலிம் இன்ஸ்டிடியூட்டில் என்னுடைய செட்டில் அர்ச்சனா, பப்லு, நாசர், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, தங்கர்பச்சான், ராஜீவ்மேனன் இருந்தார்கள். எங்களுடைய முன் செட்டில் ‘தலைவாசல்’ விஜய், ரகுவரன், அருண்பாண்டியன், ராம்கி ஆகியோர் இருந்தார்கள்.

இன்ஸ்டிடியூட் விட்டு வெளியே வந்ததும் தயாரிப்பாளர்கள் கூப்பிட்டு வாய்ப்பு தருவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.  வாய்ப்பு தேடி சோர்வடைந்ததுதான் மிச்சம். ஆனால் நாசர் தொடர்ந்து முயற்சி எடுத்ததால் ‘க்ளிக்’காகிவிட்டார்.
நான் ‘ஜீனியஸ் டுடோரியல்’ என்ற காலேஜ் ஆரம்பித்தேன். அதன் மூலம் பணம், கார், கல்யாணம் என்று நல்ல விஷயங்கள் நடந்தது. ஆனால் நான் விரும்பிய சினிமா நடிகன் என்ற அடையாளம் கிடைக்காமல் இருந்தது.

அருண்மொழி இயக்கிய ‘காணி நிலம்’ என்ற படம்தான் நான் நடிகனாக அறிமுகமாகிய முதல் படம். தொடர்ந்து ‘அழகி’, ‘தென்றல்’, ‘பொன்னுமணி’,‘தர்மசீலன்’, ‘கறுப்பு ரோஜா’, ‘வேல்’, ‘ மருதமலை’, ‘கற்றது தமிழ்’, ‘சிங்கம்-2’, ‘லிங்கா’ என்று ஏராளமான படங்கள் பண்ணினேன். சமீபத்தில் ‘கோமாளி’, ‘மான்குட்டி’ வெளியானது. ‘ஒரு சந்திப்பில்’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளேன்.

ஆரம்பத்தில் காமெடி நடிகனாக வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது ஒர்க் அவுட்டாகவில்லை. பிறகு வில்லனாகப் பண்ணலாம் என்று முடிவு பண்ணினேன். அது ஒர்க் அவுட்டானது.வாழ்க்கையில் எனக்கும் தோல்விக்குமிடையே உறவு ரொம்ப அதிகம். பத்தாம் வகுப்பு நான்கு முறை பெயில், பி.யூ,சி. பெயில், பி.ஏ. எகனாமிக்ஸ் பெயில், எம்.ஏ ஆங்கிலம் பெயில், எம்.ஏ. தமிழ் பெயில், எம்.ஏ. பப்ளிக் அட்மின் பெயில், எம்.பி.ஏ.மார்க்கெட்டிங் பெயில், எம்.பி.ஏ.ஹெச்.ஆர் பெயில் என்று தோல்வி மீது தோல்வி வந்து என்னைச் சேர்ந்தது. ஆனால் அதுக்காக நான் கலங்கவில்லை. தோல்வியைத்தாண்டி வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக வெறித்தனமாக உழைத்தேன். இப்போது நடிகராக, வக்கீலாக, இன்டர்நேஷனல் டிரைனராக, சமூக சேவகராக பல தளங்களில் இயங்கிவருகிறேன்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறேன். என்னுடைய மாணவர்களில் பலர் இப்போது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாக மக்கள் பணியில் இருக்கிறார்கள். இன்டர்நேஷனல் பயிற்சியாளராக கோல் செட்டிங், டீம் பில்டிங், டைம் மேனேஜ்மென்ட், பர்சனாலிட்டி டெவலப்மென்ட், விற்பனை யுக்தி என்று பலவிதமான பயிற்சிகள் அளித்து வருகிறேன். சென்னையில் உள்ள பிரபல கடை ஊழியர்களுக்கு பயிற்சி கொடுத்த அனுபவம் எனக்கு உண்டு.

பேரன்டிங் வகுப்பு மூலம் பெற்றோர்களுக்கான பயிற்சி. கொடுத்துள்ளேன். மோட்டார் மெக்கானிக், வெல்டிங் போன்ற துறைகளில் இயங்க வேண்டும் என்றால் பயிற்சி அவசியம். ஆனால் பெற்றோர் எந்தவித பயிற்சியும் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியும் என்று கருதுகிறார்கள். நல்ல அப்பா, அம்மாவாக இருக்க விரும்பினால் நூறு ரூபாய்க்கு ‘குழந்தை வளர்ப்பு’ புத்தகத்தையாவது வாங்கிப் படிக்கணும். அந்த வகையில் பல நிறுவனங்களுக்காக பெற்றோருக்கான பயிற்சி கொடுத்துள்ளேன்.

என்னுடைய நிகழ்ச்சிக்கு வரும் பெற்றோர் என்ன சொல்லிடப் போகிறார் என்ற அலட்சியத்துடன் வருவார்கள். நிகழ்ச்சி முடியும்போது, ‘இது தெரிந்திருந்தால் என் பிள்ளைகளை இன்னும் நல்லபடியாக வளர்த்திருப்பேனே’ என்று ஆதங்கப்படுவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய உரையைக் கேட்ட ஒரு அம்மா தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் ‘இந்தப் பயிற்சி முன்பே கிடைத்திருந்தால் என் பிள்ளைகளை சிறப்பாக வளர்த்திருப்பேன்’ என்று அழுதார்.

இப்போது பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கறார் மனப்பான்மையில் வளர்க்கிறார்கள். பிள்ளைகளிடத்தில் எங்கு பிடிக்கணும், எங்கு பிடிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கணும். என்னுடைய அப்பா படிக்கவில்லை என்றால் தலையில் ஒரு குட்டு கொட்டுவார். பதினைந்து நாளுக்கு அந்த இடத்தில் சீப்பு எடுத்து தலை வார முடியாது. பெற்றோர்கள், பிள்ளைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். அன்பாகப் பேசினால்தான் பிள்ளைகள் பெற்றோரிடம் நெருங்கி வருவார்கள். மிரட்டினால் பொய் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.

இன்று பிள்ளைகளை மார்க் எடுக்கும் மிஷின்களாகத்தான் வளர்க்கிறார்கள். அரசு வேலை கிடைக்க என்ன வழியோ அதற்கு பயிற்சி கொடுக்கிறார்கள். டாக்டர் ஆகணும் என்று பல லட்சம் செலவு செய்கிறார்கள். அப்படி  பணம் செலவழித்து டாக்டராகும் மாணவர்களால் எப்படி சேவை அடிப்படையில் வைத்தியம் பார்க்க முடியும். படிப்புக்கு செலவழித்த பணத்தை திரும்ப எடுக்கத் தான் முயற்சி செய்வார்கள்.

நாட்டில் அரசாங்க வேலை மட்டும்தான் உள்ளதா? இன்றைய பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு சொந்தக் காலில் நிற்கக்கூடிய அளவுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வளர்க்க வேண்டும். நான் எந்த கம்பெனிக்கும் அப்ளிகேஷன் போடவில்லை. ஆனால் வாழ்க்கையில் வீடு, வாசல் என்று செட்டிலாகியிருக்கிறேன்.

பெற்றோர் பிள்ளைகளை தட்டிக் கொடுத்து வளர்க்க பழக வேண்டும். மார்க் ஷீட்டில் அதிகமான மார்க்குகளை விட்டு விட்டு குறைவான மார்க்குகளை கணக்கில் எடுத்து பெண்டு நிமிர்த்துவார்கள். முதலில் நல்ல மதிப்பெண்களுக்காக பாராட்டிவிட்டு பிறகு குறைவான மார்க்  பாடங்களில் ஏன் குறைந்தது என்பதைப் பற்றி மெதுவாகப் பேசணும்.

இன்று வாழ்க்கையில் அப்பா ஸ்தானத்தில் இருப்பவர்கள் மாணவர்களாக இருந்தபோது குறைவாக மார்க் எடுத்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. பிள்ளைகளை எல்லா சமயத்திலும் உற்சாகப்படுத்தவேண்டும்.அப்பா, அம்மாவிடம் எல்லா விஷயத்தையும் ஷேர் பண்ணும் மனநிலையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளை வளர்ப்பு என்பது ஒருவகை கலை. அதேபோல் கணவன் மனைவிக்கிடையே பரஸ்பர அன்பு இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். மனைவியிடம் சின்னச் சின்ன பாராட்டு தெரிவிக்க வேண்டும்.

நன்றி சொல்லப் பழக்கலாம். நம்மிடம் உள்ள பிரச்சனை என்ன என்றால் நேசிப்பார்கள். ஆனால் மனதில் இருக்கும் அன்பை வார்த்தைகளில் சொல்லத் தெரியாது. இதைப்பற்றி நான் ஏன் சொல்கிறேன் என்றால்,  இதுவரை சுமார் 4 லட்சம் மக்களுக்கு பயிற்சி அளித்துள்ளேன். நடிகர் அருள்மணி என்பதைப் போலவே எனக்கு டிரைனர் அருள்மனி என்ற அடையாளமும் இருக்கிறது.

வாழ்க்கையில் எங்கும் துவண்டு போகக்கூடாது. என்னை கல்லூரியில் சேர்க்கவே தயங்கிய கல்லூரியில் ‘சிறந்த மாணவர்’ என்ற அடையாளத்துடன் வெளியே வந்தேன்.  என்.எஸ்.எஸ்.,  என்.சி.எஸ். சேவையில் இருக்கும்போது துப்பாக்கி சுடும் போட்டியில் நேஷனல் லெவல் வின்னராக வந்துள்ளேன். காஷ்மீரில் நடைபெற்ற water skiing என்கிற தண்ணீரில் சறுக்கும் போட்டியில் தேசிய அளவில் மெடல் வாங்கியிருக்கிறேன்.

நான் சொல்லும் அந்த விளையாட்டுக் காட்சியை ஜெமினி சார் நடித்த ‘ஓஹோ... எந்தன் பேபி’ என்ற பாடலில் காண்பித்திருப்பார்கள். நாவலர் நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் கரங்களில் அந்த விருதைப் பெற்றேன்.

சமீபத்தில் நடந்த நிகழ்வு என்னை நெகிழவைத்தது. எந்தக் கல்லூரி எனக்கு அட்மிஷன் கொடுக்க மறுத்ததோ அதே கல்லூரியில் 35 வருடத்துக்குப் பிறகு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். அன்றைய கல்லூரி முதல்வர் மற்றும் இன்றைய கல்லூரி முதல்வர் நடுவில் நான் உட்கார்ந்திருந்தது வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாதது.

நண்பர்களே... வாழ்க்கையில் தோல்வியைக் கண்டு கலங்கவேண்டாம். தோல்வியே இருந்தாலும் அதில் நீங்கள் செயலாற்றியுள்ளீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். பத்து முறை முயற்சி பண்ணினால் 9 முறை தோல்வி வருகிறது. அதாவது 9 தோல்வி, 1 வெற்றி. அடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் 100 தடவை முயற்சி பண்ணுங்க. 90 தோல்வி கிடைத்தாலும் 10 வெற்றி கிடைக்கும். முயற்சியை அதிகப்படுத்தினால் வெற்றியின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

சிலர் வேலையே கிடைக்கவில்லை என்பார்கள். 5 கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டுவிட்டு வேலை கிடைக்கவில்லை என்று சொல்லாதீர்கள். 50 கம்பெனிக்கு அப்ளி கேஷன் போடுங்கள். வேலை நிச்சயம். கடமையைச் செய்துவிட்டு பலனை எதிர்பாருங்கள். கண்டிப்பாக பலன் கிடைக்கும்.
பயந்து  பயந்து வாழ்ந்த நான் என்னுடைய முயற்சியின் பலனாக ஏராளமானவர்களுக்கு நன்மை செய்து சமூகத்துக்கு நானும் ஏதோ ஒரு வகையில் உதவியாக இருக்கிறேன். என்னை எலி மாதிரி பார்த்தவர்கள் இப்போது சிங்கமாகப் பார்க்கிறார்கள்.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)