கொசுறு மேட்டர்!



சொந்தமாக படம் தயாரிப்பது நடிகர்களின் வழக்கம். விஷால், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி வரிசையில் யோகிபாபு சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளார். யோகிபாபு திரைக்கதை, வசனம் எழுதும் இந்தப் படத்தில் யோகிபாபு தவிர இருவர் கதையின் நாயகர்களாக நடிக்கவுள்ளார்களாம். இந்தப் படத்தை சிவா நடித்த ‘யா யா’ படத்தை  இயக்கிய ராஜசேகரன் இயக்குகிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘காப்பான்’. இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இதில் முதன் முறையாக ஹாரிஸ் ஜெயராஜ் மகள் ஒரு பாடலைப் பாடி நடித்துள்ளார். இந்தப் பாடலை காஷ்மீரில் எடுத்துள்ளார்களாம்.

புதுமுக இயக்குநர்களை தேடிப் பிடித்து வாய்ப்பு கொடுப்பவர் விஷால். அந்த வரிசையில் தன்னுடைய அடுத்த படத்தில் ஆனந்த் என்ற இயக்குநரை அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ரத்தா தாஸ் நடிக்கிறார்கள்.

மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட இயக்குரும், கடவுளின் பெயரை தன்னுடைய பெயராக வைத்திருக்கும் டெல்டா மாவட்ட இயக்குநரும் கடன் பிரச்சனையில் இருப்பதால் இவர்களை வைத்து படம் தயாரிக்க பிரபல நிறுவனங்கள் தயங்குகின்றனவாம். இவர்கள் கோடிக் கணக்கில் கடன் வைத்திருப்பதால் இவர்களை வைத்து படம் தயாரித்தால் அந்தக் கடன் சுமையும் தங்கள் மீது வீழ்ந்துவிடுமோ என்று தயாரிப்பு நிறுவனங்கள் அச்சம் தெரிவிக்கின்றன.

‘கோமாளி’ வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி நடிக்கும் ‘ஜனகணமன’ படத்தை ‘என்றென்றும் புன்னகை’ அகமது இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக டாப்ஸி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ‘கேஜிஎஃப்’ படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு, அர்ஜுன் மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த எல்னாஸ் நோரோஸி உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ரஷ்யா அருகில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் நடந்துவருகிறது.

தொகுப்பு : சுரா