லக்ஷ்மியில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி!பிரபுதேவா நடித்த ‘லக்ஷ்மி’ படத்தில் டான்ஸ் கோச்சாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் சோபியா. தமிழின் முன்னணி ஹீரோயினான ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘‘நான் பக்கா சென்னை கேர்ள். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அதாவது முதல் வகுப்பு படித்த காலகட்டத்திலிருந்து டான்ஸ் பண்றேன்.

என் வயசுல அப்போது யாரும் ஸ்டேஜ் டான்ஸ் ஆடவில்லை. முந்நூறு ரூபாயில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் சம்பளமாக வாங்கும் டான்ஸராக பல மேடைகளை பார்த்துள்ளேன். தனியார் டி.வி. நிகழ்ச்சியில் டைட்டில் ஜெயித்த பிறகும் சினிமாவில் சாதிக்க பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது” என்று பேச ஆரம்பித்தார் சோபியா.

“சினிமாவுக்கு வந்தது எப்படி?”

“ஸ்கூல் படிக்கும்போது பா.ரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’ படத்தில் நானும் என் அக்காவும் இணைந்து நடித்தோம். நவ்யா, திவ்யா என்ற அந்த கேரக்டரில் வந்தது நாங்கள்தான். ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்ற தலைப்பில் கால் டான்ஸாடுகிறது... கை மொபைலில் அதுக்கு மேல டான்ஸ் ஆடுது என்று குங்குமம் இதழில் எங்கள் பேட்டியும் வந்தது. தொடர்ந்து மிஷ்கின் சாரின் ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா’ உட்பட ஏராளமான படங்களில் நடித்தேன். ‘அட்டக்கத்தி’யில் நடிக்கும்போதே ஐஸ்வர்யா ராஜேஷ் பழக்கம்.”

“ஐஸ்வர்யா ராஜேஷுக்கு எப்படி அண்ணி ஆனீங்க?”

“ஒரு நடன நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அண்ணன் மணிகண்டன் அறிமுகமானார். நட்பில் ஆரம்பித்து பிறகு காதல், கல்யாணம் என்று எங்கள் உறவு நீடித்தது. நாங்கள் இருவேறு மதத்தைச் சேர்ந்தவர்கள். இரு வீட்டாரின் சம்மதத்தோடுதான் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு மதர்வுட்டுக்கு மாறியதால் தற்காலிகமாக நடிப்பு, நடனத்துக்கு முழுக்குப் போட்டேன்.

‘லக்ஷ்மி’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் கேரக்டருக்கு நான் நடித்தால் நல்லா இருக்கும் என்று என்னுடைய நாத்தனார் ஐஸ்வர்யாதான் என்னைப் பற்றி இயக்குநர் விஜய் சாரிடம் சொல்லியிருந்தார்.

‘லக்ஷ்மி’ படத்தில் அம்மா கேரக்டரை விட டான்ஸர் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. முக்கியமாக பிரபுதேவா சாருடன் டான்ஸ் சீக்வென்ஸ் இருந்தது. அதுதான் இந்தப் படத்தை நான் பண்ணுவதற்குக் காரணமாக இருந்தது. திருமணத்துக்குப் பிறகு நடித்த ‘லக்ஷ்மி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்னை உற்சாகப்படுத்தியது.”

“உங்க நாத்தனார் என்ன சொல்றாங்க?”

“ஐஸ்வர்யா படம் பார்த்துவிட்டு ‘யதார்த்தமா இருக்கு அண்ணி’ என்று வெளிப்படையாகப் பாராட்டினார். சினிமாவில் தாக்குப்பிடிக்க  சில ஆலோசனைகளையும் கொடுத்தார். ஐஸ்வர்யா நல்ல பெர்ஃபாமர். அவருடைய ஆலோசனையைக் கேட்டு நடித்தால் நல்ல பேர் கிடைக்குமென்று நம்புகிறேன்.”

“இயக்குநர் விஜய்?”

“விஜய் சாரை நல்ல இயக்குநர் என்பதைவிட மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் என்பதே பொருத்தம். அவருடைய பாராட்டு சினிமாவில் தொடர்ந்து பயணிக்க ஊக்கம் கொடுத்தது.”

“பிரபுதேவா?”

“பிரபுதேவா சார் ரொம்ப பேசமாட்டார். ‘நல்லா டான்ஸ் பண்றீங்க. உங்களுக்கு தனித்துவமான டான்ஸ் ஸ்டைல் இருக்கு’ என்றார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் சொன்ன அந்தப் பாராட்டைத் தாண்டி நடனத்தை நேசிக்கும் எனக்கு வேறு எது அங்கீகாரமாக இருக்க முடியும்?”

“பெற்றோரின் ஆதரவு?”

“இந்தச் சமயத்தில் என்னுடைய அம்மாவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். மும்பையில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் என்னுடைய இரண்டு மாதக் குழந்தையை அவர்தான் கவனித்துக்கொண்டார்.

என் அப்பா, அம்மா இருவரும் நான் பெரிய நடிகையாக வர வேண்டும் என்று என்னை மோட்டிவேட் பண்ணுவார்கள். ஆனால் கும்பலோடு கும்பலாகத்தான் பல படங்களில்  வருவேன். ‘லக்ஷ்மி’ படத்தில் எல்லோரும் நோட் டீஸ் பண்ற மாதிரி பண்ணியதில் அவர்களுக்கு ரொம்ப சந்தோஷம்.”

“அடுத்தடுத்து வாய்ப்புகள் வருகின்றனவா?”

“நிறைய கதை கேட்டுக்கிட்டு இருக்கேன்னு சொல்ல ஆசைதான். ஆனால், ‘லக்ஷ்மி’ படம் பார்த்துவிட்டு சினிமாத் துறையிலிருந்து முன்னணி நிறுவனங்களிடமிருந்து வாய்ப்பு கொடுப்பதாக வைப்ரேட் மோடில் பேசினார்கள். நான் திருமணமானவள் என்று தெரிந்த பிறகு சைலன்ட் மோடுக்கு மாறிவிட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. தமிழ் சினிமா டெக்னாலாஜியில் வளர்ந்துள்ளதாக சொல்கிறார்கள்.

ஆனால் திருமணமான பெண்களுக்கு வாய்ப்புக் கொடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். பாலிவுட் சினிமா அப்படி இல்லை. அங்கு திருமணத்துக்குப் பிறகு ஏராளமான பெண்கள் நடிக்கிறார்கள். ‘திறமை இருக்கிறதா?’ என்ற ஒரே தகுதியை மட்டுமே பார்க்கிறார்கள். அந்த மைண்ட் செட் இங்கு வரவில்லை. எனக்கு திருமணமாகிவிட்டது என்ற உண்மையை மறைத்து வாய்ப்பு வாங்க இஷ்டமில்லை.

ஜோதிகா, சிம்ரன் போன்றவர்கள் புகழ்பெற்ற நடிகையாக இருப்பதால் திருமணத்துக்குப் பிறகும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகைகள் நிலைமை ஆரோக்கியமாக இல்லை.  தொடர்ந்து நல்ல வாய்ப்பு வந்தால் நடிக்க ரெடி. பாரின் மாப்பிள்ளை மாதிரி பாரின் மணமகள் கேரக்டர், ஹீரோயின் ஃப்ரெண்ட் போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அண்ணி, அம்மா ரோல் பண்ணுவதற்கு நிறைய காலம் இருக்கிறது.

ஏன்னா, நான் ரொம்ப சின்னப் பொண்ணு. என்னுடைய நடனத் திறமையை வெளிப்படுத்தக்கூடியளவுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைத்தாலும் பண்ணுவேன். என்னுடைய கணவர் உட்பட வீட்ல உள்ளவர்கள் சப்போர்ட் கிடைத்துள்ளது. நானே சில சமயம் தயங்கினாலும் என் கணவர்தான் என் லட்சியத்தை அடைய சப்போர்ட் பண்ணுகிறார்.

எனக்கு என்னுடைய குழந்தை, குடும்பம் முக்கியம். பணம், புகழ் எல்லாம் இரண்டாவதுதான். ‘லக்ஷ்மி’ படத்தில் கிடைத்த பெயரை தக்க வைக்குமளவுக்கு செலக்டிவ்வா படங்களைத் தேர்வு செய்து நடிக்கவுள்ளேன்.”

“சினிமாவில் உங்க ரோல்மாடல்?”“தேவியில் ஆரம்பித்து எங்க வீட்டு பெண் ஐஸ்வர்யா ராஜேஷ் வரை எல்லோருமே எனக்கு ரோல்மாடல்தான். நம் மனதில் இடம் பிடிக்கும் எல்லோருமே ரோல் மாடல்கள்தான். அந்த வகையில் அந்த இடத்தை ஒருவருக்கோ, இருவருக்கோ மட்டுமே கொடுக்க முடியாது.”

- சுரேஷ்ராஜா