ரஜினியின் பேட்ட! ரசிகர்களின் கோட்ட!!அனிருத்தின் அதிரடி பின்னணி இசையோடு கதவு திறக்கிறது. பேப்பர், பேனா, காம்பஸ் பாக்ஸுடன் கத்தியும் பறக்கிறது. தனக்கேயுரிய ஸ்டைலான நடையில் சூப்பர் ஸ்டார். முகத்தில் பாட்ஷா தாடி, கழுத்தில் மப்ளரோடு ஐம்பது பிளஸ் வயது தோற்றம். இது போதாதா ரசிகர்களுக்கு....?

‘பேட்ட’!

ரஜினி படத்துக்கு எந்த டைட்டில் வைத்தாலும் இப்படித்தான் டிரெண்டாகும். இம்முறை எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. காரணம், டைட்டில் அறிவிக்காமல் படப்பிடிப்பு ஆரம்பமாகியிருந்தது. டைட்டில், இயக்குநர், கதையெல்லாம் முடிவான பின்னரே படப்பிடிப்புக்குக் கிளம்புவது ரஜினியின் பழக்கம். முந்தைய 164 படங்களும் முறைப்படி டைட்டில் அறிவித்த பின்னரே ஆரம்பமாயின. இம்முறை தலைகீழ்!

‘சந்திரமுகி’ தவிர ரஜினி படத்தின் டைட்டில் எப்போதும் ரஜினியின் கேரக்டரை ஹைலைட் செய்வதாகத்தான் இருக்கும். ‘பில்லா’ முதல் ‘காலா’ வரை அப்படித்தான். இம்முறை சற்றே வித்தியாசமாக ஏரியாவை மையமாக வைத்து டைட்டில் வந்திருக்கிறது. குட்டீஸ் முதல் காலேஜ் பார்ட்டிகள் வரை சகலரையும் கவர்வதற்காக லோக்கல் டைட்டிலைத் தேர்வு செய்திருக்கிறார்கள்.

தமிழ் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இதுதான் டைட்டிலாம்!  ரஜினி படத்து டைட்டிலைப் பொறுத்தவரை மூன்றெழுத்தில்தான் ரசிகர்களின் மூச்சிருக்கும். ‘ப்ரியா’, ‘பில்லா’ தொடங்கி ‘பாட்ஷா’, ‘கபாலி’ வரை ரஜினி படத்துக்கு மூன்றெழுத்து டைட்டிலால் பாக்ஸ் ஆபீஸே வசூலைத் தாங்காமல் நொறுங்குவது வழக்கம். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கும் மூன்றெழுத்து சென்டிமென்ட் உண்டு. ‘பீட்சா’ மறக்கமுடியுமா?
டைட்டில் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தைக் கிளப்பியிருக்கிறது. எந்தத் தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ரஜினி படமென்றால் ஒரே குரலாகத்தான் ஒலிக்கிறார்கள்.

“தலைவரோட ‘பேட்ட’, சும்மா கேட்ட உடனேயே ஒரு தர லோக்கல் ஃபீலிங் நம்ம மனச நிறைக்குது.. ‘பாட்ஷா’ ரஜினிக்கு 15 வயசு கூட இருந்தா எப்படி மாஸா, ஸ்டைலா இருப்பாரோ அதான் ‘பேட்ட’ தலைவர் லுக்... மோஷன் போஸ்டர்தான் என்றாலுமே கூட அந்த மெழுகுவர்த்தி ஸ்டாண்ட தூக்கி அடிக்கிற சீன்... அய்யோ தலைவா.... உனக்கு 68 வயசா ஆவுதுன்னு கேட்கத் தோணுது...

80களோட தொடக்ககால ரஜினியை இயக்குநர் கார்த்திக் கொண்டுவந்திருக்கிறார்னு மட்டும் தெளிவா தெரியுது. அந்தச் சிரிப்பு, அந்த அசரடிக்கிற லுக்.... ‘தனிக்காட்டு ராஜா’ இரண்டாம் பாதி தலைவரை நினைவுபடுத்துது... சிம்பிளா சொல்லணும்னா இன்னிக்கி பேட்ட.... நாளைக்கு கோட்ட... படக்குழுவினருக்கு வாழ்த்துகள். இந்தப் படத்தை பொங்கல் விருந்தா சன் பிக்சர்ஸ் ரிலீஸ் பண்ணா நல்லா இருக்கும்” என்கிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் ரஜினி ரசிகர் ஜெயசீலன்.

“இதே சன் பிக்சர்ஸோட ‘எந்திரன்’ படத்திலே கிளிமஞ்சாரோ பாடலில், நாம் பார்த்த ரஜினியை மீண்டும் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ரஜினி போஸ்டரில் சிரிக்கும் காட்சியைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. இது நிச்சயம் ரஜினி படத்தின் அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு மாஸ் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

‘பேட்ட’ என்கிற படத்தின் பெயரும், வசூல் வேட்டைக்கு உதவும் என்பது நிச்சயம். ரஜினி அரசியலுக்கு வருகின்ற இந்த நேரத்தில், ‘பாட்ஷா’ போன்று ஒரு வெற்றிப்படம் நிச்சயம் அவசியமாகத் தேவைப்படுகிறது. இந்தப் படம் நிச்சயமாக ‘பாட்ஷா’வை விட மிகப் பெரிய வெற்றிப்படமாக அமையும் என்பது, தற்போதே தெரிகிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ரஜினி ரசிகரும், குறும்பட இயக்குநருமான அருள்செல்வன்.

“சூப்பர் ஸ்டாரோட ‘பேட்ட’, ‘எந்திரன்’ படத்துக்குப் பிறகு என்னை மாதிரியான ரஜினி ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்னு நினைக்கிறேன். பக்கா ரஜினி ரசிகர்களெல்லாம் இதுக்குத்தான் வெயிட் பண்ணிட்டிருந்தோம். ‘பாட்ஷா’ ரேஞ்சு பிஜிஎம், என்ன வயசுன்னு கெஸ் பண்ண முடியாத கெட்டப்புலே டீசர்ல சிரிச்சுட்டிருக்காரு, போஸ்டர்ல முறைக்கிறாரு. பா.ரஞ்சித் மிஸ் பண் ணதை கார்த்திக் சுப்புராஜ் தருவார். ரஜினி வெறியர்களெல்லாம் படத்தோட டீம்ல இருக்காங்க. அதனால ரசிகர்களை பெரிய அளவுல திருப்திப்படுத்துவாங்கன்னு நம்புறேன்” என்கிறார் சென்னை யைச் சேர்ந்த இளம் ரசிகரான ராம்.

“ஒண்ணும் ஸ்பெஷலா தெரியலை. ‘லிங்கா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இப்படித்தான் இருந்துச்சு. ஒரே வித்தியாசம், அதுல தாடி இல்லை; இதுல தாடி வெச்ச கெட் அப். புதுசா ஏதாவது செஞ்சிருக்கலாம். எப்படியோ, ‘லிங்கா’ போல் இல்லாம படபடன்னு பட்டாசா வெடிக்கிற மாதிரி கார்த்திக் சுப்புராஜ் படத்தை குடுப்பார்ங்கிற நம்பிக்கை இருக்கு” என்கிறார் சிங்கப்பூரைச் சேர்ந்த மூத்த ரசிகரான ஷாஜகான்.

‘பேட்ட’ அறிவிப்போடு போட்டி போட்டபடி ‘2.0’ ஸ்டில் மற்றும் டீஸருக்கான அறிவிப்புகளும் வந்தன. இதுவரை அமைதியாக இருந்த ‘2.0’ டீம் திடீரென்று களத்தில் இறங்கியிருப்பது கோடம்பாக்கத்தை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. ரஜினிக்குப் போட்டியும் ரஜினியேதான்.