பிதாமகன் கஞ்சா கருப்பு



டைட்டில்ஸ் டாக் 83

எனக்கு போஸ்ட்டு ஆபீஸுலே சிவகங்கை மாவட்டம்னு முகவரி கொடுத்திருந்தாலும், இந்த ஒலகத்துலே கருப்புக்குன்னு முகவரி கொடுத்த எங்கப்பா காந்திநாதன்தான் என்னோட பிதாமகன். அப்பா, அம்மாவுக்கு நாங்க அஞ்சு பசங்க. கிராம நிர்வாக அதிகாரியாக அப்பா வேலை பார்த்தாரு. பீடி, சிகரெட், தண்ணீ, பொம்பள சகவாசம்னு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத வெள்ளந்தி மனுஷன். அது எல்லாத்தையும்விட அவரோட நேர்மைதான் எனக்கு எப்பவுமே பெருமை தர்ற விஷயம்.

அரசாங்க உத்தியோகத்துலே இருந்தும் அஞ்சு பைசா லஞ்சம் வாங்காதவரு. பெரிய அறிவாளி. அவர் ரோட்டுலே வந்தாருன்னாலே ஜனங்க அவ்ளோ மரியாதையா எழுந்து நின்னு வணக்கம் சொல்லுவாங்க. அவரை மாதிரியே வளரணும்னுதான் எங்கம்மா சொல்லிச் சொல்லி எங்களை வளர்த்துது.

தீபாவளின்னா ஊரெல்லாம் பட்டாசு வெடிச்சி, புதுத்துணி உடுத்திக் கொண்டாடுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் தீபாவளின்னு ஒண்ணே எனக்குக் கிடையாது. ஏன்னா என்னோட பிதாமகன், என்னைப் பெத்த அப்பா ஒரு தீபாவளி அன்னிக்குதான் இறந்துட்டாரு. எனக்கு இல்லாத தீபாவளி, மத்தவங்களையாவது சந்தோஷப்படுத்தணும்னு நினைப்பேன். அதனாலே என்னைச் சுத்தியிருக்கிற உறவு, நட்பு வட்டத்துக்கெல்லாம் என்னென்ன செஞ்சி திருப்திப்படுத்தணுமோ அதையெல்லாம் முறையா செய்வேன். நான் மட்டும் என் பிதாமகனோட நினைவிடத்துக்குப் போயி மவுனவிரதம் இருப்பேன்.

பிதாவுக்கு அடுத்து மாதாதான். நான் சரியா படிக்காதவன். ஆனாலும் கள்ளங்கபடம் இல்லாதவனா இருக்கிறதுக்கு என் அம்மாதான் காரணம். அப்பா இறந்துட்டாலும் ஊருலே இருந்து காடு, கழனியை வெச்சு அம்மா எங்களையெல்லாம் காப்பாத்திச்சி. அம்மாவோட சித்தப்பா முத்து அய்யாதான் எங்களை வளர்க்க அவரோட வாழ்க்கையை செலவழிச்சாரு. அந்தக் காலத்து காங்கிரஸ் தியாகி.

தகப்பன் இல்லாத பசங்க தறுதலை ஆகிடக்கூடாதுன்னு எங்கம்மா எங்களையெல்லாம் கண்டிப்பு காட்டி வளர்த்துச்சி. இன்னிக்கு கோடிக்கணக்கிலே சம்பாதிச்சி இருந்தாலும், அம்மாதான் எனக்கு கோயில். பத்து மாசம் என்னை சுமந்து பெத்த அம்மா கிட்டே டெய்லி பேசிட்டுதான் மத்தவங்க கிட்டே பேசவே ஆரம்பிப்பேன்.

நான் ரெண்டாவதோ, மூணாவதோதான் படிச்சேன். இருந்தாலும் எனக்கு ‘அ’ன்னா, ‘ஆ’வன்னா சொல்லிக் கொடுத்த டீச்சரை இன்னும் ஞாபகம் வெச்சிருக்கேன். ஸ்கூலுக்குப் போனா வயிறு நிறைய சாப்பிடலாம் என்பதற்காகவே ஸ்கூலுக்கு போனேனே தவிர, படிக்கிறதுக்காக கிடையாது.
நம்ம ஏரியா படிப்பு கிடையாதுன்னு தெரிஞ்சதும் வேலைக்குப் போனேன்.

சிவகங்கை மகாராணி ஜவுளிக்கடை, பஸ் ஸ்டேண்ட் டீக்கடைன்னு வேலை பார்த்தேன். அப்புறம் சிவகங்கையிலே இரும்புக்கடை நடத்துற பாண்டியண்ணன்தான் சினிமாவுலே என்னோட பிதாமகனாக அமைஞ்ச டைரக்டர் பாலாண்ணனை அறிமுகம் செஞ்சு வெச்சாரு. அப்போ நான் சின்னதா ஹோட்டல் நடத்திக்கிட்டிருந்தேன். ஓட்டல்லே கஸ்டமர்கள் கிட்டே நான் அன்பா பழகுறதை கவனிச்ச பாலாண்ணன், “இவன் பேசிப்பேசியே ஆளைக் கவுக்கிறான். சினிமாவுக்கு வந்தான்னா பெருசா ஜெயிப்பான்”னு பாண்டியண்ணன் கிட்டே சொல்லியிருக்காரு.

பாலாண்ணனோட சித்தப்பா சிவகங்கையிலே ஹாஸ்பிட்டல் நடத்திக்கிட்டிருந்தாரு. இந்த அடிப்படையிலே அடிக்கடி பாலாண்ணன் அங்கே வருவாப்புலே. ஒருவகையிலே சொல்லப்போனா அவரு எனக்கு சொந்தமும் கூடதான். அப்போவெல்லாம் அண்ணனுக்கு என் கையாலே சாப்பாடு எடுத்துப் போவேன்.

தோப்புலே சாப்பாடு பரிமாறப் போகிறப்போ கேணியிலே இறங்கி நான் தண்ணியெடுக்கிறது, கழனியிலே நடந்து வர்றதையெல்லாம் அண்ணன் அப்படியே கேமராவுலே ஷூட் பண்ணுவாப்புலே. நான் சினிமாவுக்கான மெட்டீரியல்தான்னு அண்ணன் அப்படி உறுதியா நம்பியிருக்காரு.

பாலாண்ணன் எப்படின்னா ஒரு கம்பி ஏடாகூடமா வளைஞ்சி நெளிஞ்சி கெடந்ததுன்னா அதை ஆசாரி மாதிரி பட்டி பார்த்து ஸ்ட்ரெயிட்டாக நிமிர்த்துவாரு. கோணலா கிடந்த என் வாழ்க்கையை அப்படித்தான் பெண்டு நிமித்தினாரு. அண்ணனுக்கு கன்னாபின்னான்னு கோவம் வரும். ஒண்ணு கெடக்க ஒண்ணு செஞ்சு வெச்சோம்னா இஷ்டத்துக்கும் திட்டி தீர்த்துப்புடுவாரு.

அதுக்காக என்னிக்குமே நான் வருத்தப்பட்டதில்லை. ஏன்னா, கோவம் இருக்கிற இடத்திலேதான் குணமும் இருக்கும்னு சொல்லி என் அம்மா என்னை வளர்த்திருக்கு. சில சமயம் அண்ணன் கோவத்துலே என்னை அடிச்சிக்கூட இருக்கு. ஆனா, கோவம் குறைஞ்சதுமே அள்ளி அள்ளிக் கொடுப்பாரு.

சினிமாவுக்கு வந்தப்புறம் ஒரு ஆடியோ விழாவிலே என்னை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தாரு. எல்லாரும், “என்னங்க அவ்வளவு மோசமா திட்டுறாரு. நீங்க அம்மிக் கல்லு மாதிரி அமைதியா கிடக்குறீங்களே?”ன்னு கேட்டாங்க.“அண்ணன் திட்டத் திட்ட நான் திண்டுக்கல், வைய வைய வைரக்கல். நம்ம வளர்ச்சியிலே யாருக்கு அக்கறை இருக்கோ, அவங்கதான் நம்மளை திட்டுவாங்க.

பெத்தவங்க குழந்தையை திட்டுறது எதுக்கு, நல்லா வரணும்னுதானே? என்னைப் பெத்தவங்களுக்கு என் மேலே என்ன உரிமையோ, அதே உரிமை பாலாண்ணாவுக்கும் உண்டு. என்னைக் கண்டிக்கிறதுக்கும், தண்டிக்கிறதுக்கும் அவரை விட்டா யார் இருக்கா?”ன்னு சொன்னேன். அண்ணன் தலைமையிலேதான் எனக்கு கல்யாணம் ஆச்சி. நான் எங்கிருந்தாலும், நல்லா இருக்கேனா, சேட்டை பண்ணுறேனான்னு அண்ணன் விசாரிச்சிக்கிட்டேதான் இருக்கும்.

பாலாண்ணனுக்கு அடுத்து என் வாழ்க்கையோட இன்னொரு பிதாமகன் அமீரண்ணன். பாலாண்ணன் கோடு போட்டாருன்னா, இவரு என் லைஃப்லே ரோடு போட்டாரு. அந்த நன்றிக் கடனுக்குத்தான் என் வீட்டுக்கே இவங்க ரெண்டு பேரு பேரையும் சேர்த்து ‘பாலா அமீர் இல்லம்’னு பேரு வெச்சிருக்கேன்.

அமீரண்ணனுக்கும் பாலாண்ணன் மாதிரியே கோவம் எக்கச்சக்கமா வரும். சரியா நடிக்கலைன்னா அடிக்கவே வந்துடும். ஆனா, கரெக்டா பண்ணிட்டா ரசிச்சி சிரிக்கும். அண்ணன் முகத்துலே பூக்குற அந்த புன்னகைதான் எனக்கு தேசிய விருது. இவங்களை மாதிரியே சீனுராமசாமிண்ணன், லிங்குசாமிண்ணன், சமுத்திரக்கனிண்ணன்னு ஏகப்பட்ட அண்ணனுங்க எனக்கு பிதாமகனுங்களா இருந்து வழிநடத்துறாங்க.

பெரியவங்க சொன்னா, சின்னவங்க கேட்டுக்கணும். இந்த அண்ணன்மாருங்க சொன்னதையெல்லாம் கேட்டதாலேதான் நான் நல்லாருக்கேன். ஆலோசனை சொன்னா கேட்குறதுக்கு இன்னிய பசங்க தயாரா இல்லைங்கிறதுதான் எனக்கு வருத்தமா இருக்கு. வீட்டுலே திட்டுறாங்க, ரோட்டுலே திட்டுறாங்கன்னு கோவப்படுறாங்க. நீங்க தடம் மாறி போயிடக்கூடாதுன்ங்கிற பயத்துலேதானே அவங்க திட்டுறாங்க. கேட்டுக்க வேண்டியதுதானே? பெரியவங்களை உதாசீனப்படுத்தி யாராவது வளர்ந்திருக்கோம்னு எனக்குக் கண்ணுலே காட்டுங்க பார்க்கலாம்.

என்னை வழிநடத்துற பெரியவங்க ஆலோசனையைக் கேட்காம புரொடக்‌ஷனில் இறங்கி, நான் எவ்வளவு அவஸ்தைப்பட்டேன் தெரியுமா? அவங்ககிட்டே கேட்டிருந்தா, “உனக்கு எதுக்குடா தேவையில்லாத வேலை, ஒழுங்கா நடிக்கிற வேலையைப் பாரு”ன்னு துரத்தி விட்டிருப்பாங்க. அவங்ககிட்டே கேட்காததுக்கு விலை ரெண்டரை கோடி. ஒரு கோடி கடனை அடைச்சிட்டு, இன்னும் ஒன்றரை கோடியை அடைக்க இரவும் பகலுமா அலைஞ்சிக்கிட்டிருக்கேன்.

காசு போனா போவுது. அந்த விபரீத முயற்சியாலே என் சொந்தத்துலே நாலு பேரை இழந்தேன். என் சகோதரி மகன், என் நிலைமையைப் பார்த்து வருத்தப்பட்டே செத்துப் போனான். கடன்காரங்களுக்கு பயந்து எத்தனையோ நாள் தலைமறைவா வாழ்ந்திருக்கேன்.

என் நிலைமையைப் பார்த்து என் அம்மா சொல்லிச்சு. “மகனே, நீ ஸ்கூலுக்குப் போய் படிக்க வேண்டிய விஷயங்களை இப்போ ரெண்டரை கோடி செலவு பண்ணி கத்துக்கிட்டே. பணம் போயிடிச்சுன்னு கவலைப்படாதே. அதைவிட விலைமதிப்பான அனுபவங்களைக் கத்துக்கிட்டே. இனிமே இன்னும் நிறைய சம்பாதிப்ப...”

அம்மாவோட ஆறுதல்தான் இந்த கருப்பு ஓடி ஓடி உழைக்கிறதுக்கான பெட்ரோல்.இந்த கஞ்சா, எதுக்கும் அஞ்சாதவன்!வாழ்க்கை கொஞ்சம் என்னோட விளையாடிப் பார்க்கணும்னு நினைக்குது. வாடி... வா... நீயா நானா பார்த்துருவோம்!

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)