இளநீருக்கு தவிக்குது மனசு!ரீடர்ஸ் கிளாப்ஸ்!

நல்ல படங்கள் வரும்போதெல்லாம் அதற்கு சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கும் ‘வண்ணத்திரை’யின் பாரம்பரியம், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’க்கு எழுதிய விமர்சனத்திலும் வெளிப்பட்டது. வழக்கமாக 2 பக்கங்களில் விமர்சனத்தை நறுக்கென்று முடித்துக் கொள்ளும் நீங்கள், 5 பக்கங்களை மக்களின் படமான ‘மேற்குத் தொடர்ச்சி மலை’க்கு ஒதுக்கியது மகிழ்ச்சி.
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

பணமதிப்பிழப்பால் நாடு எவ்வளவோ பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. அதனால், முதலிரவு நின்று போனதாக யோசித்த ‘பரிகாரம்’ படத்தின் இயக்குநர் டாக்டர் குருவின் வித்தியாசமான சிந்தனை பாராட்டுக்குரியது.
- குந்தவை, தஞ்சாவூர்.

முன்னட்டையில் பளிச்சென்று ரெஜினா தெரிந்தாலும், சிறிய படமாக வாய்விட்டுச் சிரித்த சூப்பர் ஸ்டாரே வாசகர்களைக் கவர்ந்தார்.
- கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.

நடுப்பக்க தென்னைமரத்தைக் கண்டதிலிருந்து இளநீர் குடிக்க கிடந்து தவிக்குது மனசு.
- வேணுகோபால், தாம்பரம்.

மாடர்ன் பெண்ணை திருமணம் செய்துகொள்வதா, கிராமத்துப் பெண்ணை திருமணம் செய்துகொள்வதா என்கிற வாசகரின் குழப்பத்துக்கு சரோஜாதேவி கொடுத்த பதில் தெளிவு.
- மாணிக்கம், தூத்துக்குடி.

‘டைட்டில்ஸ் டாக்’ பகுதியில் பாடலாசிரியர் அருண்பாரதி எழுதிய கட்டுரை சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திரை ஆளுமையின் நெகிழ்ச்சியான மறுபக்கத்தை எடுத்துக் காட்டுவதாக இந்தப் பகுதி சிறப்பாக தொகுக்கப்படுகிறது.
- ரமேஷ், பாண்டிச்சேரி.

வாரத்துக்கு பன்னிரண்டு புளோ-அப்புகள் என்பது எங்களைப் போன்ற வாலிபர்களின் யானைப்பசிக்கு சோளப்பொரியாக அமைகிறது. மாதத்துக்கு ஒருமுறை மொத்தப் புத்தகமுமே புளோ-அப்புக்காக ஒதுக்கப்பட்டால் மகிழ்ச்சி அடைவோம்.
- சரண்ராஜ், சென்னை-5.