தொட்ரா



ஆணவக்கொலை அட்டகாசம்!

பழனி அருகே சமத்துவபுரத்தில் வசிக்கும் நாயகன் பிருத்விராஜும் சாதிச் சங்கப் பிரமுகராக இருக்கிற எம்.எஸ்.குமாரின் தங்கை நாயகி வீணாவும் உயிருக்கு உயிராகக் காதலிக்கிறார்கள். ரெகுலர் லவ் டெம்ப்லேட்டான இந்தக் கதையை வைத்துக்கொண்டு சமகாலத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட ஆணவக் கொலை நிகழ்வை திரைக்கதையில் சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிறது இந்தப் படம்.

நாயகன் பிருத்விராஜ், நாயகி வீணா ஆகியோரின் காதல் காட்சிகள் வழக்கம் போல் இருந்தாலும் நாயகனுக்கு சங்கர் என்றும், நாயகிக்கு திவ்யா என்றும் பெயர் சூட்டியிருப்பதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்கிற பதற்றத்துடன் படம் பார்க்க வேண்டியிருக்கிறது.

பிருத்விராஜ் கேரியரில் பெயர் சொல்லும் படமாக அமைந்துள்ளது இந்தப் படம். ஆட்டம், பாட்டம், காதல் என்று எல்லாவற்றிலும் நன்றாகத் தேர்ச்சி பெற்றிருக்கிறார். கல்குவாரியில் அவர் அடிவாங்கும்போது நமக்கும் வலிக்கிறது. நாயகி வீணா நல்வரவு. அழகாக இருக்கிறார். அதேசமயம் அழுத்தமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியின் அண்ணன் பவுன்ராஜ் என்கிற சாதிச் சங்கத் தலைவராக நடித்திருக்கும் எம்.எஸ்.குமார் இன்னொரு ஹீரோவைப் போல் படம் முழுக்க வருகிறார். புது நடிகர் போல் இல்லாமல் தேர்ந்த நடிகர் போல் நன்றாக நடித்திருக்கிறார். சாதி கவுரவத்தை மீறி தங்கைப் பாசத்தால் மனைவியை அடிக்கும் காட்சி நன்று.

எம்.எஸ்.குமாரை வைத்து சாதிச் சங்கத்தினர் செய்யும் அடாவடிகளை வெளிப்படுத்தியிருக்கும் அதேநேரம், இயக்குநர் ஏ.வெங்கடேஷை வைத்து இதுபோன்ற காதல் நிகழ்வை வைத்துக்கொண்டு பணம் பறிப்போரையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்கள்.உத்தமராசாவின் இசையில் சிம்பு பாடியிருக்கும் ‘பக்கு பக்குனு’ பாடல் உட்பட எல்லாப் பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன. செந்திலின் ஒளிப்பதிவில் பழனிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அழகாக இருக்கின்றன.

முடிவைத் தொடக்கத்திலேயே காட்டிவிட்டாலும் அதை நோக்கிய பயணத்தைத் தொய்வில்லாமல் கொண்டு செல்கிறார் இயக்குநர் மதுராஜ்.
உயர்சாதிக்காரர்கள், புரோக்கர் கும்பல், காவல் துறை ஆகியோரால் சாதி மீறிக் காதலிக்கும் காதலர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை விளக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். வேதனையாக இருக்கிறது. சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்கிற அம்பேத்கரின் வரிகளோடு படம் முடியும் போது மனம் கனக்கிறது.