முதலிரவுக் காட்சி இருக்கு.. ஆனா...! புதிர் போடுகிறார் ‘லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க’ டைரக்டர்“நான் இப்போது சினிமாவில் இயக்குநராக டிராவல் பண்ணுகிறேன் என்றால் அதற்கு இரண்டு பேர்தான் காரணம். முதலாமவர் என் குருநாதர் பெருமாள் நெர். இரண்டாமவர் எனக்கு படம் இயக்குவதற்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சரவணன் சார். இந்த இரண்டு நல் உள்ளங்களால் தான் என் கனவு நிறைவேறியது’’ என்று பழசை மறக்காமல் சென்டிமென்ட்டாக பேச ஆரம்பித்தார் ‘லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க’ படத்தின் இயக்குநர் சு.சத்தியசீலன்.

“படத்தோட டைட்டில் நல்லா இருக்கே?”

“இப்ப இருக்கிற டிரெண்டுக்கு படம் எப்படி இருக்கு என்பதைவிட டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் போன்ற விஷயங்களை ரசிகர்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். சூப்பர் ஸ்டார் நடிக்கும் ‘பேட்ட’ படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டதும் அதை லட்சக்கணக்கான மக்கள் லைக் பண்ணாங்க, ஷேர் பண்ணாங்க. அந்த வகையில் மக்கள் அதிகமாக உச்சரிக்கும் வார்த்தையான ‘லைக் பண்ணுங்க; ஷேர் பண்ணுங்க’ என்ற வாசகத்தை எங்கள் படத்துக்குத் தலைப்பா வெச்சதும் நாங்களே எதிர்பார்க்காத அளவுக்கு பாராட்டு குவிந்தது.”

“காதல்தான் கதைக்களமா?”

“எதிர் எதிராக இரண்டு வீடுகள். ஒண்ணு ஹீரோ வீடு. இன்னொண்ணு ஹீரோயின் வீடு. அந்த இரண்டு வீட்டுக்காரர்களும் வாரத்தில் நாலைந்து நாளாவது சண்டையிட்டுக் கொள்வார்கள். இவ்வளவு களேபரத்துக்கிடையே இரண்டு வீட்டைச் சேர்ந்த பையனும் பொண்ணும் லவ் பண்ணுகிறார்கள். பெற்றோர்களின் பகையை மீறி காதலர்கள் இணைந்தார்களா, இல்லையா என்பதை காதல், காமெடி என கமர்ஷியல் அம்சங்கள் கலந்து சொல்லியுள்ளேன்.

அவுட்லைனைக் கேட்கும்போது இது புளிச்சிப் போன கதையாகத் தெரியலாம். ஆனால் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். ஏன்னா, காதலர்களை ஒரு டீம் ஃபாலோ பண்ணுவார்கள். அது ஏன் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.”

“நடிகர்கள்?”

“ஹீரோ ஆச்சு. மலையாளத்தில் சில படங்கள் பண்ணியிருக்கிறார். தமிழில் இதுதான் முதல் படம். எந்த இடத்திலும் புதுமுகம் மாதிரி தெரியாது. மெச்சூரிட்டியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஹீரோயின் கேரக்டருக்கு துடுக்கான பெண்ணாகவும் அதே சமயம் தமிழ் தெரிந்த பெண்ணாகவும் தேவைப்பட்டது. பிரிஷா கதைக்குப் பொருத்தமாக இருந்தார். பிரிஷாவுக்கும் திரிஷாவுக்கும் ஓர் எழுத்துதான் வித்தியாசம். அதுபோல இருவருக்குமிடையே நடிப்பிலும் சின்ன அளவில்தான் வித்தியாசம் இருக்கும்.”

“மற்ற நடிகர்கள்?”

“ஹீரோவின் அம்மாவாக நளினி மேடம் பண்ணியிருக்கிறார். கதையோட மொத்த பாரத்தையும் அவர் தோள்மீதுதான் இறக்கி வைத்துள்ளேன். காமெடிக்கு கோதண்டம் இருக்கிறார். கேபிள் டிவி ஓனராக வர்றார். இந்தப் படம் கமிட்டான பிறகு அவருக்கு நிற்கமுடியாதளவுக்கு காலில் அடி. படப்பிடிப்பு நடந்த லொகேஷனுக்கே வந்து தன்னால் நீண்ட நேரம் நிற்க முடியாத காரணத்தைச் சொல்லி, உங்களால் சமாளிக்க முடிந்தால் நடிப்பதாகவும், இல்லை என்றால் அட்வான்ஸை திருப்பித் தருவதாகவும் சொன்னார்.

ஆனால் நான் முடிந்தளவுக்கு பண்ணுங்கள் என்று ரெக்வஸ்ட் பண்ணினேன். அவரும் கால் வலியைப் பொருட்படுத்தாமல் பண்ணிக் கொடுத்தார். படம் முடியும் போது அவருக்கு உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. முழுப் படமே ஹியூமரா இருந்தாலும் கோதண்டம் வரும் இடம் கலகலப்பாக இருக்கும். ஹீரோயின் அப்பாவா ‘நாடோடிகள்’ கோபால் பண்ணியிருக்கிறார். பரோட்டா முருகேஷ், ஈரோடு முருகசேகர், திடியன் ஆகியோருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”

“செளந்தர்யன்?”

“இந்தப் படம் ஆரம்பிக்கும் போது மியூசிக் டைரக்டரை கமிட் பண்ணவில்லை. முழுப் படத்தையும் செளந்தர்யன் சாரிடம் காண்பித்துதான் பாடல்களை வாங்கினேன். படம் பார்த்த அவர் உற்சாகமாக டியூன் போட்டுக் கொடுத்தார். இது அனிருத் சீசனாக இருந்தாலும் இந்தக் கதைக்கு பொருத்தமான இசையை சார் கொடுத்துள்ளார். இப்போதுள்ள அதிரடி டிரெண்டுக்கு மத்தியில் பாடல்கள் மக்களை மகிழ்விக்கும் விதமாக வித்தியாசமாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் பாலா. சீனியர் கேமராமேன்களிடம் வேலை செய்தவர். எனக்கு வலது கையாக இருந்து இந்தப் படத்தை சீக்கிரத்தில் முடித்து வைக்க உதவி செய்தார்.ஆர்ட் டைரக்டர் தேவராஜ், எடிட்டர் கோபி கிருஷ்ணா போன்ற சீனியர் டெக்னீஷியன்களின் ஒர்க் எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

தயாரிப்பாளர் சரவணன் சார் திருவண்ணாமலையில் அருணாச்சலம் தியேட்டர் நடத்தி வருகிறார். தியேட்டரில் மக்கள் என்ன மாதிரியான படங்களை ரசிக்கிறார்கள், என்ன மாதிரியான காட்சிகளை கை தட்டி ரசிக்கிறார்கள், என்ன மாதிரியான படத்திற்கு மக்கள்  கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது போன்ற புள்ளிவிவரங்களை நன்கு அறிந்தவர். நேர்மையான மனிதர். எப்போதும் ஒரே மாதிரி பேசுவார்.

நண்பர் மூலம் சாரோட அறிமுகம் கிடைத்தது. காமெடி படம் தயாரிக்கும் ஐடியாவில் இருப்பதைத் தெரிந்துகொண்டு இந்தப் படத்தின் கதையைச் சொன்னேன். முதலில்  ஒன்லைன் சொன்னேன். பிடித்திருந்தது.

அடுத்த நாள் முழு ஸ்கிப்ரிட்டைச் சொன்னேன். ‘கதை எனக்குப் பிடிச்சிருக்கு. இதை அப்படியே எடுத்துக் கொடுங்க’ என்று படப்பிடிப்புக்கான வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லி கிரீன் சிக்னல் கொடுத்தார். கதைக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்ததோடு முழுச் சுதந்திரம் கொடுத்தார்.”

“உங்களைப் பற்றி?”

“நாமக்கல் சொந்த ஊரு. 2000வாக்கில் சென்னை வந்தபோது டி.வி.தொடர்களில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் பெருமாள் நெர் சாரிடம் சினிமா பயின்றேன். படம் பார்த்துட்டு தயாரிப்பாளர் நிறைவாக வந்திருப்பதாக பாராட்டினார்.  

படத்துல முதல் இரவுக் காட்சி உட்பட ரொமான்ஸ் சீன்ஸ் இருக்கு; ஆனால் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி காட்சி கிடையாது. அந்த முதலிரவில் புதுமண ஜோடி பெட்ல கூட உட்காரமாட்டாங்க. கிளாமர் சுத்தமாகக் கிடையாது. முத்தக் காட்சி, இரட்டை அர்த்த வசனம் என்று விரசத்துக்கு துளியும் இடமிருக்காது. குடும்பத்துடன் அனைவரும் ரசித்துப் பார்க்கலாம்.”

- சுரேஷ்ராஜா