என்ன செய்து கொண்டிருக்கிறார் பேரரசு?
அறிமுகமாகும்போதே விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணியவர் இயக்குநர் பேரரசு. இவர் இயக்கிய ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ படங்கள் விஜய்க்கும், ‘திருப்பதி’ படம் அஜித்துக்கும் வெற்றிப்படங்களாக அமைந்தன. இயக்குநராக அறிமுகமாகி சுமார் பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் மீண்டும் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவதற்கு கதை ரெடி பண்ணி வைத்திருக்கும் இயக்குநர் பேரரசுவிடம் பேசினோம்.
“சினிமாவில் உங்கள் பயணம் எப்படி ஆரம்பித்தது?”
“இந்தப் பயணத்தை இயக்குநராக வருவதற்கு முன், இயக்குநராக மாறியபிறகு என்று இரண்டு பகுதிகளாக பிரித்துப் பார்க்கிறேன். என்னைப் பொறுத்தவரை பொருளாதார ரீதியாக நிறைய கஷ்டங்கள் இருந்தது. ஆனால் நான் எவ்வளவு பெரிய கஷ்டங்களைத் தாண்டி வந்தேன் என்று சொல்லமாட்டேன். அப்படிச் சொல்லவும் கூடாது. அது ஒரு முயற்சி.
படம் இயக்கலாம் என்று முடிவானபோது ஐந்தாறு கதைகளை ரெடி பண்ணி வைத்திருப்பேன். அப்போது வெளியாகும் படங்களில் என்னுடைய கதையைப் போல் சில படங்கள் இருந்தால் நான் ரெடி பண்ணிவைத்திருந்த கதையை தூரமாக தூக்கி வைத்துவிடுவேன். இப்போது கதைத் திருட்டு நடந்தால் கோர்ட்வரை செல்கிறார்கள். அப்போது நான் அப்படி பண்ணியதில்லை. எனக்கு கற்பனை வளம் இருப்பதால் அடுத்த கதையை ரெடி பண்ணிவிடுவேன்.
பத்து வருடங்களுக்கு முன்பே நான் இயக்குநராகிவிட்டேன் என்பதை நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இப்போது இருக்கிற சூழ்நிலையில் நிறையப் பேர் ஹிட் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள் பெயர் வெளியில் தெரிவதில்லை. டைட்டில், ஹீரோ, பாடல் சென்றடையுமளவுக்கு இயக்குநரின் பெயர் வெளியில் தெரிவதில்லை.
‘16 வயதினிலே’ வந்தவுடன் பாரதிராஜா சாரின் பெயர் வெளியில் தெரிந்தது. ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ வந்ததும் பாக்யராஜ் சாரின் பெயரும், ‘பாரதிகண்ணம்மா’ வந்ததும் சேரன் சாரின் பெயரும் தெரிந்தது. அந்த வரிசையில் எனக்கும் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.” “உங்கள் முதல் படமான ‘திருப்பாச்சி’ பற்றி சொல்லுங்கள்...”
“எனக்கு ‘திருப்பாச்சி’ முதல் படம். விஜய் சாருக்கு 42வது படம். ஆனால் அந்தப் படத்திலேயே பெரிய இயக்குநருக்கு கொடுக்கும் மரியாதையை எனக்குக் கொடுத்தார். அதுமட்டுமில்ல, முதல் பட ஹீரோ மாதிரி என்னிடம் நடந்து கொண்டார். விஜய் சாரைப் பொறுத்தவரை முதலில் கதையை பொறுமையாகக் கேட்பார். கதை பிடித்திருந்தால் சில திருத்தங்கள் சொல்வார். அதன் பிறகு முதல் காப்பி ரெடியாகும் வரை படத்தில் அவருடைய குறுக்கீடு இருக்காது.”
“எப்படி ‘திருப்பாச்சி’ லைன் பிடிச்சீங்க?”
“உதவி இயக்குநராக இருந்தபோது சென்னை சைதாப்பேட்டையில் வாடகைக்குக் குடியிருந்தேன். எங்கள் தெருவில் அப்போது கிராமத்திலிருந்து திருமணமான ஒரு தம்பதி புதிதாக வந்தார்கள். அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றில் மஞ்சள் ஒட்டிக் கொண்டிருந்தது. அப்போது சென்னையில் பரவலாக கோஷ்டித் தகராறு நடக்கும். சைதாப்பேட்டையில் கோஷ்டிச் சண்டைக்கு பஞ்சமிருக்காது.
ஒரு நாள் அந்தப் பெண் தன் வீட்டுக்கு எதிரில் இருக்கும் மளிகைக் கடைக்கு சென்றார். திரும்பி வீட்டுக்கு வருவதற்குள் கடை வாசலில் பெரிய கலாட்டா. அந்தப் பெண் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார். கணவனுடன் பட்டணத்தில் சந்தோஷமாக வாழவந்த அந்தப் பெண்ணின் மனசு எப்படி பாதிக்கப்பட்டிருக்கும் என்று யோசித்தேன். பொதுவாக கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சென்னை பெரிய கனவு. அந்தப் பொறிதான் ‘திருப்பாச்சி’. வாழ்க்கையில் வசதி முக்கியம் கிடையாது. நிம்மதி முக்கியம் என்பதை ‘திருப்பாச்சி’யில் சொல்லியிருந்தேன்.”
“விஜய், அஜித் இருவரையுமே இயக்கி இருக்கிறீர்கள்?”
“ரெண்டு பேருமே ரொம்ப சிம்பிள். ‘திருப்பதி’ படப்பிடிப்பு நடக்கும்போது ஒருமுறை அஜித் சார் மருத்துவமனை செல்லவேண்டியதால் ஒரு மணிநேரம் தாமதமாக வரும் சூழல் ஏற்பட்டது. உடனே ஷாலினி மேடம் ஃபோன் பண்ணி என்னிடம் எக்ஸ்கியூஸ் கேட்டார். இன்ஃபர்மேஷன் பண்ணாமல் பர்மிஷன் கேட்டது எனக்கு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இயக்குநருக்கு நாம்தான் வாய்ப்பு கொடுத்தோம் என்ற மனநிலையில் அவர்கள் ஒருபோதும் நடந்துகொண்டதில்லை. இது அவர்களின் தொழில் பக்தியைக் காண்பிக்கிறது.
விஜய் சார் 6 மணிக்கு மேல் படப்பிடிப்பில் இருக்கமாட்டார். ஞாயிற்றுக்கிழமைகளில் வரமாட்டார் என்று நண்பர்கள் சிலர் பயமுறுத்தினார்கள். ஆனால் ‘திருப்பாச்சி’யில் மூன்று ஞாயிற்றுக்கிழமைகள் விஜய் சார் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஐந்தாறு நாள் மாலை ஏழெட்டு மணி வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.”
“ரொம்ப வேகமா வளர்ந்தீங்க. இப்போ பெரிய இடைவெளி விழுந்திருக்கு...”“நான் முழுவதுமாக சினிமாவைவிட்டு விலகிவிடவில்லை. மீடியாக்கள் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஏராளமான ஆடியோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறேன். நான் ஆடியோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் காரணம், புதியவர்களை சப்போர்ட் பண்ணவேண்டும் என்கிற நோக்கம். நான் கிழக்குக் கடற்கரையில் வசித்து வருகிறேன். நிகழ்ச்சி நடக்கும் பிரசாத் லேப் அல்லது சத்யம், கமலா திரையரங்குகள் உள்ள இடங்களுக்கு வரவேண்டுமானால் டிராபிக் நெரிசலில் மணிக்கணக்கில் டிராவல்பண்ணி வரவேண்டும்.
சினிமா கொடுத்த சாப்பாட்டைத்தான் நான் சாப்பிடுகிறேன். என்னால் ஒரு படத்துக்கு ஃபைனான்ஸ் பண்ணமுடியாது. ஒரு படத்தை வெளியிட முடியாது. என்னால் முடிந்த ஒரே விஷயம் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமே. அதைச் செய்யலாம் என்றுதான் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்று யார் அழைத்தாலும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருகிறேன். அந்தச் செயல் நான் மக்களுடன் தொடர்பு எல்லையில் இருக்கும்படியாக வைத்துள்ளது. அதற்கு மீடியாவுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.”
“மறுபடியும் விஜய், அஜித்தை வைத்து படம் இயக்குவீர்களா?”
“இரண்டு பேருக்குமே கதை ரெடி பண்ணிவைத்திருக்கிறேன். எனக்கு படம் பண்ணக்கூடாது என்ற மனநிலையில் இருவரும் இல்லை. தொடர்ந்து அவர்களைத் தொந்தரவு செய்யமாட்டேன். கதை ரெடியானதும் அவர்களுக்கு தகவல் கொடுப்பேன். எப்போது சந்திக்கலாம் என்பதைத் தெரிவித்துவிட்டு ஞாபகமாக அழைப்பார்கள்.
அப்படி ‘சர்கார்’ பட டைமில் விஜய் சாரை சந்தித்து கதை சொன்னேன். நான் கொண்டுபோனது அரசியல் கதை என்பதால் ‘பிறகு பண்ணுவோம்’ என்றார். பிறகு வேறு ஒரு கதை சொன்னேன். அது பிடித்திருந்தது. அழைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அஜித் சாருடனும் நல்ல தொடர்பில் இருக்கிறேன்.”
“இப்போ என்ன பண்ணிட்டிருக்கீங்க?”
“என்னுடைய நண்பர் ஏழுமலை இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் அந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் வேடம்.”
“இப்போ வர்ற இயக்குநர்களை கவனிக்கிறீர்களா?”
“முன்பு சினிமாவைப் பார்த்து சினிமா கற்றோம். இப்போ வர்ற 80 சதவீத படங்களில் திரைக்கதை நாலெட்ஜ் இல்லாமல் படம் பண்ணுவதாகத் தோன்றுகிறது. திரைக்கதையில் தடுமாறுகிறார்கள். அந்த ஒரு விஷயத்தில் இப்போதுள்ள இளைஞர்கள் வீக்காக இருக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு கதை மட்டும் போதாது. சினிமா என்பது திரைக்கதையைச் சார்ந்தது.
கதை நாவலிலும் இருக்கிறது. ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘அந்தநாள்’ போன்ற எத்தனையோ படங்கள் பாடல்கள் இல்லாமல் வந்துள்ளது. வசனம் இல்லாமல் ‘பேசும் படம்’ வந்துள்ளது. கதை இல்லாமலும் படம் வந்துள்ளது. படத்துல கதையே இல்லை என்று பிறர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். கதை சரியில்லை என்றாலும் ஓடுவதற்கு வாய்ப்பு உண்டு. திரைக்கதை சரியில்லாத படம் ஓடாது. இளைஞர்கள் திரைக்கதையில் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி அவர்களிடம் கற்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.”
- சுரேஷ்ராஜா
|