ஷகீலாவின் நண்பன் நான்!சினிமா பின்புலம், பண பலம் இருப்பவர்கள் சினிமாவில் நடிப்பது பெரிய சாதனையே கிடையாது. ஆனால் எந்தவித பின்புலமும் இல்லாமல், செக்யூரிட்டியாக வேலை பார்த்துவந்த சுரேஷ் இப்போது ஹீரோவாக டூயட் பாடிக் கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் வெளிவந்த ‘மான்குட்டி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர். அவரிடம் பேசினோம்.

“சினிமாவுக்கு எப்படி வந்தீங்க?”

“எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. பத்தாம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்தேன். சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என்னுடைய சின்ன வயது கனவு என்பதால் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. எனக்கு சினிமா பின்னணி என்று எதுவும் கிடையாது. வாய்ப்பு கேட்கப் போன இடங்களில் பணம் இருக்கிறதா என்றுதான் கேட்டார்கள்.

ஜனகராஜ், மறைந்த ரவிச்சந்திரன் ஐயா போன்றவர்களிடமும் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறேன். வாய்ப்பு தேடும்போது கையில் பணம் இருக்காது. சிலசமயங்களில் டிப்டாப்பாக உடை அணிந்து கல்யாண வீட்டில் கூட சாப்பிட்டிருக்கிறேன். ஒருகட்டத்தில் கையில் பணம் இல்லாமல் சென்னையில் வாழ முடியாது என்பதால் செக்யூரிட்டியாக வேலை பார்க்க ஆரம்பித்தேன்.

அந்த வகையில் நான் செய்யாத வேலை இல்லை. பசி அடங்கினாலும் கலைப் பசிக்கு உணவு கிடைக்காத காரணத்தால் மீண்டும் ஊருக்கு நடையைக் கட்டினேன். எங்க ஊர்க்காரர் அசோக் அண்ணன் ஆலோசனைப்படி மீண்டும் நடிக்க வாய்ப்பு தேடும்போதுதான் ‘மான்குட்டி’ படத்தில் கமிட்டானேன்.”

“முதன்முதலாக கேமரா முன்பு நின்ற அனுபவம்?”

“சினிமாவை நான் எங்கும் கிளாஸ் போய் கற்றுக்கொள்ளவில்லை. பழைய படங்கள்தான் என்னுடைய சினிமா குரு. ‘பாளையங்கோட்டை’ என்ற படத்தில் சின்ன வயது ஹீரோவாக நடித்த அனுபவம் கைகொடுத்தது.

இயக்குநர் பூபாலன் என்னுடைய ஃபோட்டோ பார்த்துவிட்டு ‘மான்குட்டி’ வாய்ப்பைக் கொடுத்தார். சினிமாவில் என்னிடம் பணம் கேட்காமல் ‘மான்குட்டி’யில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தது.

அதாவது நான் சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்த படம். பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கேரக்டர் சவாலாக இருந்தது. ஒரு பாடலை ஒரே நாளில் எடுக்க வேண்டும் என்பதால் பெண்டு எடுத்துவிட்டார்கள். அந்த பாடல் காட்சி சவாலாக இருந்தது. ஆனால் டென்ஷன் இல்லாமல் நடிக்க முடிந்தது. காரணம், டான்ஸ் மாஸ்டர் பவர் சிவா.

படத்தில் எனக்கும் நாயகிக்கும் நெருக்கமான காட்சிகள் இருந்தது. ஹேமலதா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். காதல் காட்சிகளில் நடிக்க நான் தயங்கினேன். என் மனைவியிடம் படப்பிடிப்பில் நடந்த விஷயங்களைச் சொன்னபோது அவர்தான் என்னை உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார்.”

“அடுத்து?”

‘கூர்மை’. சஸ்பென்ஸ் படமாக உருவாகும் ‘கூர்மை’யில் எனக்கு கல்லூரி மாணவன் வேடம். எனக்கு ஜோடியாக ஹேமலதா நடிக்கிறார். இளங்கோ லக்ஷ்மண் இயக்குகிறார். நடப்பு சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுவரும் இந்தப் படம் நீதித் துறையின் நடவடிக்கைகளை கேள்வி கேட்கும் படமாக இருக்கும்.

‘முகச்சித்திரம்’ படத்தில் வித்தியாசமான கேரக்டர். எனக்கு ஜோடியாக அனிதா நடிக்கிறார். குடும்பத்தினரால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் பழிவாங்கும் படலம்தான் படம். தர் இயக்குகிறார். படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. அங்கு ரிஸ்க்கான மலைப் பகுதியில் படப்பிடிப்பு நடத்தினோம். சீனியர் நடிகர்களே தயக்கம் காட்டக்கூடிய சண்டைக் காட்சியில் ரிஸ்க் எடுத்திருக்கிறேன்.”

“என்ன மாதிரி வேடங்களில் நடிக்க ஆர்வம்?”

“எனக்கு ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க பிடிக்கும். ஆக்‌ஷன் நடிகர்களில் அஜித் சாரை பிடிக்கும். அவர் என்ன பண்ணினாலும் அது ஆக்‌ஷன். ஒரு படத்திலாவது அஜித் சாருக்கு தம்பியாக நடிக்க வேண்டும். ஆக்‌ஷன்  படங்களில் நடிப்பதற்காகவே உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறேன். உருளை, கருணை தவிர கத்தரி உட்பட காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவேன்.”

“சினிமாவில் உங்களுக்கு நண்பர்கள் இருக்கிறார்களா?”

“ஷகீலா அக்கா எனக்கு நல்ல நண்பர். அவர் நடித்த படங்களை வைத்து அவருடைய கேரக்டரை தீர்மானிக்க முடியாது. அவர்தான் எனக்கு சினிமாவில் வழிகாட்டியாக இருந்து உதவியிருக்கிறார். இன்னொரு நண்பர் நூரி சினிமா தொடர்பு இல்லாதவர். மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த சமூக சேவகர். பால்வினை நோயால் பாதிக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பாராமரித்து வருகிறார்.”

“பிடித்த நடிகை?”

“கீர்த்தி சுரேஷ். அவர் பெயரிலும் சுரேஷ் இருப்பதால் பிடிக்கும். அவருடன் நடித்தால் மகிழ்ச்சி.”

“சினிமா தவிர?”

“சினிமாவில் நான் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய குடும்பத்தினரின் விருப்பம். அதனால் என்னுடைய கவனம் முழுவதும் சினிமாவில் மட்டுமே. என்னுடைய அம்மா, மனைவி, மைத்துனர் என்று குடும்பத்தினர் சப்போர்ட் பண்ணுகிறார்கள். என்னுடைய மனைவி சொந்தமாக காய்கறி வியாபாரம் பண்ணுகிறார் கோயம்பேடு மார்க்கெட்டில். பர்ச்சேஸ் உட்பட அந்த வியாபாரத்துக்கு நானும் உதவியாக இருக்கிறேன்.”

- ராஜா