மண் சிவக்க வைத்தவர்!
மின்னுவதெல்லாம் பொன்தான்-44
இன்றிலிருந்து 36 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1983ம் ஆண்டு வெளியாகி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’. இன்றைய இளம் தலைமுறை அதிகம் அறிந்திராத படம். படத்தை இயக்கியவர் அப்போது தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றிய ஸ்ரீதர் ராஜன். இவரைப் பற்றி கடைசியாகப் பார்க்கலாம்.
முதலில் படம் பற்றி... தஞ்சை மாவட்டம் கீழ்வெண்மணியில் ஒரு ரூபாய் கூடுதலாக கூலி கேட்டதற்காக 40 விவசாயக் கூலித் தொழிலாளர்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து இந்திரா பார்த்தசாரதி ‘குருதிப்புனல்’ என்ற நாவலை எழுதியிருந்தார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. இதனைப் படித்த அன்றைய மேற்கு வங்க அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா கீழ்வெணிமணி சம்பவத்தை மையமாக வைத்து வங்க மொழியில் ஒரு படம் இயக்குமாறு தர் ராஜனைக் கேட்டார். அவரும் அதற்கான முயற்சியில் இறங்கினார். பிறகு இந்தியில் இயக்க முயன்றார்.கடைசியாக யோசித்தார், ஏன் தமிழில் படமாக எடுத்தால் என்ன என்று. அதன் விளைவுதான் கண் சிவந்தால் மண் சிவக்கும் படம்.
நந்தார் கதையையும், கீழ்வெண்மணி சம்பவத்தையும் இணைத்து புதுமையான முறையில் அந்தப் படத்தை இயக்கினார். விஜயமோகன், ராஜேஷ், ரவீந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், கல்கத்தா விஸ்வநாதன் போன்றவர்கள் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத் திருந்தார். ‘மனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்...’ என்ற உணர்ச்சிமிகு பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றது.
சத்யஜித்ரேயின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் சோமந்த்ராய் ஒளிப்பதிவு செய்திருந்தார். படத்தின் தொடக்க காட்சியில் மாற்றுத் திறனாளிகள் போராடிக் கொண்டிருப்பார்கள். அந்த வழியாக வரும் அமைச்சர், “ஏம்பா கண்ணு, காலு, கையெல்லாமா அரசாங்கம் தரும்” என்று கோபமாகக் கூறிவிட்டு நடிகையின் படத் துவக்க விழாவிற்கு வேகமாகச் செல்வார். படம் முழுக்க அன்றைய அரசியலை இன்றைக்கும் பொருந்துகிற காட்சிகளில் விளாசித் தள்ளியிருப்பார்கள்.
அந்த ஆண்டிற்கான சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருது தர் ராஜனுக்கு கிடைத்தது. தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தனியாக பாராட்டு விழா நடத்தி ஸ்ரீதர் ராஜனுக்கு அண்ணா விருது வழங்கினார். இந்தப் படத்திற்குப் பிறகு தர் ராஜன், ‘இரவுப் பூக்கள்’ படத்தை இயக்கினார். வில்லனாக நடித்துக் கொண்டிருந்த சத்யராஜ் ஹீரோவாக நடித்த முதல் படம். இந்தப் படமும் வெற்றி பெற்றது. ‘பூக்கள் விடும் தூது’ என்ற படம்தான் அவரது கடைசிப் படம். அதன் பிறகு அவர் படம் எதுவும் இயக்கவில்லை.
“நான் நினைத்த சினிமாவை எடுக்க முடியவில்லை அதனால் சினிமாவை விட்டு விலகினேன். சமரசம் செய்து கொண்டிருந்தால் நானும் பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் மாதிரி தொடர்ந்து படம் இயக்கி இருப்பேன்” என்று தன்னுடைய சினிமா விலகல் குறித்து தர் ராஜன் சொல்லி இருக்கிறார்.
சினிமா விமர்சகராக இருந்த தர்ராஜன், அதன் பிறகு விளம்பரக் கம்பெனிகளில் பணியாற்றினார். பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் மகள் ஜெயாவை திருமணம் செய்து கொண்டார். தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றிய தர் ராஜன் இடதுசாரி சிந்தனையாளர். அன்றைக்கிருந்த தேசிய தலைவர்களுக்கு நெருக்கமாக இருந்தார். தணிக்கைக் குழு உறுப்பினராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.
(மின்னும்)
●பைம்பொழில் மீரான்
|