ஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான்! இயக்குநர் குமுறுகிறார்



‘இந்திய இதிகாசங்களில் புகழ்பெற்ற  இதிகாசம் ராமாயணம். அதில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தண்டகன்’. இதுவரை பார்த்திராத தண்டகனின் புதிரான குணச்சித்திரம் எப்படி இருக்கும்? அவன் மன இயல்பு எத்தகையது என்பதை ‘தண்டகன்’ படம் பார்த்தால் உணர முடியும்’ என்கிறார் படத்தின் இயக்குநர் கே.மகேந்திரன்.

இவர் பின்னலாடை நகரமான திருப்பூரைச் சேர்ந்தவர். சினிமாவில் யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்கவில்லை என்றாலும் இன்றைய சினிமாவைப் பற்றிய விவரங்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார். ஆடியோ வெளியீட்டை முடித்துவிட்டு ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்தவரைச் சந்தித்தோம்.

“அது என்ன தண்டகன்?”

“ஒரு கதை வெளியாகிறது என்றால் எதாவது ஒரு பாதிப்பின் வெளிப்பாடாக இருக்கும். அந்தமாதிரி இது எனக்குள் பாதிப்பை உண்டாக்கிய கதை. ஆனால் அந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது இல்லை. உலகில் எங்கும் நடக்காத கதையை மனிதன் கற்பனை பண்ணமுடியாது. நடந்தவைகளிலிருந்து தான் கதைகள் உருவாகிறது.

அந்த வகையில் இதில் ஒரு உண்மைச் சம்பவம் கதையின் மையப்புள்ளியாக இருக்கும். அந்த சம்பவம் என்னை பாதித்ததால் இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என்று சொல்லியிருக்கிறோம். அந்த வகையில் ராமாயணத்தில் தீய குணம் கொண்டவன் தண்டகன். அதுபோன்ற குணம் கொண்டவன் இப்போது இருந்தால் சமூகம் எப்படிப்பட்ட பாதிப்புகளைச் சந்திக்கும் என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன்.”

“ஹீரோ அபிஷேக்...?”

“எல்லோரும் இதே கேள்வியைக் கேட்கிறார்கள். இந்தப் படத்துக்கு கண்டிப்பான அதிகாரியாகவும்,  அதேசமயம் இரக்ககுணத்தை வெளிப்படுத்தக்கூடியவருமான நடிகர் தேவைப்பட்டார். இது நகர்ப்புப்  பகுதியில் நடக்கும் கதை என்பதால் அந்த நேட்டிவிட்டிக்கும் தகுந்த மாதிரி நடிகர் தேவைப்பட்டார்.

அவ்வகையில் அபிஷேக் கதைக்கு பொருத்தமாக இருந்தார்.  ஏற்கனவே ‘ஸ்கெட்ச்’, ‘மன்னர் வகையறா’  போன்ற படங்களில் அவருடைய திறமையை வெளிப்படுத்தியிருந்தார். முதல் சந்திப்பிலேயே அபிஷேக்தான் நாயகன் என்ற முடிவுக்கு வந்தேன். அவர் பண்ணிய கதாபாத்திரங்களில் இந்தப் படம் மாறுபட்டதாக இருக்கும்.”

“ஹீரோயின்?”

“மனோசித்ரா நாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். படத்தில் அவருக்கான போர்ஷன் குறைவாக இருந்தாலும் அவருடைய கேரக்டர் எல்லோராலும் பேசப்படும். முக்கிய வேடங்களில் அஞ்சு கிருஷ்ணன், சரண்யா ரவி, ப்ரியா, தீபா, எலிசபெத், கஜராஜ், ‘சூப்பர்குட்’ சுப்பிரமணி, ஆதவ், ‘நான்’ சரவணன், ராம், வீரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நெகட்டிவ் கேரக்டரில் சாய்ராஜ் நடித்திருக்கிறார்.”

“படத்துல மெசேஜ் எதாவது..?”

“இரக்கமில்லாத மக்கள் இருக்கும்வரை அப்பாவிகளும் பொதுஜனங்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதுதான் படத்தோட ஹைலைட். என்னால் ஒரு விஷயத்திற்கு உத்தரவாதம் அளிக்கமுடியும். படத்துல நிறைய இன்ட்ரஸ்ட்டிங்கான விஷயங்கள் இருக்கிறது. அதை நீங்கள் படம் வெளிவந்தபிறகு பார்த்தால்தான் சிறப்பாக இருக்கும்.”

“பாடல்கள் நல்லாயிருக்கே...?”

“ஷ்யாம் மோகன் இசையமைத்திருக்கிறார். படத்துல மொத்தம் 5 பாடல்கள். மோகன்ராஜ் நான்கு பாடல்களை எழுதியுள்ளார். ‘தண்டகன்’ என்ற பாடலை நானும் எழுதியுள்ளேன். அடிப் படையில் எனக்கு இசை ஞானம் உண்டு. அந்த வகையில்  எந்த இடத்தில் எந்தமாதிரி இசைக்
கருவிகள் இடம் பெற வேண்டும் என்ற ஞானம் உண்டு.

இளம் வயதில் ஏராளமான இசைக் கச்சேரிகள் பண்ணியிருக்கிறேன். தபேலா, பேங்கோஸ், ட்ரிபிள் காங்கோ போன்ற வாத்தியங்களை வாசிக்கத் தெரியும். பாடல்களில் எந்த இசைக்கருவிகள் இருந்தால் நல்லா இருக்கும் என்று சொன்னேன். ஒரு பாடலில் கூட கீ போர்டு தொடவில்லை. எல்லாமே லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் இசையமைப்பாளரிடம் நான் கேட்டதைக் கொடுக்கும் ஆற்றல் இருந்தது.

தளபதி ரத்னம் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ‘தெரு நாய்கள்’, ‘சூப்பர் டூப்பர்’ உட்பட ஏராளமான படங்களுக்கு ஒர்க் பண்ணியவர். ஜிம்மி ஜிப், டிராலி இல்லாமலேயே Gimbal shot எடுத்துக்கொடுத்தார். வசந்த் நாகராஜ் எடிட்டிங் பண்ணியிருக்கிறார். பில்லா ஜெகன் ஆக்‌ஷன் காட்சிகளை ரிஸ்க் எடுத்து பண்ணிக் கொடுத்தார்.

எனக்கு பெரிய இயக்குநரிடம் உதவி இயக்குநராக இருந்த அனுபவமோ,  சினிமாவில் பல வருட  அனுபவமோ கிடையாது.  சொந்தமாக பிசினஸ் பண்ணிக்கொண்டிருந்தேன். படம் பண்ணலாம் என்று முடிவு செய்தபோது என்னுடைய தம்பி இளங்கோவன் தயாரிக்க முன்வந்தார்.
“ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது?”

“ஓர் இயக்குநர் என்ன எடுக்கப்போகிறோம் என்பதில் தெளிவாக இருந்தாலே ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன்களிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்துவிடும். இந்தப் படத்தில் எனக்கு வேண்டும் என்று நினைத்த விஷயங்களை ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் களிடம் தெளிவாகச் சொன்னேன். அதனால் நான் நினைத்ததை என்னால் படமாக்கமுடிந்தது.

அதுமட்டுமில்ல, முதல் நாளில் இயக்குநர் வேலைசெய்யும் ஸ்டைலிலேயே இயக்குநர் விஷயம் தெரிந்தவரா, இல்லையா என்பது தெரிந்துவிடும். இயக்குநர் திணறிக்கொண்டிருந்தாலோ அல்லது  ஷாட் சொல்லத் தெரியவில்லை என்றாலோ அனுபவம் இல்லாதவர் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் நான் எல்லாவற்றையும் தெளிவாகச் சொன்னேன். என்னுடைய ஆக்டிவிட்டியைப் பார்த்துவிட்டு இயக்குநர் எல்லாத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார் என்று முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். அந்தவகையில் படத்தில் எனக்குத் தெரியாமல் ஒரு ஃப்ரேமும் யாரும் ஃபிக்ஸ் பண்ணவில்லை.”

“நீங்கள் யாரிடமும் உதவி இயக்குநராகப் பணியாற்றியதில்லையாமே?”

“எனக்கு சொந்த ஊர் திருப்பூர். படிக்கும் காலத்திலிருந்தே தமிழ் ஆர்வம் அதிகம். சினிமா பார்ப்பது பிரதான பொழுதுபோக்கு. 90களில் சினிமாவில் நுழையலாம் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்தேன். ‘தினந்தோறும்’ நாகராஜன் என்னுடைய நண்பர். சினிமாவில் எனக்கும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாருடனும் பழகுவேன். டிஸ்கஷன் போன்ற எதிலும் கலந்துகொண்டதில்லை.

ஆனால் எனக்கு எழுத்தாற்றல் உண்டு. அதனால் நண்பர்கள் கதை ரெடி  பண்ணினால் என்னிடம் ஒப்பீனியன் கேட்பதுண்டு. அப்போது நல்லா வரும்... நல்லா வராது... என்பதைச் சொல்லிவிடு வேன். அவ்வளவுதான் எனக்கு சினிமா பரிச்சயம். அந்த சமயத்தில் என்னுடைய நண்பர்களின் போராட்டம் அதிகமாக இருந்தது. எனக்கு சினிமா சரிப்பட்டு வராது என்று தோன்றியது.

ஏன்னா, அப்போதே நான் மாதம் பத்து லட்சம் டர்ன் ஓவர் பண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது அது பெரிய தொகை. மற்ற தொழில்களில் வேலை செய்தால் பணம் கிடைக்கும். சினிமாவில் அப்படி இல்லை. இப்போது அரசாங்கம் மலிவுவிலையில் உணவகம் நடத்துவதால் உதவி இயக்குநர்களின் நிலைமை பரவாயில்லை. அப்போது கர்ண கொடூரமாக இருந்தது.”

“படம் பண்ணிய இயக்குநர்களே தடுமாறும்போது நீங்கள் எந்த தைரியத்தில் படம் எடுக்க வந்துள்ளீர்கள்?”

“சினிமாவைப் பார்த்துதான் சினிமா எடுத்துள்ளேன். ஃபீல்ட் அனுபவம் இல்லையென்றாலும் நிறைய விஷயங்களை ஸ்டடி  பண்ணியிருக்கிறேன். நான் சினிமாவில் இல்லை என்றாலும் சினிமாவில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் இருக்கிறது என்று தெரியும். சினிமாவில் எனக்கு நண்பர்கள் இருந்தாலும் யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. ஏன்னா, ஒருவரை அழைத்தால் இன்னொருவருக்கு மனக்கசப்பு வரும். அதனால் அவர்களைத் தவிர்த்தேன். லாபமோ நஷ்டமோ நானே சுயமாக களத்தில் இறங்கி மோதிப் பார்க்கலாம் என்று முடிவு பண்ணினேன். படம் முடிந்தபிறகுதான் நண்பர்களுக்கு நான் படம் பண்ணும் விஷயம் தெரியும்.

இன்று படம் வந்தால் முதல் பாதி ஓ.கே, இரண்டாவது பாதி சரியில்லை என்று பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களை ஐந்து நிமிடம்கூட சலிப்படைய வைக்காது. முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை விறுவிறுப்பாக இருக்கும்.
நான் ஒரே நாளில் சென்னைக்கு வந்து படத்தை ஆரம்பிக்கவில்லை. இந்தப் படத்துக்காக இரண்டு வருடம் எடுத்துக்கொண்டேன். ஆறுமாதம் என்ன பண்ணப்போகிறேன் என்பதை துறை ரீதியாக ஆய்வு பண்ணினேன்.

6 மாதம் செலவழித்து கதையை ஃபைனல் பண்ணினேன். முதல் ஷெட்யூலில் சாங், டாக்கி போர்ஷன் எடுத்தேன். ஒரு வாரத்திலேயே இன்னும் கொஞ்சம் பெட்டராகப் பண்ணினால் நல்லா இருக்கும் என்று தோன்றியது. உடனே ப்ரேக் விட்டுவிட்டு மீண்டும் நான்கு மாதம் கதையை மெருகேற்றிக்கொண்டு படப்பிடிப்புக்குப் போனேன்.

நான் பிசினஸ்மேன் எனபதால் எங்கு பேரம் பேச வேண்டும், எங்கு பேசக் கூடாது என்று தெரியும். அதையும்தாண்டி சினிமாவில் சில அசெளகரியங்கள் இருந்தது. அதை நான் பெரிது படுத்தவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் பிறந்தாலும், இறந்தாலும் பணம் வேண்டும்.”
“சினிமா இப்போது எப்படியிருக்கு?”

“இப்போது சினிமா டிஜிட்டலுக்கு மாறியிருப்பது புதியவர்களுக்கு வாய்ப்புகளை எளிதாக்கியுள்ளது. ஆனால் கிரியேட்டிவிட்டி இல்லை. காரணம், இளைஞர்களிடம் வாசிப்புத்திறன் இல்லை. நான் ராமாயணத்திலிருந்து ஒரு கேரக்டர் எடுத்து இந்தப் படத்தை பண்ணியிருக்கிறேன். இது எல்லோருக்கும் வருமா  என்று தெரியாது. நான் அடிப்படையில் அதிகமாக புத்தகம் படிப்பேன். புத்தகத் திருவிழாவில் வருடத்துக்கு 30,000 ரூபாய்க்கு புத்தகம் வாங்குவேன். புத்தக வாசிப்பு இருந்ததால் எழுதும் கலை வசப்பட்டது.

அதன் மூலம் இந்தக் கதையை என்னால் எழுத முடிந்தது. என்னிடம் வேலை செய்ய வந்தவர்களிடம் தி.ஜா.வைத் தெரியுமா என்றால் யார் சார் என்று கேட்கிறார்கள். தி.ஜா. போன்ற ஆளுமைகளைப் படிக்காதவர்களால் எப்படி கதை பண்ணமுடியும். புத்தக வாசிப்பு என்பது இப்போது குறைந்துவிட்டது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைச் சீரழிக்க எதாவது ‘டூல்’ இருக்கும். இப்போது அந்த இடத்தை செல்ஃபோன் ஆக்கிரமித்துள்ளது. அப்போது சரோஜாதேவி மாதிரியான புத்தகம் ஆக்கிரமித்தது. ஆனாலும் அப்போது இலக்கியங்களை ஆர்வத்துடன் படிக்கிறவர்கள் இருந்தார்கள். ஊருக்கு ஊர் கவியரங்கம், பட்டிமன்றம் வாரா வாரம் நடந்தது. திருப்பூரில் நடந்த பல இலக்கிய விழாக்களில் தமிழ்நாட்டின் அத்தனை பேச்சாளர்களின் பேச்சையும் கேட்டிருக்கிறேன்.

புத்தக வாசிப்பு மிகவும் முக்கியம். புத்தக வாசிப்பு இல்லாத காரணத்தால் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. செல்ஃபோன் இல்லை என்றால் செத்துவிடுவார்கள் போல் உள்ளது. செல் மனிதனைச் சிந்திக்க அனுமதிப்பதில்லை. அந்தவகையில் எதிர்கால சினிமா கவலைக்குரியதாக இருக்கிறது. அதனால்தான் பார்ட்-1, பார்ட்-2 கலாச்சாரம் பெருகியுள்ளது. நம்மவர்கள் திறமைசாலிகள். இங்கு சரக்கு இருக்கு.

சில வருடங்களுக்கு முன் ‘அவதார்’ என்ற படம் வந்தது. அது கிரியேட்டிவிட்டி கதை. பாகவதம், கருட புராணம் இரண்டையும் மிக்ஸ் பண்ணி எடுத்திருந்தார்கள். ‘அவதார்’ என்கிற வார்த்தை ஆங்கிலமோ, ஐரோப்பிய வார்த்தையோ இல்லை. சமஸ்கிருதச் சொல். சிவனுடைய திருசூலத்தின் வரலாறுதான் சமீபத்தில் வெளிவந்த ‘அக்வாமேன்’ படம்.

ஹாலிவுட்காரன் நம் கதைகளைத் திருடி எடுக்கிறான். நம்மூர்க்காரர்கள் இதிகாசங்களையோ மற்ற புதினங்களையோ படிப்பதில்லை. மகாபாரதம் படித்த உதவி இயக்குநர்கள் இப்போது இல்லை. நான் ‘தண்டகன்’ பண்ணக் காரணம் அதுதான். தண்டகன் என்ற பெயரைக் கேட்டதும் எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். கேள்வி கேட்கிறார்கள்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் லண்டனில் இருந்து இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பாராட்டினார். டிரைலரைப் பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா வெகுவாகப் பாராட்டினார். அவருடைய அந்தப் பாராட்டு பிரம்மரிஷி வாயால் ராஜரிஷி பட்டம் வாங்கிய மாதிரி.”

- சுரேஷ்ராஜா