ஹீரோவுக்காக காத்திருக்க மாட்டேன்! ‘கோமாளி’ இயக்குநர் சொல்கிறார்



‘கோமாளி’ வெற்றியின் மூலம் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குநராக மாறியுள்ளார் ப்ரதீப் ரங்கநாதன். குறும்படங்கள் மூலம் சினிமா வாய்ப்பு பெற்றதாகச் சொல்லும் ப்ரதீப் ரங்கநாதனிடம் பேசினோம்.“தம்பிக்கு எந்த ஊரு?”

“பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னை. படிச்சது என்ஜினியரிங். படிப்பு முடிந்ததும் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். கல்லூரியில் படிக்கும்போதே குறும்படங்களை இயக்க ஆரம்பித்துவிட்டேன். முதன் முதலாக இயக்கிய குறும்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த உற்சாகத்தில் தொடர்ந்து குறும்படங்கள் பண்ணலாம் என்று முடிவு எடுத்து ஏராளமான குறும்படங்கள் பண்ணினேன்.

அதே சமயத்தில் விளம்பரப் படங்களையும் பண்ணினேன். அப்போது குறும்பட இயக்குநர்களுக்கான ஒரு போட்டி நடைபெற்றது. அதுக்காக டெல்லி கணேஷ் சார் நடித்த ‘அப்பா லாக்’ என்ற குறும்படம் பண்ணியிருந்தேன். அது சோஷியல் மீடியாவில் செம வைரலானது. அதைப் பார்த்துவிட்டு நிறைய தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து அழைப்பு வந்தது. எனக்கும் சினிமாவில் நுழைவதற்கு அந்த குறும்படம் அடையாளமாக இருந்தது.

அப்படி அமைந்த வாய்ப்புதான் ‘கோமாளி’. தயாரிப்பாளர் கணேஷ் சாருக்கு என்னுடைய குறும்படம் பற்றிய விவரம் தெரிந்திருந்ததால் அவரிடம் கதை சொல்வது எளிதாக இருந்த்து. கதை பிடித்ததும் ‘ஜெயம்’ ரவி சாரை மீட் பண்ணவைத்தார். அப்படி உருவானதுதான் ‘கோமாளி’ படம்.”“படப்பிடிப்பில் ‘ஜெயம்’ ரவி எப்படி?”

“அறிமுக இயக்குநருக்கு அவர் போல் ஒரு பெரிய நடிகர் கிடைத்தால் அது வரம் கிடைத்த மாதிரி. இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே செய்யக்கூடியவர் ‘ஜெயம்’ ரவி. இயக்குநரின் திருப்திதான் அவருக்கு முக்கியம். எப்போதும் ஒரு இயக்குநரின் நடிகராக தன்னை வெளிப்படுத்துவார்.

இயக்குநர் என்ன சொன்னாலும் பண்ணுவார். முடியாது என்ற வார்த்தை வரவே வராது. பாதி படத்துக்குப் பிறகு நான்தான் கதையில் சில மாற்றம் செய்தேன். நான் கதை சொன்னபோது ‘ஒளியும் ஒலியும்’ பாடல் இடம்பெறவில்லை. சென்டிமென்ட்டுக்காக நான் அந்தப் பாடலைச் சேர்க்கலாம் என்றபோது ‘ப்ரோ, அப்படியே பண்ணலாம்’ என்றார்.

படப்பிடிப்பில் அவருக்கு என்ன வேலையோ அதை மட்டுமே செய்வார். மற்றவர்கள் வேலையில் தேவையில்லாமல் குறுக்கிடமாட்டார். ‘ஜெயம்’ரவி, காஜல் அகர்வால் போன்ற ஆர்ட்டிஸ்ட்டுகளின் ஒத்துழைப்பால் 60 நாளில் படத்தை முடிக்க முடிந்தது.”
“யாரெல்லாம் பாராட்டினார்கள்?''

‘‘ஜெயம்’ ரவி சாரும், ஐசரி கணேஷ் சாரும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். நான் கேட்ட வசதிகளைச் செய்து கொடுத்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது நான் பெரிய ஆளாக வருவேன் என்று ‘ஜெயம்’ரவி வாழ்த்தினார். படம் வெற்றி அடைந்ததும் ‘நான் சொன்ன மாதிரியே பெரிய இயக்குநராகிவிட்டீர்கள்’ என்றார். அவருடைய அந்தப் பாராட்டை மிகப் பெரிய பாராட்டாகப் பார்க்கிறேன்.

அதேபோல் மோகன்ராஜா சாரின் பாராட்டும் மறக்கமுடியாதது. ‘எங்க ஃபேமிலியே ஹேப்பியாக இருக்கிறோம். தியேட்டரில் எல்லாரும் என்ஜாய் பண்ணி படம் பார்த்தார்கள்’ என்றார். ‘தனிஒருவன்’ என்ற பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் என்னைப் பாராட்டியபோது பெருமையாக இருந்தது.”“அடுத்து என்ன ஜானர்ல படம் பண்ணப்போறீங்க?”

“மூன்று கதைகள் தயார் நிலையில் உள்ளது. மூன்று கதையில் எந்தக் கதை என்பதை முடிவு செய்யவில்லை. கதை முடிவானதும் யார் ஹீரோ என்பது முடிவாகிவிடும். அந்தவகையில் கதைதான் ஹீரோவை முடிவு செய்யும். ஒருவேளை புது ஹீரோ தேவைப்பட்டால் அவருடன் ஒர்க் பண்ணவும் தயங்கமாட்டேன். மாஸ் ஹீரோவுக்காகக் காத்திருக்கமாட்டேன்.”

- சுரேஷ்ராஜா