மயூரன்



பீதியூட்டும் கிளைமேக்ஸ்!

இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் நந்தன் சுப்பராயன். இவரது இயக்கத்தில் வந்துள்ள படம் ‘மயூரன்’.கிராமப்புறங்களிலிருந்து பல கனவுகளோடு படித்துப்பட்டம் வாங்க வேண்டும் என்று நகரத்துக்கு வந்து கல்லூரியில் சேருகிறார்கள் பல மாணவர்கள். அவர்களின் வாழ்க்கையை தங்கள் சுயநலத்துக்காக வேட்டையாடும் கொடிய மனிதர்களை அடையாளம் காட்டுவதுதான் படம்.

அஞ்சன், பாலாஜி ராதாகிருஷ்ணன், அமுதவாணன் ஆகியோர் மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களில் நாயகன் அஞ்சனுக்கு படத்தில் சேகுவேரா என்று பெயர். பாலாஜி ராதாகிருஷ்ணனுக்கு முத்துக்குமார் என்று பெயர்.சேகுவேரா என்கிற பெயருக்குப் பெருமை சேர்க்கும் வண்ணம் நடித்திருக்கிறார் அஞ்சன். கிராமப்புற மாணவர்களைச் சரியாகப் பிரதி எடுத்திருக்கிறார் பாலாஜி ராதாகிருஷ்ணன். நாயகி அஸ்மிதாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகளில் வரும் வாய்ப்பு மட்டுமே. அதற்குப் பொருத்தமாக இருக்கிறார்.

கடைசியில் இவரின் காதல் என்ன ஆனது  என்பதும் தெரியவில்லை. ஜான் என்கிற வேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த்சாமியும், பெரியவராக நடித்திருக்கும் வேலராமமூர்த்தியும் தங்கள் நடிப்பால் கேரக்டருக்கு சிறப்பு சேர்க்கிறாகள். தோழராக நடித்திருக்கும் கலை கவனிக்க வைக்கிறார். பரமேஷ்வரின் ஒளிப்பதிவு கதையின் தன்மைக்குப் பொருத்தமாக இருக்கிறது.

ஜுபின், ஜெரார்ட் இசையில் குகை மா.புகழேந்தி எழுதியுள்ள ‘வானம் பூமி போல’, ‘நெஞ்செல்லாம் பூக்கிறாய்’ பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் ரசிக்கும்படி உள்ளது. அஸ்வினின் எடிட்டிங்கில் முதல் பாதி மெதுவாகவும் இரண்டாம் பாதி வேகமாகவும் இருக்கிறது.

சிதம்பரம் போன்ற நடுத்தரமான நகரங்களில் கூட நுழைந்திருக்கும் கொடிய பழக்கத்தையும் அதைச் சந்தைப்படுத்த அவர்கள் கடைப்பிடிக்கும் வழிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன்.

இறுதியில் வரும் கொடூரக் காட்சி மூலம்  பாலாவின் சீடர் என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் நந்தன் சுப்பராயன். நாயகன் வில்லனைத் தண்டிக்கும் செயல் சட்டப்படி தவறு என்றாலும் அப்படிப்பட்டவர்களை அப்படித்தான் செய்யணும் என்று நினைக்க வைத்ததில் வெற்றி பெறுகிறது படம்.