சிக்ஸர்



அவுட் ஆஃப் த ஸ்டேடியம்!

கடந்த 1991ல் பிரபு, குஷ்பூ, கவுண்டமணி நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவையே கலக்கிய படம் ‘சின்னத்தம்பி’. இதில் மாலைக் கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்திருப்பார். அந்தப் படத்தில் ஒரு காட்சியில்.. மாலை 6 மணிக்குள் தன் வீட்டிற்கு வந்துவிடுவார். அப்போது தன் தந்தை போட்டோவைப் பார்த்து… ‘டேய் தகப்பா.. ராத் திரியில என்ன பாவம் நீ செஞ்சியோ… எனக்கு 6 மணிக்கு மேல கண் தெரியல’ என்று திட்டுவார். ‘ஆனா ஒண்ணே ஒண்ணுடா.. நான் கரன்ட் பில் கட்டுனதேயில்லடா’ என்பார் கவுண்டமணி.

அதுபோல் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கவுண்டமணி போட்டோவை வைத்து... டேய் தாத்தா.. என குறிப்பிட்டு அதே டயலாக்கை வைத்து பட நாயகன் வைபவ் மாலைக் கண் நோய் பாதிக்கப்பட்டவராக வருகிறார். ஆனால் தனக்கு மாலைக்கண் நோய் இருப்பதை மறைத்து காதலிக்கிறார். கல்யாணம் வரை போகிறார். அப்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் வைபவ், கண் தெரியாத நேரங்களில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கண் தெரியாத நேரத்தில் நடனம் ஆடும்போது கூட பார்வையற்றவர்களின் உடல்மொழியைக் கடைப்பிடித்திருக்கிறார். நாயகி பாலக் லால்வாணி அழகாக இருக்கிறார். நன்றாக நடித்துமிருக்கிறார்.

வைபவின் நண்பராக வரும் சதீஷ், ரவுடியாக வரும் ராமர், அப்பாவாக நடித்திருக்கும் இளவரசு ஆகியோர் வரும் காட்சிகள் ரசிகர்களைச் சிரிக்கவைப்பதற்காகவே எடுக்கப்பட்டிருக்கின்றன.ராதாரவியின் பாத்திரமும் பெரிய வரவேற்பைப் பெறுகிறது. வைபவின் அம்மாவாக நடித்திருக்கும் ரஞ்சனி நன்று. வில்லன்களாக வருகிற ஆர்.என்.ஆர். மனோகர், ஏஜே ஆகியோரும் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையிலும் குறை ஏதுமில்லை. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தை விறுவிறுப்பாக நகர்த்த உதவியிருக்கிறது.

இயக்குநர் சாச்சி, ரசிகர்களைச் சிரிக்க வைப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார். அதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் காட்சிகளை அமைத்திருக்கிறார்.கடற்கரையில் நடக்கும் போராட்டம், அதில் வைபவின் நடவடிக்கைகள், வைபவ்- ராதாரவி சந்திப்பு மற்றும் அதற்குப் பிறகான காட்சிகள் உட்பட பல காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. இதென்னங்க அபத்தமா இருக்கு என்கிற கேள்வி வரவில்லையென்றால் சிரிப்பு நிச்சயம்.மொத்தத்தில் வைபவின் இந்த ‘சிக்ஸர்’, அவுட் ஆஃப் த ஸ்டேடியம்!