சாஹோ



இதுவரை காணா பிரும்மாண்டம்!

இந்தியாவே எதிர்பார்த்த பிரும்மாண்டமான படம். ‘பாகுபலி’ பிரபாஸ், மீண்டும் அதே போல பெரிய வெற்றியை எட்ட முடிந்ததா என்று பார்ப்போம்.ஜாக்கிஷெராப் உலகளவில் பெரிய கேங்ஸ்டர். இந்தியாவுக்குள் வந்ததுமே அவரை மர்ம நபர்கள் சிலர் போட்டுத் தள்ளுகிறார்கள். அவர் கொண்டு வந்த பணத்தைக் கைப்பற்ற போட்டா போட்டி நடக்கிறது.

அவருடைய இடத்துக்கு யார் வருவது என்றும் மோதிக் கொள்கிறார்கள். இந்நிலையில் அதிரடியாக உள்ளே நுழைந்து ஆட்டத்தின் விதிகளையே மாற்றுகிறார் பிரபாஸ். அவர் யார், எப்படி இந்த சக்கர வியூகத்துக்குள் நுழைந்தார் என்பதுதான் மீதிப்படம்.

இதுவரை இந்திய சினிமாவில் எந்த ஹீரோவும் எடுக்காத ஆக்‌ஷன் ரிஸ்க்குகளை எடுத்து அசத்தி இருக்கிறார் பிரபாஸ். ஆனால், நடிப்பு என்றால் கிலோ எவ்வளவு என்று கேட்கும் விதமாகத்தான் அவரது முகபாவங்கள் இருக்கின்றன. இதுவரை தென்னிந்திய சினிமாவில் எந்த ஹீரோயினுக்குமே கொடுக்காத சம்பளம் கொடுத்து ஷ்ரத்தாக் பூரை அழைத்து வந்திருக்கிறார்கள்.

ஏனென்றுதான் தெரியவில்லை.  ஜாக்கிஷெராப்புக்கு நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை. அவருடைய மகனாக வரும் அருண்விஜய் ஸ்டைலான லுக்கிலும், வித்தியாசமான பாடிலேங்குவேஜிலும் மிரட்டுகிறார். மதியின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல பளீரென்று இருக்கிறது. படத்தின் சண்டைக்காட்சிகள் ஹாலிவுட் தரம். ஜிப்ரான் பின்னணி இசையில் சும்மா ஜிம்பித் தள்ளிவிட்டார்.

எனினும் குழப்பமான முதல் பாதியால் ஒரு சுமாரான படத்தைப் பார்த்த எண்ணமே தோன்றுகிறது. அளவுக்கு அதிகமான கேரக்டர்கள். யார், என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்குள் இடைவேளை வந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகுதான் கதையே தொடங்குகிறது. ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாகக் கொடுத்து கிறுகிறுக்க வைத்திருக்கிறார்கள்.

ஆனால், கதையைத் தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே கிளைமேக்ஸ். திரைக் கதையில் இயக்குநர் சுஜித் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இந்த சாஹோ உலகையே வென்றிருப்பான்.