டைட்டில்ஸ் டாக்- 125 - ஜி பவன்எனக்கு சொந்த ஊர் சென்னை. சினிமாவில் ஜெயிக்கணும்னா நமக்கு சில பல ‘ஜி’க்கள் தெரிந்திருக்க வேண்டும். அதாவது மதிப்புக்குரியவர்களைத்   தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த வகையில் நான் சந்தித்த முதல் மதிப்புக்குரியவர் ‘ஜி’ படத்தின் இயக்குநர் லிங்குசாமி. ஏன்னா, ‘ஜி’ படம் வெளி வருவதற்கு முன்பு கம்பெனி கம்பெனியாக வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு கம்பெனிகள் தேடும் நடிகராக மாறினேன்.

இயக்குநர் லிங்குசாமியைப் பற்றி சொல்வதற்கு முன் அந்தப் பட வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்தவர் லிங்குசாமியின்  தம்பியும் தயாரிப்பாளருமான போஸ். அப்போது நான் ஹீரோவாக நடிப்பதற்காக விதவிதமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தேன். அதைப் பார்த்துவிட்டு போஸ் சார் என்னை நடிக்க செலக்ட் பண்ணினார். இரண்டு மூணு நாள் கழித்து அவருடைய ஆபீஸிலிருந்து போன் வந்தது. நானும் போய்ப் பார்த்தேன். அதன்பிறகு நடிப்பதற்கான எந்த அழைப்பும் வராததால் ஆபீஸ் பக்கம் போகவில்லை.

ஒரு நாள் லிங்குசாமியின் மறைந்த உதவியாளர்  தமிழ் மணி ‘‘ஆபீஸ் பக்கம் ஏன் வரவில்லை?’’ என்று கேட்டதோடு ‘‘உடனே ஆபீஸ்ல வந்து பாருங்க’’ என்றார். அப்போது லிங்குசாமி ஒரு ஓட்டலில் டிஸ்கஷன்ல இருந்தார். என்னிடம் ‘நீங்கள் நடித்த படம் எதாவது இருக்கா’ என்று கேட்டார். இல்லை என்றதும் ஆடிஷன் பண்ணினார்.

அப்போது இனிகோ, நிதின் சத்யா என்று நாலைந்து பேர் இருந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் எனக்கு சரண்ராஜ் மகனாக நடிக்கும் வில்லன் வாய்ப்பைக் கொடுத்தார்.

‘ஜி’ படத்தில் நடிப்பதற்கு முன் நான் சந்தித்த இன்னொரு ஜி இருக்கிறார். அவர் நடிகர் மன். என்னுடைய நெருங்கிய நண்பர். நானும் அவரும் ஒன்றாக வாசு மாஸ்டரிடம் டான்ஸ் கிளாஸ் போவோம். நடிகர் சங்கத்தில்தான் வகுப்பு நடக்கும். அங்கு இன்று பிரபலமாக இருக்கும் சூர்யா போன்ற நடிகர்களும் வருவார்கள்.

ஸ்ரீமன் அப்போது படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அவர் மூலம்தான் எனக்கு முதன் முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரைக்காகத்தான் முதன் முதலாக அரிதாரம் பூசினேன். அதில்  விஜய் ஆதிராஜ் ஹீரோவாக நடித்திருந்தார். அப்போது சினிமா, சின்னத்திரை என்று பிரித்துப் பார்க்கத் தெரியாத வயது என்பதால் நடித்தால் போதும் என்ற மனநிலையில் நடித்தேன்.

சினிமா வாய்ப்பையும் ஸ்ரீமன்தான் பெற்றுத் தந்தார். நான் நடித்த முதல் படம் அருண் விஜய், மந்த்ரா நடித்த ‘ப்ரியம்’.  அந்தப் படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே நடித்தேன். அடுத்து ‘ராசி’யில் அஜித் நண்பராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பும் ஸ்ரீமன் மூலம்தான் கிடைத்தது. அதன்பிறகு பத்து வருடங்கள் கழித்து நான் நடித்த அஜித் படம் ‘ஜி’. இதற்கிடையே  மிகுந்த போராட்டத்துக்கு நடுவில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தேன். ‘ஜி’ படத்துக்குப் பிறகு பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் படத்துக்குப் பிறகு படங்களை நான் தேர்ந்தெடுக்கும் நிலை இருந்தது.

‘ஜி’ படத்துக்குப் பிறகு ஏராளமான படங்கள் பண்ணினேன். அப்படி நடிக்கும் போது நான் சந்தித்த மற்றொரு ஜிதான் இயக்குநர் வெற்றிமாறன். அவர் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் ‘அவுட்’ என்ற கேரக்டர் கொடுத்தார். எனக்கு முன்பு அந்தக் கேரக்டரில் வேறு ஒருவர் நடித்திருந்தார். ஆனால் இறுதியில் நான் நடித்த காட்சிகள்தான் படத்தில் இடம்பெற்றன.

‘ஜி’ படம் சினிமா சர்க்கிளில் என்னை முழுமையாகச் சேர்த்தது என்றால் ‘பொல்லாதவன்’ என்னை முழு நடிகனாக மக்கள் மத்தியில் சேர்த்தது. ‘சூரியன் சட்டக் கல்லூரி’ என்ற படத்தில் மெயின் லீட் பண்ணினேன்.  சிவசக்தி பாண்டியன் சார்  தயாரிப்பாளர். அந்தப் படத்தை இண்டஸ்ட்ரியில் உள்ள ஏராளமான தயாரிப்பாளர்கள் பார்த்தார்கள்.

அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு, ஹீரோவாக நடிக்க ஒரு படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அப்படி மூணு படங்களில் ஹீரோவாகப் பண்ணினேன். பெரிய இயக்குநர், பெரிய பேனர் இல்லாத காரணத்தால் அந்தப் படங்கள் பெரியளவில் பேசப்படவில்லை. கேரக்டர் பண்ணமாட்டேன் என்ற டாக் வந்தது. பல குழப்பங்கள் என்னுடைய வளர்ச்சியைப் பாதித்தது.

‘சூரியன் சட்டக் கல்லூரி’ சில குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் படத்தின் இயக்குநர் பெயரும் பவன். ஒரே பெயர் சில குழப்பத்தைக் கொடுத்தது. இயக்குநர் பவனும் ஹிட் என்றால் எனக்கு பெயர், ஃப்ளாப் என்றால் உனக்கு பெயர் கிடைத்துவிடும் என்றார்.

சினிமாவில் ஒரு நடைமுறை இருக்கு. நம்முடைய பெயர் இயக்குநர் என்ற இடத்திலோ ஹீரோ என்ற இடத்திலோ இடம்பெற்றுவிட்டால் அவர் இயக்குநராகிவிட்டார் என்றும் ஹீரோவாகிவிட்டார் என்றும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். இது என் விஷயத்திலும் நடக்க ஆரம்பித்தது.

அதுமட்டுமில்ல, சினிமாவில் நடித்தால் ஹீரோவாக நடிக்கணும், இல்லையென்றால் வில்லனாக நடிக்க வேண்டும். இரண்டும் இல்லாத ஒரு நிலை பெரிய கஷ்டத்தைக் கொடுக்கும். எனக்கு  சினிமா பின்னணி எதுவும் இல்லை. சினிமாவில் ஒருவருடைய வளர்ச்சியை காலி பண்ணுவதற்கு நிறையப் பேர் புறப்பட்டு வருவார்கள். ஆனால் கீழே விழும்போது தூக்கிவிட ஒருவரும் வரமாட்டார்கள்.

நான் ஹீரோவாக நடித்த படத்தின் போட்டோ கார்டு பிரிண்ட் செய்வதற்காக லேப் போனார்கள். அங்கு இருந்தவர்களில் சிலர் ‘ஏன் இவர்களை எல்லாம் வளர்த்து விடுகிறீர்கள்’ என்று பேசினார்களாம். இது போன்று, நம்முடைய வாழ்க்கையில் எந்த இடத்திலும் சம்பந்தமே இல்லாதவர்கள் நம்முடைய எதிர்காலத்தை வீணடித்துவிடுவார்கள்.

‘மாசிலாமணி’ படத்தில் மெயின் வில்லனாகப் பண்ணியிருக்கிறேன். தமிழ், மலையாளம் உட்பட சுமார் 90 படங்களில் நடித்துள்ளேன். ஆனால் நான் இன்னும் பெரியளவில் ரீச் ஆகவில்லை. அதற்கு என்னுடைய தனிப்பட்ட குணமும் காரணம் என்று சொல்லலாம்.

ஏன்னா, வாழ்க்கையில் நான் பல ஏமாற்றங்கள், தோல்விகளைச் சந்தித்ததால் எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து முடிவு எடுப்பேன். அதனாலேயே கொஞ்சம் அடக்கி வாசிப்பேன். சமீப காலமாக இரண்டு, மூணு படம் பண்ணவங்க பேர் கூட தெரிகிறது. ஆனால் நான் முழுமையாக தெரியப்படவில்லை. விஜய், அஜித் போன்ற மாஸ் ஹீரோ படங்கள் பண்ணியிருக்கிறேன். ஆனால் அதற்கான மைலேஜ் எனக்குக் கிடைக்கவில்லை.

 லிங்குசாமி, வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களுக்கு என் மீது நல்ல அபிப்பிராயம் இருப்பதால் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கிறார்கள். ‘வடசென்னை’ படத்துக்குப் பிறகு இப்போது ‘அசுரன்’ படத்திலும் வெற்றிமாறன் சார் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

சினிமாவில் திறமை இரண்டாவது பட்சம்தான். டைம் ரொம்ப முக்கியம். அதற்கு உதாரணமாக, சில வருடங்களுக்கு முன்பு வெற்றிக்கொடி பறக்கவிட்ட பிரபல காமெடி நடிகர் இப்போது சில படங்களில் நடித்தாலும் அவரால் ஷைன் பண்ண முடியவில்லை. இவ்வளவுக்கும் இவரிடம் நடிப்பு பயின்றவர்கள் முக்கிய இடத்துக்கு போய்விட்டார்கள்.

என் அனுபவத்திலிருந்து சொல்வதாக இருந்தால், சினிமாவில் ஜெயிக்கணும்னா பொழைக்கத் தெரிஞ்ச ஆளா இருக்கணும். இங்கு உண்மையைச் சொன்னாலும்  வெளிப்படையான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். நான் சினிமாத்தனம் தெரியாதவன் அல்ல. ஆனால் அதன்படி எனக்கு வாழத் தெரியலை. ஷூட்டிங் ஸ்பாட்ல என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வேன். ஆனால் இங்கு ராங் பண்ணுகிறவர்களுக்கு மவுசு அதிகம். அதைத்தான் டைம் என்கிறேன்.

சினிமாவைத் தாண்டி இங்கு வெளி உலகத்திலும் நடிக்கத் தெரியணும். அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் என் வேலையை மட்டும் செய்தால் தப்பானவனாக பார்க்கப்படுகிறேன். ஆனால் செட்ல இருக்கிற ஹீரோவைத் தேடிப் போய் வணக்கம் வைக்கிறவர்கள் நல்ல பெயர் வாங்கிக் கொள்கிறார்கள். என் போன்றவர்கள் கெட்ட பெயர் வாங்குகிறார்கள். சினிமாவில் யதார்த்தமாக வாழ முடிவதில்லை.

பெரிய ஹிட் கொடுத்தால் என்னுடைய நிஜ கேரக்டரை சூப்பர் என்று சொல்வார்கள். இப்போது நான் நானாக இருக்கும்போது திமிரு பிடித்தவன் என்கிறார்கள். புதுசா வருகிறவர்களுக்கு என்னிடம் ஒரே ஒரு செய்திதான் இருக்கு. தயவுசெய்து என்னை மாதிரி இருக்காதீங்க ப்ரோ...

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)