ஐடி துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இரட்டையர்!



ஐடி வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்துள்ள இளைஞர்கள் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு வெங்கட் ரெட்டி, சந்தீப் சாய். முதலாமவருக்கு நடிப்பிலும் அடுத்தவருக்கு டைரக்‌ஷன் பண்ணுவதிலும் ஆர்வம் அதிகம். ‘‘சினிமாவுக்கான தேடல் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது’’ என்று பேச ஆரம்பித்தார் வெங்கட் ரெட்டி...

“கதை எழுதுவது சினிமா தயாரிப்பின் மிகவும் சுவாரஸ்யமான பகுதி என்பதை உணர்கிறேன். நிச்சயமாக நடிகர்களும், தொழில்நுட்பக்கலைஞர்களும் ஒரு ஆரோக்கியமான தயாரிப்பை அதிகப்படுத்தி வழங்குகிறார்கள்.

ஆனால் முடிவில் கதை எவ்வளவு சுவாரஸ்யமானது என்பதுபற்றித்தான் பேசப் படும். சந்தீப் சாய் இந்தக்கதையை விவரிக்கும் போது, நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்கப் போகிறேன் என்ற எனது அடையாளத்தை உண்மையில் மறந்து, ஒரு ரசிகனாக அதை ரசிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப கட்டத்தில் நான் இதை பெரிதுபடுத்திச் சொல்வது போல் தோன்றலாம்.

 ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நிறைய முக்கியத்துவத்துடன் எழுதிய அவரது திறமைதான், கதையை மிகவும் சுவாரஸ்யப்படுத்தியது என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு தயாரிப்பாளராக நான் உற்சாகமாகவும், ஒரு நடிகராக பதட்டமாகவும் இருக்கிறேன். ஏன்னா, சந்தீப் சாய் உருவாக்கிய கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என்று நான் கருதுவதால் பதட்டமாக இருக்கிறது” என்றார்.

இயக்குனர் சந்தீப் சாய் கூறும்போது, “இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்; கொலை மர்மத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டிருக்கும் கதை.இது ஒரு தனிமையான நாயகனைப் பற்றியது.

தொடர்ச்சியாக நடக்கும் கொலைகளில் அவரை சிக்கவைக்க முயல்கிறார்கள். மேலும் யாரென்றே தெரியாத அந்த ஆபத்தான மற்றும் மிகவும் மிருகத்தனமான கொலைகாரனின் இலக்காகவும் நாயகன் மாறுகிறார். கொலைகாரனின் இருப்பு எல்லா இடங்களிலும் உணரப்படுவதால், நாயகன் தன்னைச் சுற்றியுள்ள கொலைகளின் மர்மத்தை அவிழ்க்கும் திறனைப் பற்றிய மிகப்பெரிய உளவியல் மற்றும் உடல் ரீதியான சவால்களில் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு தனித்துவமான கதையை வைத்து சிறப்பான படத்தைக் கொடுக்க முயற்சித்திருக்கிறோம். இது இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கும் என்று சவால் விடுகிறோம்’’ என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.

- ரா