வித்தியாசமான ஹீரோவாக சிவகார்த்திகேயன்!சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ அதிக ஏதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே. ராஜேஷ் படத்தைப் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார். ‘‘சிவகார்த்திகேயன் ஒரு பெரிய பிராண்ட்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது திரைப்படங்களை தவறாமல் பார்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.  இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். ஏன்னா,  தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்தப் படத்தில் இணைந்திருக்கிறேன்.

அர்ஜுன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தயாரிப்பதை எனக்கு கிடைத்த வரமாகப் பார்க்கிறேன். ஒரு படத்தை ஆடம்பரமாகத் தயாரிக்க முடியும். ஆனால் அத்தகைய நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைப் பெறுவதுதான் மிகப்பெரிய விஷயம். நடிகர்கள் ஒரு கண்கவர் அம்சமாகத் தெரிந்தாலும், தொழில்நுட்பக் குழுவினர் இந்தப் படத்தின் மற்றொரு தூண்.

‘இரும்புத்திரை’யில் பி.எஸ்.மித்ரனின் மேக்கிங் மற்றும் திரைமொழி என்னை மிகவும் கவர்ந்தது. மித்ரனிடம் கதை கேட்கும் முன்பு, அவர் ‘இரும்புத்திரை’ போன்ற ஒரு கதையுடன்தான் வரக்கூடும் என்று நான் கருதினேன். ஆனால், எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்விதமாக ‘ஹீரோ’ முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதுமையான கதையாக இருந்தது. அவர் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரங்கள் பிரமிக்கவைக்கும் விதமாக இருந்தது.

அந்தக் கதாபாத்திரங்களில் மிகச்சிறந்த நடிகர்கள் நடித்திருப்பதால் ஒரு ரசிகனாக படத்தை இப்போதே பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார். இந்தப் படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் பேசப்படும் கதாநாயகியாக மாறுவது நிச்சயம்.

மிகச்சிறந்த நடிகர்கள் பட்டாளம், தொழில்நுட்பக்கலைஞர்களையும், தனித்துவமான கதையையும் கொண்டு மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை நினைத்த மாதிரி உருவாக்க சரியான கால அவகாசம் தேவை. படத்தோட குவாலிட்டியோடு மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படமாக் கொண்டு வருவதில் ஒரு குழுவாக நாங்கள் எங்கள் முயற்சிகளை முன்னெடுத்து உழைத்து வருகிறோம்.

தனிப்பட்ட முறையில், ‘சரியான நேரத்தில் சரியான விஷயம் நடக்க வேண்டும்’ என்ற கோட்பாட்டை நான் கடுமையாக நம்புகிறேன். அந்த வகையில் இந்தப் படம் இந்த ஆண்டின் இறுதி ஃபெஸ்டிவலைக் கொண்டாடும் விதமாக சரியான விருந்தாக இருக்கும்’’ என்றார் ராஜேஷ்.

- எஸ்