கபடி வீராங்கனைகள் நடிக்கும் படம்!‘கென்னடி கிளப்’ படத்தை முடித்துவிட்டு, இறுதிக் கட்ட பணிகளில் பிசியாகி இருக்கிறார் டைரக்டர் சுசீந்திரன். பெண்கள் கபடியை மயமாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். “ஜீவா படத்தில் கிரிக்கெட்டில் நடக்கும் அரசியலை சொல்லி இருந்தேன். ஆனால் அந்தப் படத்துல காம்ப்ரமைஸ் ஆகி, காதல் காட்சிகளை வச்சிருந்தேன். கென்னடி கிளப் அப்படி கிடையாது. இந்தப் படத்தோடு நான் எந்த காம்பரமைஸும் செஞ்சிக்கல. 2017ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வச்சிதான் இந்த படத்தை எடுத்திருக்கேன்.

எல்லா விளையாட்டுக்கும் அதுக்கான உபகரணம் எதாவது தேவையா இருக்கும். கபடிக்கு மட்டும்தான் எதுவுமே தேவையில்லை. கிராமத்துலேருந்து டவுசர் போட்டுக்கிட்டு பொண்ணுங்க விளையாட வர்றது ரொம்பவே சர்ச்சைக்குள்ளாகுற விஷயம். அந்த ஊர்ல பலபேர் பல மாதிரி பேசுவாங்க. அது கபடி ஆடுற பொண்ணோட குடும்பத்துக்கு தர்மசங்கடமா அமையும்.

இந்த மாதிரி அவமானங்களையெல்லாம் தாங்கிக்கிட்டுதான் அவங்க கபடி ஆட வர்றாங்க. வந்த பிறகு இந்த விளையாட்டுல நடக்கிற அரசியல், பொறாமை, பெண்கள் கபடியை ஓரம்கட்டும் சூழல்னு எல்லாத்தையும் சந்திச்சி, சமாளிச்சுதான் பொண்ணுங்க சாதிக்க வேண்டியிருக்கு. இதையெல்லாம் பேசுற படமா ‘கென்னடி கிளப்’ இருக்கும்.

கபடி ஆட்டம் தமிழர்களுக்கே உரிய விளையாட்டு. போர்க் கால சமயத்துல தமிழர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளை வச்சிருந்தாங்க. ஜல்லிக்கட்டு அவங்களுக்கு போருக்கான பயிற்சி கொடுக்கிற விளையாட்டா அப்போ இருந்துச்சு. அதேபோலத்தான் கபடி ஆட்டமும் தமிழர்களால ஆரம்பிக்கப்பட்டுச்சு. இன்னிக்கு 32 நாடுகள்ல கபடி விளையாட்டு நடக்குது. அதுக்கெல்லாம் அடித்தளம் போட்டது தமிழர்கள்தான்.

அரசியல்வாதிக்கும் சினிமாகாரங்களுக்கும் வயசு எப்போவும் தடை கிடையாது. ஆனா, ஸ்போர்ட்ஸ்ல அப்படி கிடையாது. குறிப்பிட்ட வயசுக்குள்ளதான் ஆட முடியும். வயசு தாண்டிப்போச்சுன்னா விளையாட முடியாது. இப்படியொரு பிரச்னையும் பொண்ணுங்களுக்கு இருக்கு. அவங்க பல ஏச்சு பேச்சு களைக் கேட்டு குறிப்பிட்ட வயசுக்குள்ள சாதிக்கணும். இந்த மாதிரி பொண்ணுங்க சாதிக்க பல தடைகள் இருக்கு. ஆண்களுக்கு அந்த மாதிரி எதுவும் கிடையாது. அதனால பொண்ணுங்களை பெருமைப்படுத்துற மாதிரி இந்தப் படத்தை உருவாக்கி இருக்கேன்.

திண்டுக்கல்ல பெண்கள் கபடி போட்டிகள் பெரிய அளவுல நடக்குது. ரூ.12 லட்சம் பரிசு கொண்ட முதல்வர் சுழல் கோப்பையை கடந்த 4 வருஷமா இந்த டீம் ஜெயிச்சிட்டு இருக்கு. இப்படி சாதிச்சிட்டிருக்கிற நிஜ கபடி வீராங்கனைகளையே இதுல நடிக்க வச்சிருக்கேன். திண்டுக்கல் டீமா இருந்து பிறகு தமிழ்நாடு டீமாக இவங்க விளைாடி ஜெயிக்கிற மாதிரியான கதை. படத்துல சவுடமுத்துங்கிற கேரக்டர்ல பாரதிராஜா, முருகானந்தம் கேரக்டர்ல சசிகுமார் நடிக்கிறாங்க. கபடியில சசிக்குமாருக்கு குருவாக பாரதிராஜா வர்றார்.

 குருவும் சிஷ்யனும் சேர்ந்து கபடி டீமை எப்படி யார்படுத்துறாங்கங்கிறது கதை. படத்துல ஹீரோயினா மீனாட்சி நடிக்கிறார். அவருக்கு மட்டும்தான் கபடி பயிற்சி கொடுத்தோம். மத்த பொண்ணுங்க, நிஜ கபடி ஆடுறவங்க. அதனால அவங்களுக்கு வெறும் கேமரா பயத்தை போக்குற மாதிரியான பயிற்சிகள் மட்டும்தான் ஷூட்டிங்கிற்கு முன்னாடி கொடுத்தோம்.

முழு படமும் கபடியை முன்னிலைப்படுத்திதான் எடுத்திருக்கேன். என்னோட சகோதரர் தாய் சரவணன் படத்தை தயாரிச்சிருக்கார். இந்தப் படம் தொடங்குறதுக்கு முன்னாடியே ஏஞ்சலினா படத்தையும் எடுத்து முடிச்சிட்டேன். அந்தப் படமும் சீக்கிரமே ரிலீசாகும்” என்கிறார் சுசீந்திரன்.

- ஜியா