பாட்டாளிகளின் தோழன்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-41

மாற்று சினிமா ஆர்வலர்களிடையே மவுசு கொண்டிருந்த ஒளிப்பதிவாளர் நிமாய் கோஷ், சென்னை வந்து இறங்கியபோது  அவரை உற்சாகமாக வரவேற்றது தமிழ் சினிமா. ‘பொன் வயல்’ என்கிற படம்தான் அவர் தமிழில் முதன்முதலாக ஒளிப்பதிவு செய்த படம். அதைத் தொடர்ந்து பாலச்சந்தரின் ‘அனுபவி ராஜா அனுபவி’, ‘ரத்த பாசம்’, ‘அவன் அமரன்’, ‘நாலு வேலி நிலம்’ உள்ளிட்ட படங்களுக்கு  ஒளிப்பதிவு செய்தார்.

பாலச்சந்தரின் முதல் படமான ‘நீர்க்குமிழி’ ஒரு மருத்துவமனைக்குள் நடக்கிற கதை. அதனால் விதவிதமான  கோணங்கள் மூலம் படத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு ஒளிப்பதிவாளரின் திறமை மிகவும் முக்கியம் என்பதால் நிமாய் கோஷை அழைத்து ஒளிப்பதிவு செய்ய வைத்தார்.  கருப்பு வெள்ளை படங்களில் சிறப்பான ஒளிப்பதிவைக் கொண்ட படங்களின் பட்டியலை இன்றும் விமர்சகர்கள் இடும்போது ‘நீர்க்குமிழி’யை மறக்காமல் குறிப்பிடுகிறார்கள்.

தமிழில் ஒரு படம் இயக்க வேண்டும் என்பது நிமாய் கோஷின் கனவாகவே இருந்தது.  சென்னையில் அவருக்கு நெருங்கிய நண்பராக இருந்த இசை  அமைப்பாளர் எம்.பி.சீனிவாசன் மற்றும் சில நண்பர்களையும் இணைத்துக் கொண்டு ‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கினார். தமிழில் கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டப்பட்டு தயாரிக்கப்பட்ட முதல் படமே இதுதான்.

விஜயன், விஜயலட்சுமி, முத்துராமன், சகஸ்ரநாம் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எழுத்தாளர் ஜெயகாந்தன் பாடல் எழுதிய ஒரே படமும் இதுதான். படத்தை அன்றைய கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவானந்தம் துவக்கி வைத்தார். புதுமையான முயற்சிகளுக்கு கை கொடுக்கும் ஏவிஎம் நிறுவனம் வெளியிட்டது.

படம் சிறந்த தமிழ்ப் படத்திற்கான தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றபோதும், ஏனோ எதிர்பார்த்த வணிக வெற்றியைப்  பெறவில்லை. இதனால் மனம் ஒடிந்துபோனார் நிமாய் கோஷ். சில காலம் சினிமாவில் இருந்தே கூட விலகி இருந்தார்.

கம்யூனிச சித்தாந்தத்தில் ஈடுபாடுகொண்ட நிமாய் கோஷ், கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். அவரும், இசை அமைப்பாளர் எம்.பி.சீனிவாசனும் இணைந்து  திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கம், திரைப்படத் தொழிலாளர் சங்கம் என்ற இரு சங்கங்களை துவக்கினார்கள். இதுதான் இன்றைய பெப்சி சங்கத்தின் தாய் சங்கம். அதன்பிறகு பல சங்கங்கள் உருவாகி இன்று 22 சங்கங்கள் பெப்சி என்று ருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதற்கு விதை போட்டவர் நிமாய் கோஷ் என்பதால் சினிமாத் தொழிலாளர்கள் அவரை என்றுமே மறக்க மாட்டார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘சூறாவளி’ என்ற படத்தை  ஒளிப்பதிவு செய்து இயக்கினார். இதுவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு முழூக்க முழுக்க தொழிற்சங்கவாதியாக மாறிய நிமாய் கோஷ், தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர் வர்க்க பிரதிநிதியாகவே இருந்தார்.  வடபழனியில் ஒரு மிகச் சிறிய வீட்டில் தன் வாழ்நாளைக் கழித்து மறைந்தார். படைப்பாளியாய் தமிழ் சினிமாவுக்குள் வந்து  பாட்டாளிகளின் தோழனாக வாழ்ந்த நிமாய் கோஷை தமிழ் சினிமா வசதியாக மறந்து விட்டது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்