நடிக்க ஆசையா?இவரோட அட்வைஸை கேளுங்க!



விமல், விதார்த், விஜய் சேதுபதி போன்றவர்கள்  சைட் ரோலில் நடித்து நாயகனாக உயரமுடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள். அந்த வரிசையில் இடம் பிடிக்க துடித்துக் கொண்டிருக்கிறார் ஹர்ஷவர்த்தன்.
‘மகாநடிகன்’, ‘பம்பரக்கண்ணாலே’, ‘வேட்டைக்காரன்', ‘அடாவடி’, ‘மச்சான்’, ‘ஜெயிக்கிற குதிரை’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உட்பட ஏராளமான படங்களில் போலீஸ், ஹீரோ, பத்திரிகை நிருபர், ரவுடி என்று ஏராளமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார். தற்போது விமல் நடிக்கும் ‘படவா’, தம்பிராமையா இயக்கத்தில் அவர் மகன் உமாபதி நடிக்கும்  படம்  என்று பிஸியாக இருக்கும் ஹர்வர்த்தனிடம் பேசினோம்.

“உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?”

“சொந்த ஊர் சங்ககிரி. படிச்சது சிவில் என்ஜினியரிங். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்தேன். பிலிம் இன்ஸ்டிடியூட்ல ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்தேன். சிவக்குமார் சார்தான் நேர்முகத் தேர்வு நடத்தினார். அப்போது அமைதியான நடிப்புக்கு  மம்மூட்டி மாதிரியும் ஆக்ரோஷமான நடிப்புக்கு சாய்குமார் மாதிரியும் நடித்துக் காண்பித்தேன்.

மொழி உச்சரிப்புக்காக ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சூர்யா சார் பேசும் வசனத்தை பேசிக் காட்டச் சொன்னார். அந்த வசனத்தில் மல்லி, முல்லை என்று 100 வகையான பூக்களை சூர்யா சார் பேசி அசத்தியிருப்பார். நானும் அப்படியே பேசினேன். அப்படித்தான் இன்ஸ்டிடியூட்ல படிக்க வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டிடியூட்ல இருந்து வெளியே வந்ததும் நடிக்க ஆரம்பித்தேன். நடிச்சது எல்லாமே போலீஸ், ரவுடி கேரக்டர் என்று சிறு வேடங்கள். ‘அடாவாடி’ படத்தில் சத்யராஜ் இயக்குநராக நடித்திருப்பார். அதில் நான்தான் ஹீரோவாக நடித்திருப்பேன்.”

“உங்களைப் போன்ற சிறிய நடிகர்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படியிருக்கு?”

“சினிமாவில் என்னுடைய வேலையை சரியாகச் செய்து வருகிறேன். வேலையில் சமரசம் பண்ணிக் கொள்ளமாட்டேன். எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொள்வேன். சினிமாவைப் பொறுத்தவரை ரிசல்ட்டை அனுமானிக்க முடியாது. ‘ரூபாய்’ படத்துல பெரிய கேரக்டர் பண்ணியிருந்தேன். அப்போது டிமானிட்டேஷன் நடைமுறையில் இருந்ததால் படத்தை குறித்த காலத்தில் ரிலீஸ் பண்ண முடியவில்லை. அந்தப் படம் சரியான நேரத்தில் வெளிவந்திருந்தால் இந்நேரம் நான் பெரிய நடிகனாகியிருப்பேன். நாலு பேருக்குத் தெரிந்த நடிகனாகியிருப்பேன்.”

“சினிமாவில் நடிக்க உங்களுக்கு யாரெல்லாம் உதவுகிறார்கள்?”

“இன்றைய தேதிவரை நான் சினிமாவில் சர்வைவ் பண்ணுகிறேன் என்றால் அதற்கு எல்லாவிதத்திலும் எனக்கு பக்கப்பலமாக இருப்பவர் என்னுடய நெருங்கிய உறவினர் பாபு லஷ்மண். அவர்தான் என்னுடைய முதுகெலும்பு. பட வாய்ப்புகளைப் பொறுத்தவரை இயக்குநர் ஷக்தி சிதம்பரம் சார் தொடர்ந்து தன்னுடைய படங்களில் வாய்ப்பு அளித்து வருகிறார். அந்தவகையில் ஷக்தி சாரை என்னுடைய குருநாதராகப் பார்க்கிறேன்.”

“வாய்ப்பு தேடும் புதுமுகங்களுக்கு உங்கள் அட்வைஸ்?”

“சினிமாவில் ஜெயிக்க திறமை மட்டும் போதாது. ரெஃபரன்ஸ் வேணும். என்னுடைய விஷயத்தில் எனக்கு அப்படி தேவைப்படவில்லை. ஏன்னா, இதுவரை நான் நடித்த படங்கள் எல்லாமே நானாக வாய்ப்பு கேட்டு நடித்த படங்கள். நடிக்க ஆசை உள்ளவர்களுக்கு நான் சொல்லும் ஆலோசனை... அன்றாடச் செலவுகளுக்கான நிதி ஆதாரம் முக்கியம். ஆர்வம் மட்டும் போதாது.

அதேபோல் வேலை செய்துகொண்டே நடிப்பேன் என்று சொல்ல முடியாது. முழுமையாக சினிமாவுக்கு என்று தியாகம் பண்ண வேண்டும். ஏன்னா, நடித்துக்கொண்டே வேலையும் செய்வேன் என்பவர்கள் வேலையையும் முழுமையாகப் பண்ண முடியாது, சினிமாவிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாது.”

“சினிமாவில் உங்கள் லட்சியம்?”

“நடிக்க வரும் எல்லோருக்குள்ளும் ஹீரோ கனவு இருக்கும். என்னுடைய லட்சியமும் அதுவே. என்னுடைய நீண்ட நாள் கனவு நண்பர்களின் ஆதரவால் இந்த வருடம் நிறைவேற உள்ளது. பிரபல இயக்குநர் டைரக்‌ஷன் பண்ணுகிறார். அதைப்பற்றிய தகவலை இப்போதே பகிர்ந்து கொள்ள முடியாது. படத்துல இன்னொரு பெரிய ஹீரோவும் இருக்கிறார்.”

“நடிக்க விரும்பும் வேடம்?”

“மக்கள் என்னை வெகுஜன நடிகனாகப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். கமர்ஷியல் ஆக்டர் என்று பெயர் எடுக்க வேண்டும்.”
“பிடிச்ச நடிகர்?”

“சிவாஜி, சிரஞ்சீவி”“பிலிம் இன்ஸ்டிடியூட் படிப்பு சினிமாவில் நடிக்க யூஸானதா?”

“பிலிம் இன்ஸ்டிடியூட் மூலம் நன்மை இல்லை என்று சொல்ல முடியாது. படிக்கும்போதே மாணவர்கள் எடுக்கும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்ஸ்டிடியூட்டை விட்டு நான் வெளியே வந்ததும் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இன்ஸ்டிடியூட் நடிகர்கள் வெற்றி அடைந்துள்ளார்களா  என்ற கேள்வியை தேவையில்லாத கேள்வியாகப் பார்க்கிறேன். இன்ஸ்டிடியூட் படிப்பு ஒரு கைடு மாதிரி. பத்து மாத கோர்ஸ் தலையெழுத்தை மாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது. சினிமாவில் நீடிக்க வேண்டும் என்றால் புதுசா நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். சினிமாவில் எனக்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

ஷங்கர், மணிரத்னம், பாலா போன்ற பெரிய இயக்குநர்களின் படம் பண்ணணும். அதற்காக என்னுடைய வாய்ப்பு தேடும் படலத்தை தீவிரமாக்கியுள்ளேன். நல்ல திருப்புமுனைக்காகக்  காத்திருக்கிறேன். என்னுடைய கனவை ‘படவா’ படம் நனவாக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”
“சினிமா தவிர?”

“24 மணிநேரமும் என்னுடைய சிந்தனை  சினிமாவைச் சுற்றித்தான் இருக்கும். வீட்டிலேயே புராஜெக்டர் வைத்துள்ளேன். இந்திய மொழிகள் மட்டுமில்லாமல் உலகத்தின் தலை சிறந்த படங்களின் கலெக்‌ஷன் வைத்திருக்கிறேன். ‘பைசைக்கிள் தீவ்ஸ்’ படத்தை நாம் பெரிய படமாக நினைத்திருப்போம். அதையும் தாண்டிய படங்களின் கலெக்‌ஷன் என்னிடம் இருக்கிறது.

எல்லாம் அரிய கலெக்‌ஷன்.  குலதெய்வம் ராஜகோபால் ஐயாவை காமெடி நடிகராகத்தான் அறிந்து வைத்திருப்போம். அவர் ‘நாலு வேலி நிலம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார். அந்தப் படமும் வைத்திருக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா