தொரட்டிதமிழில் ஓர் உலகப்படம்!

தொரட்டி என்பது ஆடுகளுக்கு தழை ஒடிக்கப் பயன்படும் கூர் அறுவாளின் பெயர். அந்தப் பெயரில், ஊர் ஊராகச் சென்று ஆட்டுக்கிடை போட்டு வாழும் மக்களைக் கதை மாந்தர்களாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்தப்படம்.

ஆட்டுக்கிடை போட்டு வாழும் நாயகனுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்த நாயகி மீது காதல் வருகிறது. கூடா நட்பு மூலம் கேடாய் போகும் நாயகன், எந்த நேரமும் குடி போதையில் இருப்பதால், அவருக்கு பெண் கொடுக்க நாயகியின் தந்தை மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி நாயகனின் கரம் பிடிக்கிறார் நாயகி.

திருமணத்திற்குப் பிறகு மனைவி சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு இல்லற வாழ்க்கையை நன்றாக வாழும் நாயகனுக்கு மீண்டும் கூடா நட்பு மூலம் கேடு வருகிறது.  அதிலிருந்து மீண்டு வந்தாரா அல்லது வாழ்க்கையை இழந்தாரா  என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஷமன் மித்ருவின் பாத்திரம், நாயகன் என்பதற்கான இலக்கணங்களை உடைத்து எதார்த்த இளைஞனைப் பிரதிபலிக்கிறது. அவ்வேடத்துக்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். நின்று கொண்டே தூங்குவது, நாயகியிடம் மருண்டு நிற்பது, கடைசி யில் வெறி கொண்டு திரிவது ஆகிய பாவங்களில் தேர்ச்சி பெறுகிறார்.

படத்தின் பெரும் பலம் நாயகி சத்யகலாதான். எண்ணெய் வைத்து வழித்துச்சீவிய தலையும் பெரிய பொட்டும் உருண்டு திரண்ட கண்களுமாக அவருடைய தோற்றமே ஈர்க்கிறது.நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் அழகு, அம்மா பேச்சி ஆகியோர் அச்சில் வார்த்த ஆட்டுக்கிடைக்காரர்களாகவே இருக்கிறார்கள்.

நாயகியின் பெற்றோர் குமணன், ஸ்டெல்லா, நாயகனின் கூடா நண்பர்களாக வருகிற சுந்தர்ராஜ், முத்துராமன், சீலன் ஆகியோரும் கனகச்சிதமாக நடித்திருக்கிறார்கள். குமார்தரின் ஒளிப்பதிவு கதையின் விறுவிறுப்புக்கு நன்றாகவே பயன்பட்டிருகிறது.வேத்சங்கர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுகம். மண்ணின் மணம் குழைத்து தமிழள்ளிக் கொடுத்திருக்கிறார் சினேகன்.

முன்னொரு காலத்தில் இப்படி ஒரு தொழில் இருந்தது. அது இயற்கையையும் விவசாயத்தையும் பேணிக் காத்தது என்பதை இப்போதைய இளைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் உரத்துச் சொல்லும் கலைப்படைப்பாக அமைந்திருக்கிறது ‘தொரட்டி.’.அதை கலைப்படமாகவும் இல்லாமல் கமர்ஷியல் படமாகவும் இல்லாமல் அற்புதமான படைப்பாகக்  கொடுத்து பாராட்டு பெறுகிறார் இயக்குநர் பி.மாரிமுத்து.