எமனை இயக்கியவர்!



சிவாஜி நடித்த ‘எமனுக்கு எமன்’, ரஜினி நடித்த ‘அதிசயப்பிறவி’ படங்களுக்குப் பிறகு எமதர்மராஜனை கதையின் நாயகனாகக் கொண்டு வெளியாகி இருக்கும் படம் ‘தர்மபிரபு’. சிவாஜியின் எமன் கெட்அப், வினு சக்ரவர்த்தியின் எமன் கெட்டப்புடன் யோகி பாபுவின் எமன் கெட்அப்பையும் போட்டு மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒருபுறம் கலக்கி வருகிறார்கள். வெற்றிப்படத்தை தந்த குதூகலத்தில் இருக்கும் இயக்குநர் முத்துக்குமரனிடம் பேசினோம்.
“முதல் படமே எமன் பற்றி இயக்கி இருக்கீங்களே...?”

“சமூகத்தில் நடக்கிற அவலங்களைப் பார்க்கிறோம். ஆனால் தட்டிக் கேட்க முடியவில்லை. உதைக்க வேண்டும், தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை. அதனால் மரணத்தைத் தருகிற எமனாக என்னை பாவித்துக்கொண்டு கற்பனையில் அவர்களுக்கு தண்டனை தருவேன். இந்த மனநிலையே இந்தக் கதை உருவாக காரணம். இதைத்தான் என் முதல் படமாக இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இப்போது நடந்திருக்கிறது.”

“எமன் கேரக்டருக்கு யோகி பாபுவை எப்படி தேர்வு செய்தீர்கள்?”

“யோகி பாபுவும் நானும், ஆரம்ப கால ரூம்மேட்ஸ். இருவரும் சினிமா வாய்ப்புக்காக நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறோம். அப்போது இந்தக் கதையை அவரிடம் சொல்வேன். அப்போது, இந்தக் கதையை படமாக்கினால். கவுண்டமணியைத்தான் எமனாக நடிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்பிறகு யோகி பாபு சினிமாவில் அறிமுகமாகி, எங்கேயோ போய் விட்டார்.

நான் இப்போதுதான் தட்டுத் தடுமாறி இயக்குநராகி இருக்கிறேன். அவரே என் படத்தில் எமனாக நடிப்பார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. ஆனாலும் இன்றைய தேதியில் எமனாக நடிக்க அவர் அளவுக்கு பொருத்தமானவர் யாரும் இல்லை என்பது என் கருத்து.”

“பிசியான நடிகராச்சே, எப்படி கால்ஷீட் கொடுத்தார்?”

“முதலில் அவர் என் நண்பர் அதுதான் முதல் காரணம். அடுத்து இந்த கதை அவருக்கு பல வருடங்களுக்கு முன்பே தெரியும். முன்பே சரியாக திட்டமிட்டு அவரிடம் தேதி கேட்டேன். கொடுத்தார். 45 நாட்களில் திட்டமிட்டு 39 நாளில் படத்தை முடித்தேன். தயாரிப்பாளரிடம் சொன்ன பட்ஜெட்டுக்கும் குறைவாக படத்தை எடுத்தேன். பெரும் பகுதி படப்பிடிப்புகள் எமன் செட்டில்தான் நடந்தது. இதுதவிர பொள்ளாச்சியிலும், சென்னையிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.”

“படத்தில் அரசியல் தூக்கலாக இருந்ததே?”

“எமலோக அரசியலைத்தான் பேசியிருக்கிறோம். அதை இங்குள்ள அரசியலோடு இணைத்துப் பார்ப்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். தணிக்கைக் குழு பார்த்து விட்டு ஓரிரு மியூட் மட்டும் கொடுத்து யு சான்றிதழ் கொடுத்தார்களே! அதுவுமில்லாமல் இப்போதைய சூழலில் அரசியல் பேசுவதை விட்டுவிட்டு வேறு எப்போதுதான் பேசப்போகிறோம்.

நம் மக்கள் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தைக்கூட இழக்கக்கூடிய சூழலில் இருக்கிறார்கள். என்ன நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை அல்லவா?”

“மேக்கப், காஸ்ட்யூம், செட்டுக்கு செலவாகி இருக்குமே?”

“கொஞ்சம் அதிக செலவுதான். இப்படியொரு கதையையும், களத்தையும் எடுத்துக் கொண்டால் அதையெல்லாம் தவிர்க்கவே முடியாது. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் பணியாற்றிய மேக்கப்மேன் பாபுவையும், காஸ்ட்யூம் டிசைனர் முருகனையும் அழைத்து வந்து இதில் பணியாற்ற வைத்தோம். யோகிபாபு முப்பது கிலோ எடையுள்ள நகைகளை அணிந்து ரொம்பவே கஷ்டப்பட்டுத்தான் நடித்துக் கொடுத்தார்.”

“யோகிபாபுவுக்கு காதல், டூயட்டெல்லாம் வைக்கவில்லையே! அவரது ரசிகர்கள் இதனால் ஏமாற்றத்துக்கு உள்ளாகி இருப்பது தெரியுமா?”

“யோகி பாபுவுக்கு இல்லைதான். ஆனால் சாம் ஜோன்ஸ், ஜனனி அய்யர் ஜோடிக்கு வைத்து இதை ஈடுகட்டி விட்டோமே! அவர்கள் காதலுக்கு ஒரு பிரச்னை. அதையும் எமன் தீர்த்து வைத்ததாக சித்தரித்திருந்தோம். சித்ரகுப்தனாக நடித்திருக்கும் ரமேஷ் திலக்கிற்கும் இது பெரிய கேரக்டர். ரசிகர்கள் அவருக்கும் பாராட்டுகளை கொட்டித் தீர்க்கிறார்கள்.

யோகி பாபுவுக்கு நிகரான கேரக்டரை ரமேஷ் தாங்குவாரா என்கிற தயக்கம் எங்களுக்கு இருந்தது. எங்கள் தயக்கத்தை உடைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். திரையரங்கில் யோகிபாபுவுக்கு எழுவதைப் போலவே, ரமேஷ்திலக்கின் நடிப்புக்கும் கரகோஷம் கிளம்பியது.”

“அடுத்தும் இதுபோல சமூகப் பிரச்சினைகளை முன்வைத்தே படங்கள் இயக்குவீர்களா?”
“எல்லாவிதமான படங்களையும் இயக்குவேன். அதில் சமூகப் பிரச்சினைகளை பேசவேண்டிய இடங்களில் தயக்கமின்றி தைரியமாகப் பேசுவேன்.”

- மீரான்