சென்னை டூ செவ்வாய் (வழி : பழனி)



விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் புரொடக்‌ஷனுடன் இணைந்து ‘சென்னை பழனி மார்ஸ்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பிஜூ. இந்தப் படம் முற்றிலும் புதிய களம், புதிய கதை என ரசிகர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும் என்று பெரும் நம்பிக்கையோடு பேசுகிறார் இயக்குநர் பிஜூ.

“அது எப்படி சென்னையிலிருந்து பழனி வழியா செவ்வாய்க்கு பயணம் சாத்தியம்?”

“நல்லவேளை. நீங்களாவது தலைப்பைப் புரிஞ்சுக்கிட்டு கேட்டீங்க. நண்பர்கள் இருவர் சேர்ந்து  சென்னையிலிருந்து பழனி வழியாக மார்ஸ் போக முடியுமான்னு முயற்சி பண்றாங்க. அது ஒரு தந்தையின் கனவாக இருந்தது. தந்தையைத் தொடர்ந்து அவரது பையன் அந்தக் கனவை நூல் பிடித்துப் போகிறான். அவனுடன் நண்பனும் சேர்ந்துகொள்ள பயணம் சென்னையிலிருந்து பழனியை நோக்கித் தொடங்குகிறது.

இவர்களின் கனவும், பயணமும் மற்றவர்களால் எப்படி பார்க்கப்படும், என்னென்ன சுவாரஸ்யங்கள்  நடக்கும், என்ன வெல்லாம் காமெடி என்பதுதான் படமே. அவர்கள் மார்ஸ் போனார்களா என்பதுதான் கிளைமாக்ஸ்.”“தமிழில் சயன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வெற்றி பெறுவது கொஞ்சம் அரிதாச்சே?”

“அந்த அரிதிலும் அரிதா நம்ம படமும் இருக்கட்டுமே? அதே நேரம் இந்தப் படத்தை முழுமையான சயன்ஸ் ஃபிக்‌ஷன் என்றும் சொல்ல மாட்டேன். நான்கு சண்டைக்காட்சிகள் கொண்ட படம், ஹீரோயிஸமான படங்களும் இங்கு வேண்டும். ‘சென்னை பழனி மார்ஸ்’ மாதிரி புதுமுகங்கள் நடிக்கிற வித்தியாசமான படங்களும் வேண்டும். எல்லாவிதமான படங்களும் வரும்போதுதான் மக்களுக்கு சினிமா பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும்.”
“எப்படி இந்தக் கதையை யோசிச்சீங்க?”

“ஒரு நொடிக்கு கிட்டத்தட்ட 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதை ஒளியின் வேகம் என்பார்கள். ஒருவேளை ஒளியின் வேகத்திலேயே நாம் பயணித்தால் கூட இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சில பகுதிகளை சென்று அடைவதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகுமாம்.

இதையெல்லாம் வாசிக்கிறப்போ எளிமையா சினிமாவில் சொல்ல முடியுமான்னு யோசிச்சேன். அதுமட்டுமன்றி, ராமாயணத்தில் வந்த புஷ்பக விமானம் பற்றி படித்தபோதும் இதையெல்லாம் ஒன்றிணைத்து ஒரு படமாக உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அதன் விளைவாக உருவானது தான் இந்தக் கதை.”

“நம்ப முடியாத காட்சிகள் நிறைய இருக்கும் போலிருக்கே?”

“அதுதான் இல்லை. ஏற்கனவே சொன்னபடி மார்ஸை நோக்கிய பயணம் என்பதால் இது கம்ப்ளீட் சயின்ஸ் பிக்‌ஷன் படமோ அல்லது கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த காலப்பயணம் குறித்த படமோ அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும் இல்லையா? சிலரிடம் அதை சொன்னால் நம்பக் கூட மாட்டார்கள். ஆனால் நமது கனவை நோக்கி விடாமுயற்சியுடன்  முயற்சித்தால் அதை அடையலாம் என்பதை தான் இந்தப் படத்தின் மூலம் சொல்ல முயற்சித் திருக்கிறேன்.

முனிவர்கள், சித்தர்கள் காலத்திலேயே இப்படி எண்ணங்கள் மூலமாக பயணம் செய்திருக்கும் நிறைய செய்திகள் உண்டு. ராவணன் நினைத்ததும் புஷ்பக விமானம் வந்து நின்றதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இங்கே புஷ்பக விமானம் என்பது கூட அவரது சிந்தனை தான்.”
“புரியலையே?”

“படம் பார்த்தா புரியும். பத்து இருபது வருடங்களுக்கு முன்பு  வாட்ஸ் ஆப், எஸ்.எம்.எஸ் மூலமாக உலகின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் இன்னொரு நபருக்கு செய்தியோ புகைப் படமோ நொடிப்பொழுதில்  அனுப்ப முடியும் எனச் சொல்லி இருந்தால் நீங்கள் நம்பி இருப்பீர்களா? ஆனால், அது இப்போது சாத்தியமாகி இருக்கிறது. கனவு ஜெயிக்க வேண்டுமென்றால் அதை நோக்கி தொடர்ந்து பயணப்படுங்கள் என்பதையே இந்தப் படம் உங்களுக்கு செய்தியாகச் சொல்லும்.”


“படத்துலே யாரெல்லாம் இருக்காங்க?”

“பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்து, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர்.

இவர்களுடன் மதன்குமார் தட்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்தக் கதைக்கு கதாநாயகி தேவைப்படவில்லை. இந்தப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என்பதால் நடிப்பு பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் ஒர்கஷாப் நடத்தினோம்.”

“மத்த டெக்னிக்கல் விஷயங்கள்?
“டிராவல் படம் என்பதால் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. சில பாடல்கள் மாண்டேஜ் காட்சிகளாக இருக்கும்.  நிரஞ்சன் பாபு இசையமைத்திருக்கிறார். பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார். படத்தின் மூன்று பாடல்களை நாயகர்களில் ஒருவரான ராஜேஷ் கிரி பிரசாத்தே பாடியுள்ளார்.”

“விஜய்சேதுபதியே வசனம் எழுதியிருக்கிறாரே?”

“இந்தப் படத்தின் கதை ஏற்கனவே விஜய்சேதுபதிக்கு நன்கு தெரியும் என்பதால் பிஸி ஷெட்யூலுக்கு மத்தியிலும் அவரே வசனம் எழுதிக் கொடுத்தார். இந்தபடம் நல்லபடியாக வெளிவரவேண்டும் என்பதற்காக ஒரு நண்பராக, ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு எனக்கு பட வெளியீட்டுப் பணிகளில் மிகுந்த உதவியாக இருந்து வருகிறார்.

ஒரு சீனில் கூட விஜய்சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஒரு சிறிய பட்ஜெட் படத்தை இன்றைய காலகட்டத்தில் ரிலீஸ் செய்வது என்பது  எவ்வளவு சவாலான விஷயம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் தன் சொந்த தயாரிப்பு போல் இந்தப் படம் வெளிவருவதற்கு விஜய்சேதுபதி உதவிக்கரம் நீட்டியிருக்கிறார்.’’

- எஸ்ரா