70வது படம் இயக்குகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்!நடிகர் விஜய்யின் தந்தை என்கிற அடையாளத்தைத் தாண்டி, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து  மொழிகளிலும்  வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகரன். தமிழில் ரஜினிகாந்த், விஜயகாந்த், விஜய், ரகுமான் என பல முன்னணி  நடிகர்களை இயக்கியதோடு விஜயகாந்த், விஜய், விஜய் ஆண்டனி, சிம்ரன் போன்ற ஏராளமான நடிகர், நடிகைகளை திரையுலகில் பிரபலப்படுத்தியவர். இவர் இயக்கும் எழுபதாவது  படம் ‘கேப்மாரி’. இந்தப்
படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படம் ஜெய்  நடிக்கும் 25வது படமாகும். நாயகிகளாக அதுல்யா, வைபவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சத்யன், தேவதர்ஷினி, பவர் ஸ்டார், லிவிங்ஸ்டன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் ஆகியோர் நடிக்கிறார்கள்.காதல், கவர்ச்சி, காமெடி என்று பொழுதுபோக்கு படமாக உருவாகி வரும் இந்தப் படத்தை கிரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில்  படத்தின் நாயகன் ஜெய் பட அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“எப்படி இந்த பிராஜக்ட்டுலே நீங்க?”

‘‘இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்னு சொல்லலாம். ஏன்னா, விஜய் அண்ணா குடும்பத்துடன் எனக்கு நல்ல ரிலேஷன்ஷிப் இருக்கிறது. இந்தப் படத்தின் கதையை எஸ்.ஏ.சி. சார் ஒன்றரை மணி நேரம் சொன்னார்.
நானும் கதையை ஆர்வமா கேட்டேன். கதை கேட்டபோது நல்லா இருக்கு, நல்லா இல்லைன்னு ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்தார். என்னால் எதுவும் சொல்ல முடியாத அளவுக்கு ஸ்க்ரிப்ட் பக்காவா இருந்தது. அவ்வளவு பெரிய இயக்குநர், என்னை மாதிரி இளம் நடிகனுக்கு பொறுமையா கதை சொல்வதெல்லாம் இப்போதைய காலத்தில் ரொம்பப் பெரிய விஷயம்.

கதை கேட்கும்போது எனக்குப் பெரிய ஆச்சர்யம். கதையோடு என்னை ரொம்ப நெருக்கமா தொடர்புபடுத்திப் பார்க்க முடிந்தது. என் வீட்லே கேண்டிட் கேமரா செட் பண்ணி என்னைப் பத்தி முழுசாத் தெரிஞ்சுக்கிட்டு கதை எழுதினாரான்னு யோசிக்கற அளவுக்கு அந்த கேரக்டர் அப்படியே என்னை பிரதிபலிச்சது.”

“அப்படியென்ன பெரிய அப்பாடக்கர் கேரக்டர்?”

“ரொம்ப ரகளையான கேரக்டர் சார். ரெண்டு பீருக்கு மேலே அடிச்சிட்டா அந்த ஹீரோ என்ன பண்ணுவான்னு அவனுக்கே தெரியாது. இதுதான் என்னோட ஒரிஜினல் கேரக்டரான்னு கேட்காதீங்க. இந்த அளவுக்கு இல்லை. ஆனா, ஓரளவுக்கு நானும் சேட்டைக்காரன்தான். அப்பப்போ நியூஸ்பேப்பரில் எல்லாம் என்னைப்பத்தி படிச்சிருப்பீங்களே? இன்றையத் தொழிலாளர்களின் வாழ்க்கை சூழல் பற்றிய படமாக உருவாகியுள்ளதோடு, இப்போதைய இளைஞர்களின் காதலை மையப்படுத்தியும் கதை அமைக்கப்பட்டுள்ளது.”

“எஸ்.ஏ.சி. ரொம்ப மூத்த இயக்குநர். தலைமுறை இடைவெளி இருந்ததா?”

“அவரைப்பத்தி நிறைய சொல்லணும். இந்தப் படம் பண்ணுவதற்கு முன் எனக்கு இரண்டு கமிட்மெண்ட் இருந்தது. ஆனால் இது குறுகிய கால தயாரிப்பு என்பதால் உடனே கால்ஷீட் கொடுத்தேன். ஆரம்பத்தில் எஸ்.ஏ.சி. சார் படத்துல கமிட்டாகியிருக்கிறேன் என்று நண்பர்களிடம் சொன்னபோது ஆளாளுக்கு பயம் காட்டினார்கள்.

அவர் மிலிட்டரி அதிகாரி மாதிரி ரொம்பக் கண்டிப்பா நடந்துகொள்வார் என்றெல்லாம் ஏத்திவிட்டார்கள். படப்பிடிப்பு ஆரம்பித்தபோதும் கூட அவருடைய நடவடிக்கையும் அப்படித்தான் இருந்தது.  ஆனா, அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போது அவரைப் போல் பாராட்ட யாராலும் முடியாது என்று உணர்ந்தேன்.

 என் மீதும் சக நடிகர்கள் மீது அதிக நம்பிக்கை வைத்தார். கொஞ்ச நாளிலேயே மிக சகஜமா அவரிடம் பழக முடிந்தது. சொல்லப்போனா வெங்கட் பிரபு டீம்ல எனக்கு என்ன சுதந்திரம் இருக்குமோ, அதைவிட ஒரு மடங்கு அதிகமாவே சார் சுதந்திரம் கொடுத்தார். நான் மொக்கையா ஒரு ஜோக் அடிப்பேன். அதுக்கே விழுந்து விழுந்து சிரிப்பார்.

நடிகனா இந்தப் படத்தில் எனக்கான ஸ்பேஸ் நிறையவே கொடுத்தார். அவருடைய அனுபவத்துக்கு முன்னாடி நான் ரொம்ப சின்னப் பையன் என்றாலும் சின்னதா நான் எதாவது சஜஷன் சொன்னால் அதையும் கேட்டுக் கொள்வார். அவருடைய ஸ்டைல் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். அதே சமயம் என்னுடைய ஸ்டைலுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.

சில சமயம் நடிகர்கள் முகங்களில் சோர்வு ரேகை படர்ந்திருந்தால் உங்களால் பண்ண முடியும் என்று உற்சாக வார்த்தைகளால் எனர்ஜி கொண்டு வந்துவிடுவார். படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்க்கும்போது ரொம்பவும் யதார்த்தமான படமாக வந்துள்ளது. எஸ்.ஏ.சி.சார் வசனங்களில் சமூகத்துக்கான குரல் இருக்கும். இந்தப் படத்திலும் வசனங்கள் ஷார்ப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்.”

“டைமுக்கு ஷூட்டிங் வரச் சொல்வாரே?”

“கலாய்க்கறீங்க பார்த்தீங்களா? இந்தப் படத்தில் நடிக்கும்போது எஸ்.ஏ.சி. சார் சொன்ன டைமுக்கு முன்னாடியே பக்காவா ஷூட்டிங் போனேன். மற்ற படங்களில் இயக்குநர்கள் எட்டு மணிக்கு வாங்கன்னு சொன்னா எட்டரைக்குதான் படப்பிடிப்பு ஆரம்பமாகும். ஆனால், எஸ்.ஏ.சி சார் முன்கூட்டியே படப்பிடிப்புக்கு வருவார். எட்டு மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் என்றால் எட்டு மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட்டை கரெக்ட்டா எடுக்க ஆரம்பித்து
விடுவார். இந்த ஸ்டைலை ‘பகவதி’ படத்தில் நடிக்கும்போது விஜய் அண்ணாவிடம் பார்க்க முடிந்தது.

இன்றும் விஜய் அண்ணா நேர நிர்வாகத்தில் சரியாக இருக்கிறார் என்றால், சாரோட டிரைனிங் என்று சொல்வதைவிட வேறு என்ன சொல்ல முடியும். என்னைப் போன்ற கலைஞர்களுக்கு விஜய் அண்ணனும் எஸ்.ஏ.சி. சாரும் நேர விஷயத்தில் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.”

“படம் பற்றி வெறென்ன?”
“படப்பிடிப்பு நடந்த நாட்களில் மொத்த டீமே ஜாலியா இருந்தது. படப்பிடிப்பு மாதிரி இல்லாமல் பிக்னிக் போன ஃபீல் இருந்தது. ஒரு நாளைக்கு எஸ்.ஏ.சி. சார்அவர் வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு வருவார். இன்னொரு நாளைக்கு அதுல்யா அவர் வீட்லே இருந்து பிரியாணி  செய்துகொண்டு வந்தார். வைபவி ஒரு நாள் ஆன்லைன்ல ஃபுட் ஆர்டர் பண்ணி படப்பிடிப்புல உள்ள எல்லாருக்கும் கொடுத்தார்.

இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் மியூசிக் பண்ணுவதோடு காமெடி ரோலிலும் நடித்திருக்கிறார். அவர் பார்ப்பதற்கு அமுல் பேபி மாதிரி தெரிந்தாலும் ரொம்ப விவரமான ஆள். சமயத்துல அவருடைய ஆக்டிவிட்டி பிரேம்ஜியை ஞாபகப்படுத்துமளவுக்கு இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ஜீவன் சார் ரொம்ப உதவியா இருந்தார். என்னை அழகாகக் காட்ட பெரிய முயற்சி எடுத்தார். என்னுடைய 25வது படம் பெரிய இயக்குநரின் படமாக அமைந்திருப்பது சந்தோஷம். அதேபோல் எஸ்.ஏ.சி.சாருக்கும் இது 70வது படம். இந்தப் படத்துடன் ஓய்வு பெறுவதாகவும் சார் சொல்லியிருக்கிறார். அவர் தொடர்ந்து படங்கள் இயக்க வேண்டும் என்பதுதான் என்னைப் போன்றவர்களின் விருப்பம்.

அந்த வகையில் சார் தன்னுடைய முடிவைக் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். எஸ்.ஏ.சி. சார் படங்களில் இந்தப் படம் வித்தியாசமா இருக்கும். இந்தப் படத்தை பார்க்கும்போது நம் வாழ்க்கையை பார்த்த ஃபீல் கிடைக்கும். பெரிய ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருக்கு.’’

- சுரேஷ்ராஜா