நடிப்பைத் துறந்த சாவித்ரி!மின்னுவதெல்லாம் பொன்தான்-38

ஒருகட்டத்தில் தமிழில் மார்க்கெட் குறையவே தெலுங்கு பக்கம் போன எஸ்.ஜே.சூர்யா, அங்கு பவன்கல்யாணை வைத்து இயக்கிய புலிப்படம், வணிகரீதியாக பாயவில்லை. கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்கு மீண்டும் வந்து ‘இசை’ என்ற படத்தை தொடங்கினார்.
தமிழில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக வெறித்தனமாக அவர் தொடங்கிய படம். அனுபவம் வாய்ந்த இசை அமைப்பாளர் ஒருவர் தன் சிஷ்யன் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் அவனை அழிக்க போடுகிற திட்டமாக அதன் கதை அமைந்தது. இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் கதை என்கிற பில்டப்புகள் கொடுக்கப்பட்டன.

அந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்தான் சாவித்ரி. இசை படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யாதான்” என்று ‘குஷி’ நினைவுகளை பகிர்ந்தார். அதே விழாவில் எஸ்.ஜே.சூர்யா, சாவித்ரியை அறிமுகப்படுத் தினார்.

“4 மாதங்கள் இந்தியா முழுக்க சுற்றி, பல மொழி நடிகைகளை ஆடிஷன் நடத்தி இறுதிச் சுற்றுக்கு வந்த 124 பேரில் தேர்வானவர்தான் இந்த சாவித்ரி. அவரது இயற்பெயர் சுல்குனா பாணிக்கிரஹி. நடிகையர் திலகம் சாவித்ரி போன்ற அழகும், அவரைப் போன்ற நடிப்புத் திறமையும் இருப்பதால் சாவித்ரி என்று பெயர் வைத்திருக்கிறேன். தமிழ் நாட்டில் இன்னொரு சாவித்ரியாக வலம் வருவார்” என்று அறிவித்தார்.

‘இசை’ படத்திற்குப் பிறகு சாவித்ரி என்ன ஆனார்? என்பதைப் பற்றி இறுதியில் பார்ப்போம்.அதற்கு முன்பாக சாவித்ரி யார் என்பதை முதலில் பார்க்கலாம். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுல்குனா, ராணுவ குடும்பம், சுதந்திரமான வாழ்க்கை, பிறப்பிலேயே அழகாக இருந்ததால் மாடலிங் துறையில் கால் பதித்தார். அதன் பிறகு விளம்பரப் படங்கள். பிறகு ‘அம்ரத் தாரா’ என்ற  இந்தி தொலைக்காட்சித் தொடரில் அறிமுகம் ஆனார். டாட்டர் ஆஃப் சாஹில்யான், பிடாய் என தொடர்ந்து தொடர்களில் நடித்தார்.

2011ம் ஆண்டு ‘மர்டர் 2’ படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆனார். ‘இஷாக்வாலா லவ்’ என்ற மராட்டி படத்திலும் நடித்தார். இந்தப் படத்தைப் பார்த்துதான் எஸ்.ஜே.சூர்யா தமிழுக்கு அழைத்து வந்தார். ‘இசை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் எஸ்.ஜே.சூர்யா சொன்னதுபோல் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருக்க வேண்டியவர்தான்.

வராமல் போனதற்கு முதல் காரணம், இசை படத்தின் தோல்வி. இசை படத்தின் தோல்விக்கான காரணம் படத்தில் இசையை விட தசைக்கு முக்கியத்தும் கொடுத்தது.  நடிப்பில் திறமையைக் காட்ட வேண்டிய சாவித்ரி திறந்து காட்டி நடித்திருந்தது. இதனால் முதல் படத்திலேயே தமிழ்நாட்டு ரசிகர்கள் பேக்அப் பண்ணிவிட்டார்கள் சாவித்ரியை.

ஆனாலும் ‘இசை’ படத்தில் நடிக்க வாய்ப்பிருந்த ஒரு சில காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அப்படத்தில் நடித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ‘குரு தக்‌ஷிணா’ என்ற இந்திப் படத்தில் நடித்தார். அதன் பிறகு மூன்று வருட இடைவெளி விட்டு ‘ரெய்ட்’ என்ற படத்தில் நடித்தார்.

அதன்பிறகு கிட்டத்தட்ட சினிமாவிலிருந்து ஒதுங்கி விட்டதாக ஒரு தகவல்.,  இந்திப் படங்களில் நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் மாடலிங் கோ ஆர்டினேட்டராக பணியாற்றி வருகிறார் என்ற தகவலும் இருக்கிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்கிற பழமொழி இந்த புதிய சாவித்ரிக்கு சரியாகப் பொருந்துகிறது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்