ஐபிஎஸ் ஆக நினைத்தவர் ஐபிஎஸ் ஆக நடிக்கிறார்!



‘‘சினிமாவுக்கான அத்தனை கலைகளையும் கற்றுக் கொண்டு சாதனை படைத்தவர்கள் மத்தியில் சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாமலேயே இப்போது வித்தியாசமான படங்கள் மூலம் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள் புதியவர்கள். அவ்வரிசையில் லேட்டஸ்ட் வரவு ஹிட்லர். இவர் ‘நீர்முள்ளி’ என்ற படத்தைத் தயாரித்து இயக்குவதோடு, நாயகனாகவும் நடித்துள்ளார். தன்னுடைய சினிமா பிரவேசத்தைக் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“சினிமாவுக்கு ரொம்ப லேட்டா வந்த மாதிரி தெரியுதே?”

“எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. அப்பா ஆர்மியில் இருந்தார். அப்பா கண்டிப்புக்கும், வித்தியாசத்துக்கும் பெயர் பெற்றவர். அதனால் தான் எனக்கு ஹிட்லர் என்று பெயர் வைத்தார். அக்கா, மாமான்னு வீட்லே நிறைய டாக்டர்ஸ், என்ஜினியர்ஸ் இருக்கிறார்கள். இயல்பாகவே எங்கள் குடும்பம் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம் என்பதால் எனக்கும் படிப்பு மீது ஆர்வம் அதிகம்.

என்னுடன் படித்த இரண்டு நண்பர்கள் சென்னையில் இப்போது ஐ.பி.எஸ்.அதிகாரியாகவும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியாகவும் இருக்கிறார்கள். நண்பர்களைப் போல் நானும் டிகிரி முடித்ததும் சிவில் எக்ஸாம் எழுத ஆரம்பித்தேன். ஆனால் அந்தச் சூழ்நிலையில் தனிப்பட்ட பிரச்சனைகளால் என்னால் சிவில் எக்ஸாமுக்கு தயாராக முடியவில்லை. தொடர்ந்து நேரத்தை விரயமாக்காமல் டி.பார்மஸி முடித்துவிட்டு சொந்தமா மெடிக்கல் ஷாப் நடத்தினேன்.

அப்போது கோலிவுட் இயக்குநர் ஒருவர் பழக்கமானார். எனக்கு சின்ன வயதிலிருந்தே சினிமாத்துறை மீது ஆர்வம் இருந்தது. ஆனால் அதற்குரிய சூல்நிலை இல்லாததால் பெரியளவில் சினிமா ஆசையை வளர்த்துக் கொள்ளவில்லை. கோலிவுட் இயக்குநரின் நட்புக்குப் பிறகு சினிமா ஆர்வம் அதிகமானது. ஆரம்பத்தில அந்த இயக்குநரும் எனக்கு உதவுவது போல் சில விஷயங்கள் பண்ணினார்.

நாளடைவில் அவர் நடவடிக்கைகள் என்னிடம் பணம் பறிக்கும் முயற்சியாக இருந்தது. சினிமாவையும் நட்பையும் அப்போது புரிந்து கொண்டேன். ஒரு கட்டத்தில் அவருடனான நட்பை துண்டித்து எனக்குள் இருக்கும் திறமையை பயன்படுத்தி சினிமாவில் முட்டிமோதிப் பார்ப்போம் என்ற முயற்சியில் இறங்கினேன். மடமடன்னு கதை எழுத ஆரம்பித்தேன். அப்படி எடுக்கப்பட்டதுதான் இந்த ‘நீர் முள்ளி’ என்கிற படம்.”

“அது என்ன ‘நீர்முள்ளி’ன்னு வித்தியாசமான தலைப்பு?”

“நீர்முள்ளி என்பது வயல் வெளிகளில் காணப்படும் ஒரு முள் செடி. அச்செடியை அகற்றுவது என்பது சிரமமான காரியம். கொஞ்சம் கவனம் சிதறினாலும் முள் குத்திவிடும். துன்பத்துக்குப் பின் இன்பம் போல் அதன் மருத்துவக் குணங்கள் அதிகம். அது போல்தான் பெண்களும் சிறு தவறுகளை உணர்ந்துகொண்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

அதனால் தான் இந்தப்  படத்திற்கு ‘நீர்முள்ளி’ என்ற டைட்டிலை செலக்ட் பண்ணினேன்.இந்தப் படம் கிரைம் மற்றும் காதல் கலந்த கமர்ஷியல் படம். இன்றைய சூழ்நிலையில் சமுதாயத்தில் பெண்கள் தங்களைச் சார்ந்த ஆண் உறவுகளை எப்படி கையாள்கிறார்கள், அதன் மூலம் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை. காலத்திற்கேற்ப பெண்களின் எண்ண ஓட்டமும் மாறுபடுவதால் ஏற்படும் சீர்கேடு பற்றி கதை இருக்கும். பெண்களுக்கான ஒரு விழிப்புணர்வை இந்தப் படம் கொடுக்கும். இது பெண்களுக்கான உணர்வுபூர்வமான சமுதாய மாற்றத்திற்கான ஒரு மௌனபுரட்சியை ஏற்படுத்தும்.”

“நீங்களே அரிதாரம் பூசுவதற்கு எதாவது காரணம் இருக்கிறதா?”

“இந்தக் கதையை எழுதும்போதே என்னை மனதில் வைத்துதான் எழுதினேன். சின்ன வயதில் சில்வர்ஸ்டர் ஸ்டோலன், ஜாக்கிசான் போன்றவர்கள் என்னை அதிகம் பாதித்திருக்கிறார்கள். அப்போதிலிருந்து என்னுடைய நடிப்பு மூலம் சமுதாயத்துக்கு கருத்து சொல்லும் படங்களை இயக்கி நடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். நீண்ட நாள் கனவு இப்போது நிறைவேறி உள்ளது.”

“படத்துல உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“படத்துலே ஐ.பி.எஸ். அதிகாரியா வர்றேன். இயல்பாகவே என் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பேன். என்னுடைய உருவம் போலீஸ் கேரக்டருக்கு பொருந்தியதால் என்னை முழுமையா செதுக்கி கேரக்டருக்காக ஆயத்தமானேன்.”

“நாயகி?”

“சுமா பூஜாரி. பெங்களூர் வரவு. ஏற்கனவே ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ படம் பண்ணியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு கதாநாயகிக்கான முழு அந்தஸ்தைப் பெற்றுத் தரும். அவரும் போலீஸ் ஆபீசராக வர்றார். அவருடைய தோற்றம் போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமாக இருந்ததால் முதல் சந்திப்பிலேயே அவர்தான் நாயகி என்று முடிவு பண்ணிட்டேன். நாயகிக்கான இடத்தை மட்டும் நிரப்பாமல் கதையை நகர்த்திச் செல்வதில் அவருக்கும் முக்கியத்துவம் இருக்கும்.”

“காதல் காட்சிகளில் அதிகம் நெருக்கம் தெரிகிறதே?”

“நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்டில்ஸ் பப்ளிசிட்டிக்காக எடுக்கப்பட்டது. கதையில் ஒரு இடத்தில் கூட நானும் நாயகியும் கொஞ்சிக் குலவுவது போலவோ கட்டித் தழுவிக் காதலிப்பது போலவோ ஒரு காட்சியையும் பார்க்க முடியாது. புகைப்படத்தில் இருக்கும் கட்டிப்பிடித்தல், தழுவல் எல்லாம் ஒரு விளம்பரத்துக்காக மட்டுமே.”

“வேற யாரெல்லாம் இருக்கிறார்கள்?”

“தேஜ்பூரைச் சேர்ந்த ரேகா மெய்வாரா சின்ன வயது நாயகனின் அம்மாவாக வர்றார். பொன்னம்பலம், வாகை சந்திரசேகர், இமான் அண்ணாச்சி, நளினி, வீரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். இவர்களுடன் அப்பா கேரக்டரில் இயக்குநர் அகத்தியன் வர்றார். அவருடைய கேரக்டர் படத்துல எங்கேயாவது உங்க வீட்டு அப்பாவை ஞாபகப்படுத்தும். அவருடைய கேரக்டர் கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தில் நான் மட்டுமே புதுமுகம். என்னை மாதிரி ஒரு அறிமுக இயக்குநருக்கு திறமைவாய்ந்த நடிகர், நடிகைகள் பக்கபலமா அமைவது ஒரு வகையில் வரம் மாதிரி. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. சீனியர் நடிகர்கள் இருந்ததால் படப்பிடிப்பை குறித்த நாட்களுக்குள் முடிக்க முடிந்தது.”

“டெக்னீஷியன்ஸ்?”

“பால்பாண்டி ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். சினிமா அனுபவம் உள்ளவர். பெரிய படங்கள் பண்ணவில்லை என்றாலும் அவர் வேலை செய்த படங்களில் அவருடைய திறைமையைப் பார்த்து வியந்து போனேன். கேமராமேனாக ஒரு படத்துக்கு என்ன பங்களிப்பு வழங்க முடியுமோ அதைக் கொடுத்திருக்கிறார்.

நிர்மல் மியூசிக் பண்ணியிருக்கிறார். நிர்மல் அடிப்படையில் நடன இயக்குநர். நடனமும் இசையும் அவருக்கு இரண்டு கண்கள் மாதிரி. அவருடைய மியூசிக் ஆல்பங்களைக் கேட்டபோது இசை மீது அவருக்கு இருந்த காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் மியூசிக் பண்ணுவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார்.

எனக்கு அவர் மீது நம்பிக்கை இருந்ததால் நடனத்தோடு இசையமைக்கும் பொறுப்பையும் கொடுத்தேன். பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். அனைத்துப் பாடல்களும் அதிரிபுதிரியாக வந்துள்ளது.

என்னுடைய சினிமா கனவு இவ்வளவு சீக்கிரம் நிறைவேறியிருக்கிறது என்றால் குடும்ப ஆதரவுதான் காரணம். என்னுடைய அக்கா போன்ற நல்ல உள்ளங்கள் இல்லைனா நான் இயக்குநராகவோ நடிகராகவோ வந்திருக்கவே முடியாது. தேங்க்யூ சிஸ்டர்!”

- சுரேஷ்ராஜா