காதல்,காமம்,கவர்ச்சி!சில படங்கள் டைட்டில் மூலமே டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் சென்றடைவதுண்டு. அந்த வகையில் விரைவில் வெளிவரவுள்ள படம் ‘No.9, பஜனை கோயில் தெரு’.ஆந்திராவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘குண்டூர் டாக்கீஸ்’ படம்தான் தமிழில் ‘No.9, பஜனை கோயில் தெரு’ என்ற பெயரில் டப் செய்யப்பட்டிருக்கிறது.

ஹரி, கிரி இருவரும் நண்பர்கள். சில்லரைத் திருடர்களான இவர்கள் ஒரு நல்ல நாள் பார்த்து பெரிய அமெளண்ட்டை அமுக்க திட்டமிடுகிறார்கள். அப்போது அவர்கள் வாழ்க்கையில் மாபியா கும்பல் குறுக்கிடுகிறது. அவர்கள் இருவருக்கும் தெரியாமலேயே கடத்தல் கும்பலின் பொருள் அவர்களிடம் இருப்பதால் கடத்தல் கும்பல் அவர்களைச் சுற்றி வளைக்க, இதை அறிந்த போலீஸ் அந்த இருவரையும், கடத்தல் கும்பலையும் துரத்த, அதிலிருந்து ஹரியும் கிரியும் எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை.

காதல், காமம், கவர்ச்சி, திகில், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள ஜனரஞ்சகமான பொழுது போக்குப் படமாக இந்தப் படம் தயாராகி உள்ளது.கதையின் நாயகனாக சித்து நடிக்கிறார். பிரபல இந்தி நடிகர் மகேஷ் மஞ்ச்ரேக்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகிகளாக ராஷ்மி கௌதம், ஷ்ரத்தா தாஸ் நடித்துள்ளனர்.

‘சாரி, எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி’, ‘என் பெயர் பவித்ரா’ போன்ற படங்களை இயக்கிய வித்யாசாகர் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப்படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் பிரவீன் சத்ரு கதை, திரைக்கதை அமைத்து இயக்கி உள்ளார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர். இவர் ‘சந்தமாமா கதலு’ படத்துக்கு தேசிய விருது பெற்றவர்.

‘‘இது க்ரைம் காமெடி படம். இந்த மாதிரி கதை யுக்தி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். சித்து, மகேஷ் மஞ்ச்ரேக்கர் இருவருடைய நடிப்பும் பெரியளவில் பேசப்படும். சரண்  இசையமைத்துள்ளார். பாடல்கள், பின்னணி இசை இசையமைப்பாளரின் திறமையை வெளிப்படுத்தும்விதமாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ராம் இந்தப் படத்தின் ஆகச் சிறந்த பலம் என்று சொல்லலாம். கதையை எந்தவிதத்திலும் கெடுக்காதளவுக்கு மிகப் பிரமாதமாக ஒளிப்பதிவு செய்து படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். எதிர்பார்ப்புடன் வரும் ரசிகர்களை இந்தப் படம் ஏமாற்றாது’’ என்கிறார் இயக்குநர் பிரவீன் சத்ரு.

- ரா