இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்!



1925ல் வெளிவந்த மவுனப்படமான ‘சினிமா கி ராணி’ திரைப் படம், ஒரு சினிமா பெண் நட்சத்திரத்தின் வாழ்க்கையை சொன்ன கதை. சினிமாவே மக்களிடம் அவ்வளவாக அறிமுகமாகாத அந்த காலக்கட்டத்தில் ஒரு ஹீரோயினின் நிஜவாழ்க்கை எப்படியிருக்கும் என்கிற சித்தரிப்பை துணிச்சலாக படமெடுத்தார்கள். ஒரு நாயகியாக சினிமாவில் வெளிப்படும் பிம்பத்துக்கும், ஒரு பெண்ணாக அவர் வாழ்க்கையை அணுகுவதற்கும் இடையிலுமான அபத்தங்களை நகைச்சுவையோடு தோலுரித்துக் காட்டியது ‘சினிமா கி ராணி’.

சினிமா ராணியாக நடித்திருந்தவர் ஆங்கிலோ இந்திய நடிகையான ரூபி மேயர். 1907ல் புனேவில் பிறந்த ரூபி, டெலிபோன் அலுவலகத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.ஒருமுறை போன் செய்வதற்காக இவரது அலுவலகத்துக்கு சினிமாக்காரரான மோகன் பவானி வந்தார். பூசிய கன்னங்கள், பூனைவிழி களோடு அம்சமாக இருந்த ரூபியைப் பார்த்ததுமே, தான் எடுத்துக் கொண்டிருக்கும் படத்தின் ஹீரோயின் கிடைத்துவிட்டதாக ஆனந்தக் கூத்தாடினார்.

அந்தக் காலத்தில் பெண்கள் சினிமாவில் நடிப்பது என்பது குதிரைக் கொம்பு (இந்தியாவின் முதல் சினிமாவான ‘ராஜா ஹரிச்சந்திரா’வில் கூட அரிச்சந்திரனின் மனைவி தாராமதி வேடத்தில் ஆண் ஒருவர்தான் ஸ்திரீபார்ட்டாக நடித்தார் என்பதை நினைவில் கொள்ளவும்). வெள்ளைக்காரப் பெண்களுக்கும், ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கும்தான் சினிமாவில் நடிக்கக்கூடிய துணிச்சல் இருந்தது.

ரூபியின் பெயர் ரசிகர்களுக்கு அந்நியமாக இருக்கும் என்று நினைத்தவர்கள், ‘சுலோச்சனா’ என்று பக்காவான இந்தியப் பெயரை சூட்டினார்கள்.
கோஹினூர் ஃபிலிம் கம்பெனியின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘வீர் பாலா’ (1925) படத்தில்தான் முதன்முதலாக நடித்தார். அதுவரை திரையில் பெண் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்த ஆண்களை மோகிப்பதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு ஒரு வழியாக தீர்வு கிடைத்தது.

சுலோச்சனாவின் வசீகரம், இந்திய சினிமாவின் தலையெழுத்தையே மாற்றியது. அதுவரை சினிமாவில் பெண் பாத்திரம் என்றால் உடன்கட்டை ஏறுவது, சாகுந்தலையாக புலம்புவது மாதிரி வேடங்கள்தான். பெண்களை திரையில் சமகால பெண்களாக காட்டுவதற்கு படைப்பாளிகளுக்கும் சரி, ரசிப்பதற்கு ரசிகர்களுக்கும் சரி, தயக்கம் இருந்தது. இந்த மரபை உடைத்துக் காட்டிய முதல் இந்திய நடிகை சுலோச்சனா.

 ‘டெலிபோன் கேர்ள்’, ‘டைப்பிஸ்ட் கேர்ள்’, ‘வைல்ட் கேட் ஆஃப் பாம்பே’ என்று அடுத்தடுத்து ஹீரோயின் ஓரியண்டட் படங்களாக நடித்துக் குவித்தார். ஆணாதிக்க சினிமாத்துறையின் இரும்புச் சுவரில் முதல் ஓட்டையை இவர்தான் போட்டார். ‘வைல்ட் கேட் ஆஃப் பாம்பே’ படத்தில் எட்டு வேடங்களில் நடித்து (‘நவராத்திரி’ சிவாஜி, ‘தசாவதாரம்’ கமலுக்கெல்லாம் இவர்தான் முன்னோடி) பரபரப்பாக பேசப்பட்டார்.

மவுனப்பட யுகத்தின் மகத்தான நடிகனான தின்ஷா பில்லிமோரியாவோடு ஜோடி சேர்ந்து இவர் நடித்த காதல் படங்களான ‘மாதுரி’, ‘அனார்கலி’, ‘இந்திரா பி.ஏ’ மூன்று படங்களுமே ஹாட்ரிக் ஹிட் அடித்து பரபரப்பை ஏற்படுத்தின. ‘மாதுரி’ திரைப் படத்தில் சுலோச்சனாவின்
நடனத்தைக் காணவே ரசிகர்கள் திரும்பத் திரும்ப திரையரங்குகள் மீது போர் தொடுத்தார்கள். ‘அனார்கலி’யாக நடித்தபோது ‘சலீம்’ பில்லிமோரியாவோடு ஏற்பட்ட நெருக்கம் காதலாக வளர்ந்தது. 1930ல் ‘ஹமாரா ஹிந்துஸ்தான்’ படத்தில் நீண்ட முத்தக் காட்சியில் நடித்து பர
பரப்பை ஏற்படுத்தினார்.

மவுனப்பட மகாராணியான சுலோச்சனாவின் செல்வாக்கை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், அப்போதைய பம்பாய் மாகாண ஆளுநரை விட அதிக சம்பாதியத்தை சினிமாவில் நடித்து பெற்றுக் கொண்டிருந்தார்.மவுனப்படங்கள் பேச ஆரம்பித்தபோது சுலோச்சனாவின் புகழ் மங்க ஆரம்பித்தது. ஆங்கிலம் மட்டுமே அறிந்த ஆங்கிலோ இந்திய நடிகைகள் வரிசையாக கல்யாணம் கட்டிக்கொண்டு நடிப்பை விட்டுவிட்டு வாழ்க்கையில் செட்டில் ஆகத் தொடங்கினார்கள். கோஹினூர் ஃபிலிம் கம்பெனியோடு சுலோச்சனாவுக்கு பிரச்சினை.

தன் வாழ்வின் வீழ்ச்சியை கண் முன்னால் கண்டுகொண்டிருந்தவர், அவ் வளவு சுலபமாக தன்னை அதன் போக்கில் விட்டுக் கொடுக்கத் தயார் இல்லை.வெகுவிரைவாக ஹிந்தி கற்று, இயல்பாக அம்மொழியில் பேசவும் பாடவும் தொடங்கினார். ‘ரூபி பிக்ஸ்’ என்று சொந்த நிறுவனத்தை துவக்கி, தான் மவுனப்படங்களாக நடித்த சூப்பர்ஹிட் படங்களை மீண்டும் பேசும் படங்களாக ரீமேக்கி தன்னை நிலைநிறுத்தினார்.

1933ல் தன் பெயரையே படத்துக்கு சூட்டி, அவர் நடித்த முதல் பேசும் படமான ‘சுலோச்சனா’வில் வெற்றி மாலை சூடினார். ‘மாதுரி’, ‘இந்திரா எம்.ஏ’, ‘அனார்கலி’, ‘பாம்பே கி பில்லி’ என்று டாக்கி படங்களிலும் சூப்பர் ஸ்டாராக செகண்ட் இன்னிங்ஸை வெற்றி கரமாக ஆடினார். பில்லிமோரியாவே, முப்பதுகளின் சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்தார். குறிப்பாக 1933-39 வருடங்கள் இருவருக்கும் முக்கியமானவை. ஏனோ தெரியவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரியும் நிலை ஏற்பட்டது. அதோடு சேர்ந்து இருவரின் நட்சத்திர அந்தஸ்தும் மங்கி விட்டது.

அதன் பின்னர் கேரக்டர் ரோல்களில் நடிக்கத் தொடங்கினார் சுலோச்சனா. மவுனப்படமாகவும், பேசும்படமாகவும் அவருக்கு ப்ளாக்பஸ்டராக அமைந்த ‘அனார்கலி’, 1953ல் மீண்டும் படமாக்கப்பட்டபோதும் நடித்தார். ஆனால், இம்முறை சலீமுக்கு அம்மாவாக.

‘தில் அப்னா அவுர் ப்ரீத்தி பராய்’ (1960), ‘அம்ப்ராபாலி’ (1966), ‘ஜூலி’ (1975) ஆகிய படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்கவை. மவுனப் படங்களில் கேரியரை ஆரம்பித்தவர் பேசும் படம், வண்ணப் படம் வரை நடித்துக்கொண்டே இருந்தார். அவர் நடித்த கடைசிப் படம் ‘கட்டா மீத்தா’ (1978). 1973ஆம் ஆண்டு இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கி, அரசால் கவுரவிக்கப்பட்டார்.

அக்டோபர் 10, 1983ல் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார், வறுமை மற்றும் முதுமை காரணமாக நோய்வாய்ப்பட்டு, மும்பை ஃப்ளாட்டில் தனிமையில் இறந்தார்.

-யுவகிருஷ்ணா