நான் பிகினி போட்டாயாரு பார்ப்பாங்க? இந்துஜா ஏக்கம்!



‘மேயாத மான்’ படத்தில் ஹீரோவுக்கு தங்கை கேரக்டர்தான். ஆனால், சுடர்விழி என்கிற அந்த கதாபாத்திரத்தின் மூலம் ஓவர்நைட் ஸ்டார் ஆனவர் இந்துஜா ரவிச்சந்திரன். அடுத்தடுத்து ‘பில்லா பாண்டி’, ‘60 வயது மாநிறம்’, ‘மெர்க்குரி’, ‘பூமராங்’ என்று இந்துஜாவின் நடிப்பில் வரிசையாக படங்கள் வெளிவந்தன. இப்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆர்யாவுடன் ‘மகாமுனி’, ‘சூப்பர் டூப்பர்’ படங்களில் நடித்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த தமிழ்ப் பெண் இந்துஜா ரவிச்சந்திரன், சினிமாவில் நடிப்பதற்காகவே படிப்பை நிறுத்திவிட்டார். பல்வேறு போராட்டங்களைச் சந்தித்த பிறகே அவரால் வெள்ளித்திரையில் முகம் காட்ட முடிந்தது.

இந்துஜாவை சந்தித்தோம்.“திடீர்னு குண்டாயிட்டீங்க. இப்ப ஓரளவு உடம்பை குறைச்சிருக்கீங்க. ஆனாலும், உங்களை பிகினி டிரெஸ்சில் பார்க்க முடியலையே...?”“வயசுக்கு தகுந்த பேச்சா பேசறீங்க. இருந்தாலும் கேட்டுட்டீங்க. அதுக்கு பதில் சொல்ல வேண்டியது என் கடமை. இல்லைன்னா, இந்துஜா எப்ப பாரு உம்முன்னு முகத்தை வெச்சிருப்பாருன்னு எழுதுவீங்க. இப்ப என் உடல்வாகு எப்படி இருக்குன்னு நீங்களே பாருங்க. நான் பிகினி போட்டா யாரு பார்ப்பாங்க? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?”

“உடம்பை குறைச்சாத்தானே ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட முடியும்...?”

“ஆமா, அது தெரியும் எனக்கு. ஆனா, இப்ப எனக்கு இருக்கும் உடல்வாகை வெச்சுக்கிட்டு, ஒரு பாட்டுக்கு ஆடி இம்சை பண்ண மாட்டேன். ஒருவேளை அந்த மாதிரி வாய்ப்பு வந்து, அந்த சாங் எனக்கு பிடிச்சிருந்தா, அப்ப என் உடம்பை குறைக்க முக்கியத்துவம் தருவேன். கண்டிப்பா என் உடல் எடையை குறைச்சாகணும்.”

“உடல் எடையை குறைக்கணும்னா, அனுஷ்கா செய்த மாதிரி, வெளிநாட்டுக்கு போய் அறுவை சிகிச்சை பண்ணலாமே...?”

“ஹலோ... அனுஷ்கா என்ன பண்ணாருன்னு நான் கேட்கலை. உடம்பை குறைக்க வெளிநாடு போய் வருவது எல்லாம் எனக்கு சரிப்படாது. காரணம், என்கிட்ட பண வசதி கிடையாது. படத்தில் நான் நடிக்கிற கேரக்டருக்கு நியாயம் செய்தாகணும். அதுக்காக உடல் எடையை குறைக்கணும். ஸ்கிரீனில் ஸ்டாண்டர்டு ஆக்டிங்கை வெளிப்படுத்தணும். ஓரிரு மாசத்துல என் உடல் எடையை குறைச்சுக் காட்டி அசத்துவேன்.”

“உங்களை பார்த்தா, பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கீங்க. அதுவே சினிமாவில் பெரிய ரவுண்டு வர்றதுக்கு தடையா இருக்குன்னு சொல்லலாமா?”

“நீங்க தேவையில்லாம கற்பனை பண்றீங்க. அதெல்லாம் ஒண்ணும் கிடையாது. சினிமா முன்னாடி இருந்த மாதிரி கிடையாது. இப்ப எல்லாமே மாறிக்கிட்டு வருது. சவுத் இண்டியன் சினிமாவில் மட்டும்தான் ஆடியன்ஸ் ஒரு நடிகையை பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி பார்க்க ஆசைப்படறாங்க. மற்ற மொழிப் படங்களில் நடிப்பவர்களை பார்த்தா, நிறைய ஸ்டைல் பண்ணுவாங்க. ஆக்டிங், பாடிலாங்குவேஜ், காஸ்ட்யூம்ஸ், மேக்கப், ஹேர் ஸ்டைல்னு, எல்லா விஷயத்திலும் ரொம்ப மாறிட்டாங்க.”

“சினிமாக்காரர்கள் எல்லாருமே சோஷியல் மீடியாவில் ரொம்ப ஆக்ட்டிவா இருக்காங்க. நீங்க மட்டும் பட்டும் படாமலும் இருக்கீங்களே. ஏன், பயமா இருக்கா?”

“பயமெல்லாம் கிடையாது. சோஷியல் மீடியாவைப் பொறுத்தவரை, நான் ஒரு அன் ஃபிட். புதுசா எதுவும் தெரிஞ்சுக்க விரும்புறதில்லை.”
“தமிழில் அதிக படங்களில் உங்களை பார்க்க முடியலையே, என்ன காரணம்?”

“காரணம் எதுவும் இல்லை. நான்தான் கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறேன். ஏன்னா, ஒரேமாதிரி ரோலில் நடிச்சா எனக்கு மட்டுமில்லை, ஸ்கிரீனில் என்னை பார்க்கிற ஆடியன்சுக்கும் போரடிக்கும். அதனால், வித்தியாசமான கேரக்டர் பண்ண காத்திருந்தேன். இப்ப ஆர்யா ஜோடியா ‘மகாமுனி’ படத்தில் நடிக்கிறேன். ‘மேயாத மான்’ படத்துக்குப் பிறகு நான் நடிச்சு வெளியான சில படங்கள் சரியா ஓடலை. அதுகூட நான் பிசியாகாததற்கு ஒரு காரணம். இனிமே என்னைத் தேடி வர்ற எல்லா படங்களையும் ஒத்துக்காம, ரொம்ப செலக்ட்டிவா பண்ண முடிவு செய்திருக்கேன்.”

“ஒரு குழந்தைக்கு அம்மாவா ‘மகாமுனி’யில் நடிக்கிறீங்க. இதனால் உங்க ஹீரோயின் இமேஜ் பாதிக்காதா?”

“கண்டிப்பா பாதிக்காது. காரணம், படத்தில் நான் ஆர்யாவுக்கு மனைவி. அப்படின்னா, எங்களுக்கு ஒரு குழந்தை இருக்கத்தானே செய்யும்? பிறகு எப்படி நான் அம்மாவா நடிக்க மாட்டேன்னு சொல்ல முடியும்? படம் ரிலீசான பிறகு பாருங்க. நான் அம்மாவா நடிச்சது பிளஸ்சா மைனஸ்சான்னு தெரியும். ‘மௌனகுரு’ டைரக்டர் சாந்தகுமார் ரொம்ப துணிச்சலானவர். என் கேரக்டரை ரொம்ப சிறப்பா காட்டியிருக்காரு.

சினிமான்னா எனக்கு உயிர். நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா, இங்கே நிறைய ரூல்ஸ் வெச்சிருக்காங்க. ஒரு படத்தில் அம்மாவா நடிச்சா, அடுத்தடுத்த படத்திலும் அம்மாவாதான் நடிக்கணும்னு நினைக்கிறாங்க. அந்த இமேஜை ‘மகாமுனி’ படம் கண்டிப்பா உடைக்கும். அம்மாவா நடிக்க நான் பயப்பட மாட்டேன்.

டைரக்டர் மேல் வெச்சிருந்த அபாரமான நம்பிக்கைதான் இந்த ரோலில் நான் நடிக்க முக்கிய காரணம். ஸ்கிரிப்ட் மற்றும் புரொடக்‌ஷன் கம்பெனி மேல் வெச்சிருந்த நம்பிக்கையும் என்னை இந்த படத்தில் நடிக்க வெச்சிருக்கு.”“பொதுவா ஆர்யா, தன் படத்தில் நடிக்கிற நடிகைகளுக்கு தன் வீட்டிலிருந்து பிரியாணி சமைச்சு கொண்டு வருவாருன்னு சொல்வாங்க. அந்த மாதிரி உங்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்தாரா?”

“நீங்க சொன்ன மாதிரி அவர் பிரியாணி விருந்து கொடுத்து அசத்துவாருன்னு கேள்விப்பட்டிருக்கேன். ‘மகாமுனி’ ஷூட்டிங்கில் ஒருநாள் கூட அவரும் நானும் ஜாலியா சிரிச்சு பேசலை. காரணம், ஸ்கிரிப்ட். சாயிஷாவை கல்யாணம் பண்றதுக்கு முன்பும், கல்யாணம் பண்ண பிறகும் ஷூட்டிங்கில் கலந்துக்கிட்ட ஆர்யா, ஒருநாள் கூட எனக்கு பிரியாணி விருந்து தரலை. ஷூட்டிங் ஸ்பாட்டை பார்த்தா, எக்ஸாம் ஹால் மாதிரி இருக்கும்.

ஒவ்வொருத்தருக்கும் பக்கம் பக்கமா டயலாக் தருவாங்க. அதை படிச்சு மனப்பாடம் பண்ணி, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சுக்கிட்டு, கேமரா முன்னாடி நின்னு ரிகர்சல் பார்த்து, பிறகு நாங்க நடிச்ச காட்சிகளை ஷூட் பண்ணி, ஃபைனலா டைரக்டர் ஓ.கே சொல்றவரைக்கும் டென்ஷனில் தவிப்போம். இந்த நிலமையில், ஷூட்டிங்கில் பிரியாணியை சாவகாசமா சாப்பிட முடியும்னு நினைக்கிறீங்களா?”

“அட்லி டைரக்‌ஷனில், விஜய் கூட சேர்ந்து தடகள வீராங்கனை கேரக்டரில் நடிக்கிறீங்களாமே. அதுபற்றி சொல்லுங்க.”
“ஸாரி. அந்தப் படத்தில் நான் நடிக்கலை.”

“எல்லா கல்யாண வீட்டிலும் உங்க குத்துவிளக்கு சாங் ஃபேவரைட். அதுபற்றி என்ன நினைக்கிறீங்க?”

“என்னை இப்பவரைக்கும் ஆடியன்ஸ் கிட்ட ஞாபகப்படுத்திக்கிட்டு இருப்பது ‘மேயாத மான்’ படம்தான். அதில் நான் ஆடிய குத்துவிளக்கு சாங், எல்லா இடத்திலும் அதிரிபுதிரி ஆயிடுச்சு. ஒரு படத்தில் நடிச்சாலும், இந்த மாதிரி ஸ்ட்ராங்கான, பவர்ஃபுல் கேரக்டரில் நடிக்கணும். அதுக்குத்தான் இப்ப வெயிட் பண்றேன்.”

“சினிமாவில் நடிச்சுக்கிட்டே வெப் சீரிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்களே...?”

“அதில் என்ன தப்பு? சினிமா இப்ப வேற ஒரு பரிமாணத்துக்கு மாறிக்கிட்டு இருக்கு. குறும்படத்தில் நடிச்சேன். பிறகு யு டியூப் படத்தில் நடிச்சேன். அதுக்கு பிறகு சினிமாவுக்கு வந்தேன். இப்ப வெப் சீரிஸ் பண்றேன். ஒரு நடிகைன்னா எல்லா கேரக்டரும் பண்ணணும். அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்க மாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்ணக்கூடாது.

அரவிந்த்சாமி ஹீரோவா நடிக்கும் ‘கள்ளபார்ட்’ படத்துக்கு கேமராமேன் அரவிந்த் கிருஷ்ணா என்னை டெஸ்ட் எடுத்து பார்த்தார். ஆனா, அந்த கேரக்டருக்கு நான் பொருத்தமா இல்லைன்னு ஃபீல் பண்ணார். ஓ.கேன்னு சொல்லிட்டு என் வீட்டுக்கு வந்துட்டேன். ஆனா, திடீர்னு ஒருநாள் அவர் கிட்ட இருந்து போன் வந்தது. நான் டைரக்‌ஷன் பண்ணப்போற ‘திரவம்’ வெப் சீரியலில் நடிக்கிறீயான்னு கேட்டார். கதையும், அந்த வக்கீல் கேரக்டரும் பிடிச்சிருந்தது. அதனால் நடிச்சேன். வக்கீல் கோட் மாட்டிக்கிட்டு நடிச்சப்ப, வண்டுமுருகன்தான் ஞாபகத்துக்கு வந்தார். அதாவது, வடிவேலு வக்கீல் கோட் போட்டுக்கிட்டு வாதாடுவார் இல்லையா, அதுதான் ஞாபகத்துக்கு வந்தது.”

“வெப் சீரிஸில் நடிக்கிறதுக்கும், சினிமாவில் நடிக்கிறதுக்கும் என்ன வித்தியாசம்?”

“சினிமாவில் எந்த வசனமா இருந்தாலும், ரொம்ப ஷார்ட்டா பேசி நடிச்சா நல்லா இருக்கும். வெப் சீரியலில் ஒவ்வொரு டயலாக்கையும் இழுத்து பேச சொல்றாங்க. உடனே ஃபினிஷ் பண்ணக்கூடாது. மற்றபடி வேறெந்த வித்தியாசமும் தெரியலை.”

“சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினா மட்டும்தான் நடிப்பீங்களா? வில்லியா நடிக்கும் ஆசை உண்டா?”

“என்னை பார்த்தா மோசமான பொண்ணு மாதிரி தெரியுதா? கடைசிவரை ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன். வில்லியா நடிக்க மாட்டேன்.”
“உங்களை உடனே தொடர்பு கொள்ள முடியலை, அப்படி இப்படின்னு நிறைய தகவல்கள் வருது. ஏன் இப்படி மாறிட்டீங்க?”
“என்னை உடனே கான்டாக்ட் பண்ண முடியலைன்னு மத்தவங்க சொல்றது உண்மைதான்.

அது என் மிஸ்டேக். காரணம், நான் கொஞ்சம் பெர்சனல் பிராப்ளத்தில் இருந்தேன். இப்ப அந்த டிப்ரஷனில் இருந்து மீண்டு வந்துட்டேன். போன் நம்பரை மாத்திட்டேன். பழைய நம்பரும் இருக்கு. ஆனா, அதை நான் அட்டெண்ட் பண்றதில்லை. முதலில் என் ஹெல்த் பிராப்ளத்தை சரி பண்ணணும். கூடிய சீக்கிரம் பழைய கலகலப்பான இந்துஜாவை பார்க்கலாம்.”

- தேவராஜ்