யோகிபாபுவுக்கு உஷார் ஆகும் பெண்கள்!போகி இல்லாமல் பொங்கல் வராது. அதுபோல் யோகிபாபு இல்லாமல் எந்தப்படமும் வராது என்று சொல்லுமளவுக்கு யோகிபாபுவின் மார்க்கெட் டாப் கியரில் ஓடிக்கொண்டிருக்கிறது. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பது போல் யோகிபாபுவை பயன்படுத்தி ஏராளமான படங்கள் வெற்றிபெற்று வரும் நிலையில், யோகிபாபுவை முழுக்க முழுக்க கதையில் புகுத்தி படத்தையே வேறோர் காமெடி தளத்தில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த்ராஜன். படத்தின் பெயர் ‘கடலை போட ஒரு பொண்ணு வேணும்’. இவர் சமுத்திரக்கனியிடம் சினிமா பயின்றவர். படத்தைப் பற்றி இயக்குநர் ஆனந்த்ராஜனிடம் கேட்டோம்.

‘‘யோகிபாபுவின் இன்னொரு பரிணாமத்தை இந்தப்படம் காட்டும். வழக்கமாக படங்களில் காமெடியை தொழிலாகப் பண்ணும் யோகிபாபுவைப் பார்த்திருக்கிறோம். இந்தப்படத்தில் யோகிபாபு பண்ணும் தொழிலே பக்கா காமெடியாக இருக்கும். யோகிபாபு செய்யும் தொழிலுக்கு இடது வலதாக இருக்கும் அடியாட்கள் அனைவரும் பெண்கள். அந்தப் பெண்களை அவர் கடலை போட்டு உஷார் பண்ணுவார் என்பதுதான் படத்தின் ஹைலைட் காமெடி.

கடலை மன்னனாக பெண்களை உஷார் செய்து ரவுடித் தொழில் செய்யும் அவரிடம், கடலைபோட பெண் தேடும்  ஹீரோ அசார் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கும் இடங்களில் எல்லாம் சிரிப்பால் நம் வயிறு குலுங்குவது நிச்சயம். இது முழுக்க முழுக்க மக்களை ஜாலியாக என்டெர்டெயின் பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிற படம். நிச்சயம் இந்தப்படம்  கமர்சியலாக பெரிய வெற்றி பெறும். அதற்கான எல்லா சாத்தியங்களையும் படத்தில் கையாண்டிருக்கிறோம்.

படத்தில் யோகிபாபு  பெரிய பில்லர் என்றால், ஹீரோ அசார் பெரிய எனர்ஜி.  சின்னத்திரை மூலமாக மக்களை மகிழ்வித்த அசாருக்கு இந்தப் படம் பெரிய திரையில் நல்லதொரு விசிட்டிங் கார்டாக அமையும். இவர்களுடன் நடிக்கும் சாஜித், மன்சூர் அலிகான், செந்தில், சுவாமி நாதன், தீனா, மனோகர், காஜல் உட்பட படத்தில் நடிக்கும் அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இனியன் ஹரிஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீபின் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துல வர்ற யோகிபாபாவின் காமெடியை வைத்து இந்திய அளவில் மீம்ஸ் பண்ணுமளவுக்கு தரமா வந்திருக்கு’’ என்றார்.

- எஸ்