அஞ்சலி நல்லா கத்துக் கொடுத்தார்!‘ஏமாலி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சாம் ஜோன்ஸ் அந்தப் படத்தில் நன்றாக நடிக்கத் தெரிந்த இளம் நாயகன் என்று பெயர் எடுத்தார். தற்போது ‘லிசா3டி’ படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்துள்ளார். அஞ்சலியுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது...

‘‘லயோலா கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த போதே சினிமா ஆர்வம் என்னை படிக்க விடாமல் செய்தது. எப்போதும் சினிமா பற்றிய சிந்தனையுடனே கல்லூரிப் படிப்பை முடித்தேன். ‘ஏமாலி’  படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றேன்.

முதல் படத்திலேயே பல தோற்றங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இப்போது ‘லிசா’வில் பிரம்மானந்தத்துக்கு மகனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். அஞ்சலியை  ஜென்டில்வுமன் என்று சொல்லலாம். செட்ல அவர் இருந்தால் செட் கலகலப்பாக இருக்கும். அஞ்சலி என்னைவிட சீனியர். அவருடன் எப்படி இணைந்து நடிக்கப் போகிறோம் என்ற அழுத்தம் இருந்தது.

ஆனால் என் மன ஓட்டத்தை புரிந்தவராக, பெரிய நடிகை என்ற பந்தா இல்லாமல் சிம்பிளாக நடந்து கொண்டார். நடிப்பில் எனக்கு சீனியர் என்பதால் நிறைய சொல்லிக்கொடுத்தார். ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் எப்படி நடிக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழியில் வெளியாகியுள்ளது. இரண்டிலும் நானே குரல் கொடுத்துள்ளேன். 3டி ஹாரர் படம் என்பதால் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘தர்மபிரபு’வில் எமலோகத்தில் யோகி பாபுவும், பூலோகத்தில் நானும் கதாநாயகர்களாக வர்றோம். எனக்கு ஜோடியாக ஜனனி ஐயர் நடித்துள்ளார். இந்தப் படம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும்.

நான் சின்னப் பையனாக இருப்பதால் இளம் கதாநாயகன் வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன. அடுத்தது  இரண்டு முன்னணி இயக்குநர்களுடன்  நல்ல கதையம்சம் கொண்ட படத்தில்  நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்.

விஜய் சேதுபதி போல் அனைத்துவித கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும். சிவகார்த்திகேயன் போல் ரசிகர்களுக்கு நல்ல எண்டெர்டெய்னராகவும் விளங்கவேண்டும் என்பதே என் ஆசை’’ என்றார் சாம் ஜோன்ஸ்.

- எஸ்