இசைக்க மறுக்கும் குயில்!மின்னுவதெல்லாம் பொன்தான்-34

வள்ளியூர் வாத்தியார் வீட்டு பிள்ளை எஸ்.எஸ்.குமரனுக்கு சின்ன வயதிலிருந்தே இசை மீது அதீத ஆர்வம்.  அதுவும் சினிமாவுக்கு இசை அமைக்க வேண்டும் என்று. ஆனால் அதற்கான வழி தெரிய வேண்டுமே, பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தால்  சினிமாவுக்குள் சென்று விடலாம் என்று கருதி அதில் சேர்ந்தார். ஆனால் அங்கு இசைப் பாடம்  இல்லை. அதனால் ஒளிப்பதிவுத் துறையை தேர்வு செய்து படித்தார்.

என்றாலும் இசையை விடவில்லை. புதுப் புது மெட்டுகள் போடுவதும். அதற்கு பாடல் எழுதி  சேர்ப்பதுமாய் இருந்தார். அப்படி அவர் போட்ட சில மெட்டுகளை இயக்குனர் சசியிடம் போட்டுக்காட்ட அது சசிக்கு மிகவும் பிடித்துவிட ‘பூ’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படமும் ஹிட். பாடல்களும் ஹிட்.

அதிலும் ‘சூ..சூ.. மாரியையும்’, ‘மாமன் நீ எங்கிருக்கே’ பாடலையும் முணுமுணுக்காத வாய்கள் 2008ல் இல்லை. அடுத்து களவாணி படம். படமும் சூப்பர் ஹிட், பாடலும் டூப்பர் ஹிட்.  ‘ஒரு முறை இரு முறை’, ‘படபடவென’, ‘ஊரடங்கும் சாமத்திலே’ பாடல்களை இப்போது கேட்டாலும் மெய் மறக்க வைக்கும். அப்புறம் என்னாச்சு குமரனுக்கு?

அவர் படித்த ஒளிப்பதிவு அவரை இயக்குநராகத் தூண்டியது. ‘தேனீர் விடுதி’ என்ற படத்தை இயக்கினார், அவரே இசை அமைப்பாளராகவும் இருந்தார். படமும் தோல்வி. பாடல்களும் பெரிதாக பேசப்படவில்லை. அவர் மீண்டும் இசைக்கு திரும்பி இருக்கலாம். ஆனால், விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று மீண்டும் இயக்குநராகவே களம்  இறங்கினார். ‘கேரள நாட்டிளம் பெண்களு டனே’ என்ற காமெடிப் படத்தை இயக்கினார். கிட்டத்தட்ட தயாரிப்பாளரும் அவர்தான். அந்த படமும் பெரியதாக வெற்றி பெறவில்லை.

இப்போது அடுத்த படத்திற்கான முயற்சியில் இருக்கிறார்.இடையில் ‘நெல்லு’, ‘விருந்தாளி’ என சில படங்களுக்கு இசை அமைத்தும் பலனளிக்கவில்லை.  நல்ல இசைஞானம்  உள்ள எஸ்.எஸ்.குமரனால் ‘பூ’விலும், ‘களவாணி'யிலும் நிகழ்த்த முடிந்த இசை மாயாஜாலத்தை அதன் பிறகு நிகழ்த்த முடியாமலே போனதற்கு என்ன காரணம்?

இசையைத் தாண்டி இயக்கம், தயாரிப்பு, பணப் பிரச்சினைகள் என அவரது கவனம்  சிதறியதே காரணம் என்கிறார்கள். ‘பூ’, ‘களவாணி’யில் பிடித்த  கயிறை விடாமல்  கடுமையாக உழைத்து மேலே ஏறியிருந்தால்  இன்றைக்கு குறிப்பிடத்தகுந்த இசை அமைப்பாளராகி இருப்பார் என்கிறார்கள். எஸ்.எஸ்.குமரனுக்குள் இன்னும் அந்த இசை அமைப்பாளன் ஒளிந்து கொண்டிருக்கிறான். அவனை வெளியில்  எடுத்து நடமாடவிட வேண்டிய பொறுப்பு அவரிடமே  இருக்கிறது.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்