ஒரு வீடு, இருவர் மட்டும்.. பெருமழைக் காலம்!



சமீப காலங்களில் சிறந்த குணச்சித்திர நடிகையாக அதிகம் கவனம் ஈர்த்தவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். சிறந்த நடிகையாக மட்டுமில்லாமல், ‘ஆரோகணம்’, ‘அம்மணி’ போன்ற படங்கள் மூலம் இயக்குநராகவும் கவனம் ஈர்த்தவர். தற்போது ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை இயக்கியுள்ளார். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டோம்.

“இப்போ இயக்கி யிருக்கிற ‘ஹவுஸ் ஓனர்’ என்ன மாதிரியான படம்?”

“உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். எனக்குக் தெரிந்த காதலை, காதல் என்று நான் நினைக்கும் விஷயங்களை சொல்லியிருக்கிறேன். எங்கேயும் கருத்து சொல்லவில்லை. கருத்து சொல்வதற்காக நான் படம் பண்ணுவதில்லை. ஏற்கனவே இயக்கிய ‘ஆரோகணம்’, ‘அம்மணி’ படங்கள் எனக்கு சம்பந்தம் இல்லாத கதைக்களங்களாக இருந்தது. அப்போது நிறையப் பேர் உங்களுக்கு பரிச்சயமான கதைக்களத்திலிருந்து படங்கள் பண்ணலாமே என்று சொன்னார்கள். பொதுவாக என் படங்களில் கதை முரண் இருக்கும்.

ஆனால் இதுல முடிந்தளவுக்கு எளிமைப்படுத்தி காட்டியிருக்கிறேன். ஒரு விஷயத்தை என்னால் தெளிவாகச் சொல்ல முடியும். இது சோகக் கதை இல்லை.”“கதை?”

“இரண்டு பேர். ஒரு வீடு. மழை. இந்த மூன்று அம்சங்கள்தான் படம். ஒரே நாளில் கதை நடக்கிற மாதிரி திரைக்கதை அமைத்திருக்கிறேன். அளவான த்ரில்லர், அழகான காதலும் படத்துல இருக்கு. இரண்டே இரண்டு கேரக்டரை வைத்து காதலை சொல்லியுள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கும். கதையின் மைய கேரக்டரின் பெயர் ஹவுஸ் ஓனர் என்பதால் படத்துக்கும் அதையே தலைப்பாக தேர்வு செய்தோம்.

‘ஆரோகணம்’, ‘அம்மணி’ படங்களாட்டும்... இந்தப் படமாக இருக்கட்டும், நான் ரசித்த கேரக்டர்களைத் தான் இதுவரை காட்சிப்படுத்தியிருக்கிறேன். பொதுவாக  எனக்கு தெரியாத பின்னணியில் கதை சொல்வது பிடிக்கும். முதன் முறையாக எனக்குத் தெரிந்த, நான் வளர்ந்த பின்னணியிலிருந்து கதை பண்ணியிருக்கிறேன்.

படத்துல வர்ற பாலக்காடு தமிழ் ஸ்லாங் வித்தியாசமா இருக்கும். மலையாளம் கலந்த அந்த தமிழை முடிந்தவரை அப்படியே கொடுத்திருக்கிறேன். சினிமாவில் கல்ச்சுரல் பரிமாற்றம் முக்கியம். தெரியாத விஷயங்களை சொல்லணும். சினிமா அதை பண்ணணும். இந்த படத்தின் முதல் பத்து நிமிடம் பிரமிப்பாக இருக்கும். அதுவே படத்தின் மீதான முழு திருப்தியைக் கொடுக்கும்.”

“கிஷோர்?”

“வெற்றி மாறன் உட்பட ஏராளமான திறமைசாலிகளுடன் வேலை பார்த்தவர். கிஷோர் போன்ற நடிகர்களுடன் வேலை செய்வது ரொம்ப எளிது. கேரக்டர் பற்றியும் கேரக்டரின் பின்னணி பற்றியும் சொன்னால் போதும். அதை உள்வாங்கி அவர் வெளிப்படுத்தும் பெர்பாமன்ஸ் பிரமாதமாக இருக்கும். சமயங்களில் இயக்குநர் எதிர்பார்க்காத சாகசங்களை செய்து காண்பிப்பார். அப்படி இந்தப் படத்தில் பல இடங்களில் நான் எதிர்பார்க்காத விஷயங்களை மிக அழகாக வெளிப்படுத்தினார். நானாகட்டும், கிஷோராகட்டும், ஆக்டிங் பேக்ரவுண்ட் இல்லாததால் எங்களால் எளிதாக பண்ண முடிகிறது. என்னைப் பொறுத்தவரை நடிப்பு பயின்றவர்களை விட பயிலாதவர்களே உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.

அடுத்து அவருடைய எளிமை. இந்தப் படத்துக்காக தயாரிப்பாளர் ஓட்டல் வசதி செய்து கொடுத்தாலும் அதை தவிர்த்துவிட்டார். எங்கள் அலுவலகத்திலேயே தங்கி படப்பிடிப்புக்கு வந்தார். எனக்கு பெரிய ஆச்சர்யம். இப்போதுள்ள நடிகர்களில் எத்தனை பேர் இவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.”

“படத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?”

“நிறைய பேர் இருக்காங்க. ‘பசங்க’, ‘கோலிசோடா’ போன்ற படங்களில் முத்திரை பதித்த கிஷோர் முக்கிய வேடத்துல வர்றார். பாண்டிராஜ், விஜய் மில்டன் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தவர் என்பதால் சினிமாவை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். சின்ன வயது என்றாலும் டெடிகேஷனுடன் நடித்துள்ளார்.

நாயகி லவ்லின் சந்திரசேகர். விஜி சந்திரசேகரின் மகள். லவ்வின் என்ற பெயருக்கு ஏற்ப லவ்லியா பண்ணியிருக்கிறார். சிம்பிளாக சொல்வதாக இருந்தால் டஸ்கி பியூட்டி. கண், நடை, உடை, பாவங்களில் நேட்டிவிட்டி கரைபுரண்டு ஓடும்.

ஸ்கிரீன் டெஸ்டுக்கு அழைத்த போது இந்த கண்ணழகியைப் பார்த்ததுமே, இவர் தான் நாயகி என்று முடிவு பண்ணிவிட்டேன். என் டீம்ல இருந்தவங்க கூட, விஜி உங்க தோழி என்பதால் லவ்லினை செலக்ட் பண்ணிட்டீங்க என்றார்கள். என் தோழிக்காக அல்ல. கதைதான் லவ்லினை இந்தப் படத்தில் சேர்த்துக் கொண்டது. அவர் கண்ணை மூடி திறக்கும்போது கதவு திறந்து மூடுவது போல் இருக்கும். அமெரிக்காவில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் கடுமையான முயற்சி எடுத்து பாலக்காடு ஸ்லாங் பேசினார்.

இன்னொரு முக்கியமான ரோலில் ரஞ்சனி பண்ணியிருக்கிறார். நூறுக்கும் மேலான படங்களில் நடித்தாலும் இதில் அவருடைய நடிப்பு பேசப்படும் விதமாக இருக்கும். அவருடைய கேரக்டர் நம் அம்மாக்களை நகல் எடுத்த மாதிரி இருக்கும்.”
“படத்துலே வேறென்ன ஸ்பெஷல்?”

“இந்தப் படத்துக்காக ஒரு பெரிய வீடு செட் தேவைப்பட்டது. ஆனால் அந்த வீட்டை ப்ளாஸ்டர் ஆப் பாரீஸ், ப்ளைவுட் போன்ற மெட்டீரியலில் உருவாக்க முடியாத சூழல் இருந்தது. காரணம், படத்துல தண்ணி எல்லா ஷாட்லேயும் இருக்கும். தண்ணி இல்லாத ஷாட்டை படத்துல எங்கேயும் பார்க்க முடியாது. படத்துல எந்த இடத்திலும் உலர்ந்த தரையைப் பார்க்க முடியாது. ஒவ்வொரு முறை டேக் போகும்போதும் ‘ரெயின்’ என்ற குரல் ஒலிக்கும்.

தினமும் 12 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. அப்படி பத்து நாளில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தினோம். ஒரே நேரத்தில் 12 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்து படப்பிடிப்பு நடத்துவது சவாலான காரியம். கொஞ்சம் விரிசல் வீழ்ந்தாலும் தண்ணீர் சில கிலோ மீட்டர் தூரத்துக்கு பாய்ந்தோடும் அபாயம் இருந்தது.

பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்த நிஜ வீடு கட்டுவதுதான் சிறப்பான ஆலோசனையாக இருந்தது. அப்படி பூமிக்கடியில் ஆறடி ஆழத்தில் நிஜ வீடு கட்டினோம். ஷார்ட்டா சொல்வதாக இருந்தால் வாட்டர் டேங்ல வீடு கட்டினோம். படப்பிடிப்புக்கு அருகில் உள்ள ராட்சத கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து சேமித்து படப்பிடிப்பு நடத்தினோம். ஆனால் தண்ணீரை கையாள்வதில் கவனமாக இருந்தோம். படப்பிடிப்புக்காக பயன்படுத்திய தண்ணீரில் ஒரு துளியையும் வீணாக்காமல் மீண்டும் தோட்டத்துக்கே தண்ணீரைத் திருப்பி விட்டோம்.

என்னுடைய முந்தைய படமான ‘ஆரோகணம்’ படத்தை 36 லட்சத்தில் எடுத்தேன். ஆனால் இந்த படத்தோட வீடு செட்டுக்கு மட்டும் 50 லட்சம் செலவாகியது. வேறொரு தயாரிப்பாளர் என்றால் இதை சொல்லி புரிய வைப்பது சிரமம் என்பதால் என் கனவை நனவாக்கிக் காட்டினார் என் கணவர் டாக்டர் ராமகிருஷ்ணன்.”“டெக்னீஷியன்ஸ்?”

“ஜிப்ரான் மியூசிக் பண்ணியிருக்கிறார். உலகத் தரம் எனுமளவுக்கு அற்புதமாக பண்ணியிருக்கிறார். தபஸ் நாயக் சவுண்ட் என்ஜினிரியங் பண்ணியிருக்கிறார். சோவென பெய்யும் மழை சத்தத்தையும் சொட்டு சொட்டாக பெய்யும் மழைத் துளியையும் டால்பி அட்மாஸ்ல பிரமாதமா பதிவு பண்ணியிருக்கிறார். படம் முடிந்து வெளியே வரும் போது உங்கள் ஆடையை அனிச்சையாக பிழிந்து போடணும் போலத் தோன்றும். இந்தப் படத்தோட சவுண்ட் அப்படியொரு ஃபீல் கொடுக்கும்.  

கிருஷ்ணா சேகர் ஒளிப் பதிவு பண்ணியிருக்கிறார். சினிமாவுக்கு புதியவர் என்றாலும் சிறப்பாக பண்ணியிருக்கிறார். எடிட்டிங் பிரேம். ‘மகளிர் மட்டும்’, ‘குற்றம் கடிதல்’ படங்கள் பண்ணியவர். கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்வதற்கு உதவியாக இருந்தார். என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும். பெரும்பாலான நாட்களில் அவர்களுடைய கால்கள் தண்ணீரில்தான் இருந்தது. தேள், பாம்பு போன்ற பிராணிகளின் அச்சுறுத்தலைக் கடந்து வேலை செய்தார்கள்.

இந்தப் படம் மனித உறவுகளை பற்றி பேசுவதோடு, ஒரு அழகான காதல் கதையையும் உள்ளடக்கியது. ரொம்ப சிம்பிளான அதே சமயம் யதார்த்த சினிமாவாக உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

- சுரேஷ்ராஜா