தேவி 2பயமுறுத்தாத பேய்ப்படம்!

‘தேவி’ முதல் பாகத்தில் தமன்னாவை பேய் பிடிக்கும். அதை அவருக்கு தெரியாமல் சரி செய்வார் பிரபுதேவா.இரண்டாம் பாகமான ‘தேவி ப்ளஸ் 2’வில் தமன்னாவை மீண்டும் பேய் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக வீட்டுக்குள்ளேயே அடைகாக்கிறார் பிரபுதேவா. ஆனால் தமன்னா வெளியே போக வேண்டும் என்று துடிக்கிறார்.

பிரச்சனைக்கு தீர்வு காண சாமியாரிடம் ஆலோசனை கேட்கிறார் பிரபுதேவா. கடலால் சூழப்பட்ட இடத்தில் இருந்தால் பேய் வராது என்று சாமியார் சொன்னதால் மனைவியுடன் மொரீஷியஸ் செல்கிறார். அங்கு பிரபுதேவாவை ஒன்றுக்கு இரண்டு பேய் பிடிக்கிறது. அவற்றை பிரபுதேவாவுக்கே தெரியாமல் சரி செய்ய தமன்னா எடுக்கும் முயற்சிதான் படம்.

பிரபுதேவா அப்பாவி, ஸ்டைலீஷ், முரட்டுத்தனமானவர் ஆகிய மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார். மூன்று தோற்றங்களிலும் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காண்பித்து கவனம் ஈர்க்கிறார். ‘சொக்குற பெண்ணே’ என்ற  பாடலில் தன் நடன வித்தையை மொத்தமாக இறக்கி வைப்பதுடன் நந்திதா, டிம்பிள் ஹாயதி ஆகியோரையும் ஆட வைத்திருப்பது சிறப்பு.

தமன்னா தன் அழகால் அசோகா அல்வா போல் மனதை கொள்ளை அடிக்கிறார். நடிப்பிலும் குறையில்லை. ஹோம்லி கேர்ளாக வலம் வந்த நந்திதாவுக்கு இதில் நவ நாகரீக மங்கை வேடம். அவரும் வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டு தாராளம் காட்டியிருக்கிறார். கோவை சரளா சிரிக்க வைக்கும் வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி வரும் காட்சிகள் சிரிப்புக்கு கியாரண்டி. சோனுசூட், அஜ்மல் ஆகியோர் மிகையில்லாத நடிப்பை வழங்கி அப்ளாஸ் வாங்குகிறார்கள்.

பேய்க்கதைக்கு இசையமைப்பாளர் துணை அவசியம். சாம்.சி.எஸ்ஸின் இசை அதை சரியாகவே செய்துள்ளது. ‘சொக்குற பெண்ணே’ பாடல் சொக்க வைக்கிறது. பின்னணி இசையும் நன்று.அயனன்கா போஸ் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. மொரீஷியஸில் படமாக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு காட்சியும் அழகு.

இரண்டு பேய்கள், இரண்டு கதைகள் என்று ஒரே மாதிரியான காட்சிகள் திரும்பத் திரும்ப வருவது படத்தின் வீக் ஏரியா. பேய்ப்படம் என்றால் கொஞ்சமாவது பயமுறுத்த வேண்டும் இல்லையா? ‘தேவி பிளஸ்2’ ஒரு காட்சியில் கூட பயமுறுத்தவில்லை.