NGK



அரைவேக்காடு அரசியல்!

இயற்கை விவசாயி, செயற்கை அரசியல்வாதியாவதுதான் ‘என்.ஜி.கே’.விவசாயியாக அறிமுகமாகும்போதே அட போட வைக்கிறார் சூர்யா. அவரது கேரக்டரின் தன்மை மாறிக்கொண்டே போகும்போது அடடே என்று சொல்லத் தோன்றுகிறது. பன்முகத்தன்மை கொண்ட நடிப்பில் சூர்யா என்றுமே கிளாஸ்.

சாய்பல்லவியின் கேரக்டர் ஏதோ பேய்ப்படத்து ஹீரோயின் மாதிரி ஏன் அமானுஷ்யமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்று புரியவில்லை. அவர் அறிவாளியா, மக்கா என்பதைத் தெளிவாகச் சொல்லவில்லை. கணவர் சூர்யா மருத்துவமனையில் படுத்துக் கிடக்கையிலும் சக்களத்திச் சண்டை போடுகிறார். எகிற வேண்டிய நேரத்தில் பணிந்து போகிறார். மிகவும் குழப்பமான கேரக்டர் ஸ்கெட்ச்.

சாய்பல்லவிக்கு பரவாயில்லை. ரகுல்ப்ரீத் சிங்கை ஊறுகாய் ஆக்கிவிட்டார்கள். கதைக்கு எவ்விதத்தில் ரகுல் உதவுகிறார் என்பது புரியவில்லை. கால்ஷீட் வாங்கிவிட்டோமே என்பதற்காக அவரோடு சூர்யா ஒரு டூயட் பாடுகிறார், அவ்வளவுதான்.முதலமைச்சர் தேவராஜ், எம்.எல்.ஏ இளவரசு, எதிர்க்கட்சித் தலைவர் பொன்வண்ணன், அரசியல்வாதிகளாக வரும் ‘தலைவாசல்’ விஜய், பாலாசிங் எல்லோரும் அவரவர் பங்களிப்பை சரியாகவே தந்திருக்கிறார்கள். குறிப்பாக பாலாசிங் கலக்கி இருக்கிறார். சூர்யாவின் அம்மாவாக வரும் உமா பத்மநாபன் பேசிக்கொண்டே இருக்கிறார். ‘நிழல்கள்’ ரவிக்கு ஒட்டுமொத்தமாக ஐம்பது வார்த்தைகள்தான் வசனம்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமை. கபிலன் எழுதியுள்ள ‘தண்டல்காரன்’ பாடல் ஒன்ஸ்மோர் கேட்கலாம். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு பரவாயில்லை. அரசியல் குறித்த காட்சிகளுக்கு உரிய பரபரப்பு இருக்கிறது. ஆனால், இயற்கை விவசாயத்தை காட்டும் காட்சிகளில் பசுமை மிஸ்ஸிங்.

படத்தில் பல விஷயங்கள் புரியாத புதிர். சமகால அமைச்சரின் பாலியல் அத்துமீறல் காட்சி மட்டும் ரசிகர்களுக்கு புரிகிறது. அங்கு மட்டும் மொத்தமாக ரசிகர்கள் சிரிக்கிறார்கள். உலகம் மதிக்கும் தலைவர்களின் போட்டோவை காண்பித்து, அவர்களால்தான் அரசியல் சீரழிந்துவிட்டது என்பதாக ஒரு கருத்தாக்கத்தை மறைமுகமாக உருவாக்குவதெல்லாம் அதிகப் பிரசங்கித்தனம்.

அரசியல் கதையை படமாக்க நினைத்திருக்கும் செல்வராகவன், வெறும் விமர்சனத்தைத்தான் முன்வைக்கிறாரே தவிர, அவரிடம் தீர்வு இல்லை. சாக்கடை என்று செல்வராகவன் நினைக்கும் அரசியலில் குதிக்கும் என்.ஜி.கே, எப்படி அதை புனிதமாக்கப் போகிறார் என்பதற்கு தெளிவில்லை.
ஓரளவுக்கு சுவாரஸ்யமாக முதல் பாதியை அமைத்த இயக்குநர், இரண்டாவது பாதியில் என்ன செய்வதென்றே தெரியாமல் அலைபாய்ந்திருக்கிறார்.