ஒரு கல் ஒரு கண்ணாடி மதுமிதாடைட்டில்ஸ் டாக்-110

வாழ்க்கையில் என்னை இந்தளவுக்கு உயர்த்தியது ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம்தான். அந்த டைட்டிலிலேயே கட்டுரை எழுதுவது மனசுக்கு மகிழ்ச்சி. வாழ்க்கை கண்ணாடி மாதிரி. அதன் மீது கீறலோ, கல்லோ விழாதபடி பார்த்துக்கணும். இல்லையென்றால் மனவருத்தத்தை தவிர்க்க முடியாது.நான் கொஞ்சம் நேர்மையை எதிர்பார்ப்பவள்.

அதனாலேயோ என்னவோ எனக்கு நட்பு வட்டாரம் என்பது இல்லாமலே போய்விட்டது. எனக்கு இருக்கும் ஒரே நட்பு நளினி அம்மா மட்டுமே. நட்பாகப் பழகுகிறார்கள் என்று அவரிடம் அதிக உரிமையும் எடுத்துக் கொள்ளமாட்டேன்.

ஒரு டி.வி.சீரியலில் நடிக்கும் போதுதான் நளினி அம்மாவின் அறிமுகம் கிடைத்தது. முதல் நாள் சந்திப்பிலேயே என்னை மிகவும் கரிசனத்துடன் விசாரித்தார். நாளடைவில் ஓர் ஆசானாக என் இதயத்தில் இடம் பெற்றுவிட்டார். அவர்தான் சினிமா துறையில் எப்படி பழக வேண்டும், எப்படி பேச வேண்டும், உடைகள் எப்படி இருக்க வேண்டும், பிறரை எப்படி மதிக்க வேண்டும் என்று எல்லாப் பண்பு களையும் வளர்த்துக் கொள்ள உதவி செய்தார்.

இப்போது மதுமிதா என்றால் எல்லாருக்கும் தெரியுது. நளினி அம்மா என் வாழ்க்கையில் இடம் பெற்றிருக்கவில்லை என்றால் என்னால் இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியாது. ஒரு வேளை அவரை நான் என் வாழ்க்கையில் சந்திக்காமலேயே இருந்திருந்தால் நடிப்பு தவிர்த்து, வேறெதுவும் விவரம் தெரியாதவளாகவே இருந்திருப்பேன்.

சினிமாவுக்கு வந்த காலக்கட்டத்திலிருந்து சமீபத்தில் நடைபெற்ற என்னுடைய திருமணம் வரை எல்லாமே நளினி அம்மாவின் வழிகாட்டுதல்படியே நடந்தது. எங்கள் இருவருக்குமிடையே அம்மாவுக்கும் மகளுக்குமான பந்தம், பாசம் இருந்தது. ஒரு தாய் தன் மகளுக்கு என்ன செய்யணுமோ அந்தளவுக்கு நளினி அம்மா என் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்துள்ளார்.

வாழ்க்கையில் சில சமயம் நான் துவண்டு போகும்போது என்னையும் அறியாமல் டயல் செய்யும் தொலைபேசி எண் நளினி அம்மாவுடையதாகத்தான் இருக்கும். சோர்ந்து போகும் வேளையில் அவர் அளிக்கும் உற்சாகமான வார்த்தைகள் என் மனதுக்கு மருந்தாக அமைந்திருக்கிறது.

இந்தக் கலியுகத்தில் மனிதாபி மானம், பொதுநலம் என்பது சுத்தமாக மறைந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு சின்ன விபத்து என்றால் எல்லோரும் ஓடிச்சென்று காப்பாற்றுவதைப் பார்க்கலாம். இப்போது அந்த நிகழ்வை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடுவதோடு இல்லாமல் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க என்ற ஈவு இரக்கமற்ற செயல்களைத்தான் பார்க்க முடிகிறது. உதவி செய்ய எல்லோரும் பயப்படுகிறார்கள். அந்த மாதிரி சமூகத்தில் நளினி அம்மாவின் நட்பு எனக்கு பெரிதாக இருந்தது.

சில சமயம் எல்லோரும் வித்தியாசமாக இருக்கிறார்கள்; நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன் என்று நினைப்பேன். அதுபோன்ற சமயங்களில் ‘எல்லாரும் ஒரே மாதிரி இருக்காங்க. நீதான் வித்தியாசமா இருக்கிறாய்’ என்று பதில் வந்தது. என்னுடைய சின்ன வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டேன்.

அண்ணன் தம்பி யாரும் இல்லை. நாங்க மொத்தம் நான்கு பெண்கள். அம்மாதான் எங்களுக்கு தைரியத்தை ஊட்டி வளர்த்தார்கள்.
வாழ்க்கை எனும் கண்ணாடியில் கல் அடி படாமல் இருக்கணும்னா நம்மை நாம் பிஸியாக வைத்துக் கொண்டாலே போதும். வீட்டு வேலையோ வெளி வேலையோ ஏதோ ஒரு வேலையில் பிஸியாக இருந்தால் பிற விஷயங்களில் கவனம் செலுத்தி பேசக் கூடாத விஷயங்களைப் பேசி கல் அடி வாங்குவதைத் தவிர்த்துவிடலாம்.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் நடிக்கும் போது எனக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு அவதிப்பட்டேன். அப்போது ஒரு சீரியலும் நடித்துக் கொண்டிருந்தேன். குறைந்த ரத்த அழுத்தம் இருந்தது. பகலில் சீரியல், இரவில் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும். மருத்துவரிடம் முதல் உதவி பெற்ற பிறகு ‘என்ன நடந்தாலும் நான் படப்பிடிப்பு போக வேண்டும்’ என்று சொல்லிவிட்டேன்.

ஏன்னா, படக்குழுவுக்கு என்னால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதுதான் என் நோக்கம். பிரச்சனைக்கு நாங்கள் காரணம் அல்ல என்ற கடிதத்தை வாங்கிக் கொண்டுதான் மருத்துவர் டிஸ்சார்ஜ் கொடுத்தார். திட்டமிட்டபடி இரண்டு ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டேன். அந்த சமயத்தில் சுந்தர்.சி சார் பெரிதும் பாராட்டினார்.

கல்யாண டைமில் படப்பிடிப்புக்கு அழைத்தபோது அடுத்த நாளே போகத் தயாராக இருந்தேன். அந்தளவுக்கு நான் வேலை பைத்தியம். மனோரமா ஆச்சியைவிட ஒரு படி அதிகமாக உயரம் தொடணும் என்ற லட்சியத்துடன் உழைத்து வருகிறேன்.  எந்தத் துறையாக இருந்தாலும் நம் மீது கல் அடி விழாதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பிறரை கேள்வி கேட்க முடியும்.

எனக்கு இப்போது திருமணம் நடந்துள்ளது. நான் என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கணவர், மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற
உறவுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகள் இருக்கிறது. இல்லத்தரசியாக என் கடமையைச் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.
அதை நான் செய்யாமல் என் வீட்டுக்காரரை கேள்வி கேட்டால் என்னைப் பார்த்து ‘நீ என்ன யோக்கியமா’ என்ற கேள்வி வருவதைத் தவிர்க்க முடியாது. எக்காரணத்தைக் கொண்டும் கல் அடி விழாதபடிக்கு நேர நிர்வாகம், நடிப்பு, குடும்ப பொறுப்புகள் என்று எல்லா விஷயத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்று முன்பை விட அதிக முனைப்புடன் உழைத்து வருகிறேன்.

நளினி அம்மா எனக்கு செய்த இன்னொரு நல்ல காரியத்தைப் பற்றியும் சொல்ல வேண்டும். பத்தடி நிலமாக இருந்தாலும் அது சொந்தமாக இருக்கணும் என்று விரும்பாதவர்கள் யாரும் இல்லை. அப்படி எனக்கும் ஆசை இருந்தது. நான் பண விஷயத்தில் தாம் தூம்னு செலவு செய்வேன். அதற்கு அணை போட்டது நளினி அம்மா. பணத்தை சேமிக்க கற்றுக் கொள் என்று சேமிப்பைப் பற்றி சொன்னார். நான் இவ்வளவுக்கும் அவர் ரிலேஷன் இல்லை.

இந்த உலகத்தில் கவரிங் நகை கொடுப்பதாக இருந்தாலும் யோசிப்பாங்க. அறிமுகமே இல்லாத ஒரு மார்வாடி எனக்கு சவரன் சவரனாக தவணையில் தங்கம் கொடுத்தார். அந்த மார்வாடியை நளினி அம்மாதான் அறிமுகம் செய்து வைத்தார்.

ஒரு நாள் நளினி அம்மா என்னை அழைத்து நீ சொந்தமா வீடு வாங்க முயற்சி செய். சிறிது சிறிதாக தங்கம் சேர்த்து வை என்று சொன்னதோடு தனக்குத் தெரிந்த மார்வாடியை அறிமுகப்படுத்தினார். அதன்படி மாதாமாதம் தவணை முறையில் நகை வாங்கினேன். ஆறேழு வருட சேமிப்புக்குப் பிறகு அந்த நகையை விற்று ஒரு வீடு வாங்கினேன். நளினி அம்மாவின் நம்பிக்கை வீணாகதபடிக்கு குறிப்பிட்ட தேதியில் பணம் செலுத்தி என்னுடைய நற்பெயரையும் தக்க வைத்து வருகிறேன். மார்வாடி... ‘நல்ல கஸ்டமரைக் கொடுத்தீங்க’ என்று நளினி அம்மாவிடம் சொல்லி மகிழ்ச்சியடைந்தாரம்.
என்னுடைய திருமண வாழ்க்கை ஆரம்பித்தபோது நளினி அம்மா சொன்ன விஷயம்... நீ உண்மை, நேர்மையை எதிர்பார்க்கக்கூடியவள். அதை எல்லாரிடமும் எதிர்பார்க்காதே. எல்லாத்தையும் சினிமாத்தனமா யோசிக்க வேண்டாம். நீ சமைத்தால் புருஷன் ருசித்துச் சாப்பிடணும் என்று நினைக்காதே. உன் அழகை வர்ணிக்கணும் என்று நினைக்காதே.

அதையெல்லாத்தையும் கனவாக நினைத்துக் கொள். கனவில் நடந்தது நிஜத்தில் நடக்கும் என்று நினைத்தால் கல் அடிதான் விழும். புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே நான் சொன்ன புத்திமதிகளை ஏற்று எல்லா சூழ்நிலைகளையும் சமாளிக்க கற்றுக் கொள். விட்டு கொடுத்துப் போ. வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காணலாம் என்றார். அதன்படிதான் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.

ஒரு சில வீட்டுக்கு போகும் போது காப்பி கிடைக்கும் என்று நினைத்து செல்லும் போது பூஸ்ட் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம். தண்ணியே தராத வீட்டில் பூஸ்ட் எதிர்பார்க்கும் போது ஏமாற்றம்தான் மிஞ்சும். வாழ்க்கையில் எதையும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்க்காமல் கிடைக்கும் ஒரு விஷயமே எல்லையற்ற சந்தோஷத்தைத் தரும்.

எதிர்பார்ப்பு இல்லாத வாழ்க்கை ஏமாற்றத்தைத் தவிர்ப்பதோடு, அதாவது கல் அடியிலிருந்து தப்பிக்க உதவுவதோடு  இல்லாமல் வாழ்க்கையை அமைதியாக வழி நடத்தவும் உதவியாக இருக்கும். எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்கும் நல்லது செய்யணும். எல்லாருக்கும் நல்லதே நடக்கணும். இதுதான் என்னுடைய பிரார்த்தனை.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)