சரித்திர நாயகன் ஆனந்தன்!



மின்னுவதெல்லாம் பொன்தான்-27

சினிமாவில் சண்டைக் கலைஞர்களாக இருப்பவர்களில் பலர் ஹீரோவாக நடிக்கும் கனவில் சினிமாவுக்கு வந்தவர்கள். அவர்களுக்குள்ளும் அந்த ஹீரோ கனவு மறைந்திருக்கும் . ஆனால் சண்டைக் கலைஞர்கள் ஹீரோக்களாவது மிகவும் அபூர்வம்.
இப்போதே இப்படி என்றால் கருப்பு வெள்ளை காலத்தில் சினிமா இரும்புக் கோட்டையாக இருந்தபோது அதை நினைத்துப் பார்க்கவே  முடியாது. அப்படியொரு காலகட்டத்தில் சண்டைக் கலைஞராக இருந்து ஹீரோவானவர் சி.எல்.ஆனந்தன். பிற்காலத்தில் விஜயபுரி வீரன் என்றே அழைக்கப்பட்டார். அந்த அளவிற்கு அவரது முதல் படம் அமைந்தது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் முக்கியமானவர் சி.எல்.ஆனந்தன். நாடகங்களில் வரும் மல்யுத்த சண்டைக் காட்சிகள், வாள்சண்டைக் காட்சிகளில் நடித்து வந்தவர் பின்னர் சினிமாவுக்கு வந்தார்.  திரைப்படங்களில்  சண்டைக் கலைஞராகவும், நடனக் கலைஞராகவும் இருந்தார். பலர் சண்டையிடும் காட்சியில் ஒருவராக நடித்தார். குரூப் நடனங்களில்  ஒருவராக ஆடினார். ஆனால்  அவருக்குள் ஹீரோவாக வேண்டும் என்கிற கனவு இருந்துகொண்டே இருந்தது. அது ‘விஜயபுரி வீரன்’ படத்தில் நிறைவேறியது.

அப்போது பிரபலமாக இருந்த  இயக்குனர்  திருலோகசந்தர் எழுதியிருந்த கதைதான் ‘விஜயபுரி வீரன்’. இதனை சிட்டாடல் நிறுவனம் படமாகத் தயாரித்தது. ஜோசப் தளியத் இயக்குவதாக  முடிவானது.

சிறிய பட்ஜெட்டில்  முற்றிலும் புதியவர்களைக் கொண்டு இந்தப் படத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நடிகர் நடிகைள் தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் நாடக நடிகர்கள், சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடிப்பவர்கள், சண்டைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.  அவர்களில் ஒருவராகக் கலந்து கொண்டார் ஆனந்தன்.

இதில் நடிப்பவர்களுக்கு  கத்திச் சண்டை வாள்சண்டை நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும்  என்பதால் அது தொடர்பான தேர்வும் நடந்தது. இதில் ஆனந்தன் வெற்றி பெற்று ஹீரோவானார்.

அவருக்கு ஜோடியாக டி.கே.எஸ்  நாடகங்களில் நடித்து வந்த ஹேமலதா அறிமுகமானார்.  புதுமுகங்கள் நடித்திருந்தாலும் படத்தில் ஆனந்தன் போட்ட கத்திச் சண்டையும், வாள் சண்டையும் மக்களால்  ரசிக்கப்பட்டது. ஆனந்தனை விஜயபுரி வீரனாகவே பார்த்தனர். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் 1960ல் வெளிவந்தது.

முதல் படம் வெற்றி பெற்றாலும் ஆனந்தனுக்கு அடுத்த படம் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், எம்.ஜி.ஆர் என்பார்கள். தன்னை விட சிறப்பாக சண்டைபோடுகிறார், ஸ்டைல் பண்ணுகிறார் என்பதை மனதில்  கொண்டு ஆனந்தனை கட்டுக்குள் வைத்திருக்க எம்.ஜி.ஆர் முயற்சித்தார் என்று கூறப்படுவதுண்டு. என்றாலும் 1962ல் வெளிவந்த வீரத்திருமகன் படமும் ஆனந்தனுக்கு நல்ல புகழைக் கொடுத்தது. இதில்  குமாரி சச்சு அவர் ஜோடியாக நடித்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு ஆனந்தனுக்கு அமைந்த படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. கொங்குநாட்டுத் தங்கம், யானை வளர்த்த வானம்பாடி, நீயா நானா படங்களில் நடித்தார். அதன்பிறகு எம்.ஜி.ஆர் படங்களில் சண்டைக் காட்சிகள் தொடர்புடைய கேரக்டர்களில் நடித்தார். ஆனந்தன் தான் நடித்த படங்களில் ஈடுபாட்டுடன் நடிப்பார்.

‘காட்டுமல்லி’ என்ற படத்தில் அவர் புலியுடன் சண்டைபோடும் காட்சி இப்போதும் பிரபலம். ‘நானும் மனிதன்தான்’ என்ற படத்தை சொந்தமாகத் தயாரித்து அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் படம் தோல்வி அடைந்து, ஆனந்தனுக்கு பெரும் பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியது. 1989ம் ஆண்டு காலமானார்.

எம்.ஜி.ஆர், ரஞ்சனுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் திறமை காட்டியவர். சண்டைக் காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கக் கூடியவர், சரித்திரப் படங்களுக்கேற்ற முகத்தோற்றம் கொண்டவர். சமூகப் படங்களில் நடிப்புத் திறமையைக் காட்டியவர்.

ஆனாலும் சினிமாவில் கிடைத்த வெற்றியை ஆனந்தனால்  தக்க வைக்க முடியவில்லை. வாள் சண்டையில் எதிரிகளை ஜெயித்தவரால்  சினிமா  சூழ்ச்சிகளை எதிர்கொள்ள முடியாமல்  போனது.  அதனால் நல்ல கலைஞர் ஒரு சில படங்களுக்குள்ளேயே முடங்கிப்போனார்.

(மின்னுவோம்)

●பைம்பொழில் மீரான்