பாபிசிம்ஹா செய்தது நியாயமா?சமீபத்தில் வெளிவந்த ‘அக்னிதேவி’ படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று அதன் நாயகன் பாபி சிம்ஹாவும், படத்தை ரிலீஸ் செய்யமுடியாதபடிக்கு பாபி சிம்ஹா வஞ்சித்துவிட்டதாக இயக்குநர் ஜே.பி.ஆரும் பரஸ்பரம் புகார் வாசித்தார்கள். நடந்தது என்ன என்பதை குறித்து இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ஜே.பி.ஆரிடம் கேட்டோம்.

‘‘இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவை கமிட் பண்ணும் போது முழுக்கதையை கொடுத்து படிக்க சொன்னேன். நான், வசனகர்த்தா கருந்தேள் ராஜேஷ், எழுத்தாளர் ராஜேஷ்குமார் மூவரும் சேர்ந்துதான் கதை பண்ணினோம். நல்லா கமர்ஷியலா பெருசா பண்ணணும்னு பாபி கேட்டுக்கிட்டாரு. அதனாலே மதுபாலா மேடம், எம்.எஸ்.பாஸ்கர் என்று நடிகர், நடிகைகளை கமிட் பண்ணி படப்பிடிப்பை ஆரம்பித்தேன்.

 இப்படத்தை நானும் நண்பர் சாம் சூர்யாவும் சேர்ந்துதான் இயக்கினோம். பூஜை டைமில் நாங்கள் இரண்டு இயக்குநர்கள் என்று பாபிக்கு தெரியும். ஆனால் அதுபற்றி தனக்குத் தெரியாது என்றார். கடைசிக்கட்ட படப்பிடிப்பில் மதுபாலா போர்ஷனில் மாற்றம் பண்ணச் சொன்னார்.

பாபிசிம்ஹா ஆரம்பத்தில் ஒத்துழைப்பு கொடுத்ததோடு சரி. திடீர்னு அவர் தலையீடு அதிகமாகியது. கடைசி ஷெட்யூல் நடக்கும்போது கதையில் இன்வால்வ் பண்ண ஆரம்பித்துவிட்டார். அவருடைய நடவடிக்கை படத்தின் போக்கையே மாற்றிவிட்டது. படத்துக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக முடிந்தளவுக்கு பொறுமையாக இருந்தேன். ஒருகட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

பொதுவா ஒரு படத்தை முடித்த பிறகுதான் ஹீரோவுக்கு படத்தை போட்டுக் காண்பிப்பார்கள். இவர் ஒவ்வொரு ஷெட்யூல் முடிந்ததும் எடிட் பண்ணும் போதே படத்தைக் காண்பிக்க வேண்டும் என்று கேட்டார். அவருடைய கோரிக்கையால் என்னுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்டது. சில சமயம் உடன் நடிக்கும் சக நடிகர்களுக்கு இயக்குநர் போல் கட்டளை கொடுக்க ஆரம்பித்துவிடுவார். செட்லே இருந்தவர்களே, ஒன்ணுக்கு ரெண்டா இயக்குநர்கள் இருக்கும் போது இவருக்கு ஏன் இந்த வேலை என்று நினைத்தது உண்டு.

தொண்ணூறு சதவீத படப்பிடிப்பு முடிந்தபோது, என்னுடைய பெர்பாமன்ஸ் குறைவாக இருக்கிறது. மதுபாலா மேடத்தை வரச் சொல்லுங்க. மறுபடியும் ஷூட் பண்ணலாம் என்றார். மதுபாலா மேடம் அவங்க போர்ஷனை முடித்துவிட்டு அமெரிக்கா போய்விட்டார். பிரச்சனை அங்குதான் ஆரம்பித்தது. பலமுறை அவரிடம் சமாதானம் பேசினோம். இறுதியாக மூன்று நிபந்தனை விதித்தார்.

பைனல் எடிட் லாக் நான்தான் வைப்பேன். நான் சொல்கிற மாதிரி படப்பிடிப்பு நடத்த வேண்டும். தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னதுக்கு மன்னிப்பு கேட்கணும் என்றார். அதுமட்டுமில்ல, பழைய அக்ரிமெண்டை கிழித்துப் போட்டுவிட்டு புது அக்ரிமெண்ட் போடச்சொல்லி கையெழுத்து கேட்டார். படத்துக்கு நான் தயாரிப்பாளராக இருந்ததால் அவருடைய கோரிக்கையை ஏற்க முடியாது என்றேன்.

அவரும் ‘நான் நடிக்க மாட்டேன். முடிந்தால் கோர்ட்ல சந்திப்போம். அதுவரை என் போர்ஷனை  யூஸ் பண்ணக்கூடாது’ என்றார். அப்போது நான், ‘கொடுத்த சம்பளத்தையும் படப்பிடிப்புக்கு செலவழித்த பணத்தையும் கொடுத்தால் நீங்கள் சொல்கிற மாதிரி செய்கிறேன்’ என்றேன். ‘பணம் தர முடியாது. அதுக்குதான் நான் நடித்திருக்கிறேன்’ என்றார். என்னுடைய பணத்துக்கு ஈடாக நீங்கள் நடித்ததை வைத்து படத்தை முடித்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் கோர்ட்டுக்கு போய்விட்டார்.

நீதிமன்றத்தில் தடை வாங்கியதாக மீடியாவிடம் தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் ‘ஸ்டேடஸ் வித் கோ’ என்ற ஆர்டர் கொடுத்திருந்தது. அதாவது, படம் என்ன கண்டிஷன்ல இருக்கிறதோ அதை தொடர வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பின் சாராம்சம். ஆனால் அவர் வேறுவிதமாக சித்தரித்தார். ஒரு தயாரிப்பாளருக்கு பட முடிவு குறித்து எல்லா சுதந்திரமும் இருக்கும்.

படத்தில் சில காட்சிகள் டூப் எடுக்கப்பட்டது உண்மை. அந்த சமயத்தில் அவர் மொட்டை அடித்துவிட்டு வேறு படப்பிடிப்புக்கு போய்விட்டார். சினிமாவில் சண்டைக்காட்சிக்கு டூப் பயன்படுத்துவது வாடிக்கையானது. ஆனால் என் மீது ஆள் மாறாட்டம் கேஸ் கொடுத்துள்ளார்.  அவர் எத்தனை நாள் படப்பிடிப்புக்கு வந்தார் என்ற ஆதாரம் என்னிடம் உள்ளது.

மொத்தத்தில் எல்லாருடைய உழைப்பையும் பிசினஸையும் கெடுத்துவிட்டார்.சினிமா எனக்கு பேஷன் என்பதைவிட சினிமாதான் எனக்கு எல்லாமே. சொந்த ஊர் கோயமுத்தூர். எனக்கு சினிமாவில் எந்த பின்னணியும் இல்லை. எளிமையான குடும்பம். என் ஜினியரிங் முடித்துள்ளேன். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னுடைய தூரத்து உறவினர். சாரிடம் ‘நையபுடை’, ‘டிராபிக் ராமசாமி’ போன்ற படங்களில் வேலை செய்துள்ளேன்.

என்னை நம்பி பணம் கொடுத்த பைனான்சியர்களுக்கு திருப்பிக் கொடுத்துவிட்டேன். தனிப்பட்ட விதத்தில் நான் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. எழுத்தாளர் ராஜேஷ் குமார் சார்தான் என்னுடைய காட் பாதர். என்னுடைய அடுத்த படத்துக்கும் அவர்தான் கதாசிரியர்’’ என்று முடித்துக் கொண்டார்.

‘அக்னிதேவி’ படத்தின் நாயகன் பாபி சிம்ஹாவிடம் அவர் தரப்பு நியாயத்தை அறிய தொடர்புகொண்டோம். ‘பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வெளியாகும் வரை பேசுவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்’ என்று பதில் வந்தது.

- எஸ்

இயக்குநர் குமுறல்!